80-களில் தமிழ், மலையாளத்தில் பிரபலமான நடிகையாக இருந்தவர் மாதுரி. ரஜினியின் மனிதன் படத்தில் அவரது தங்கையாக வருவார் (ரஜினியின் சொந்த தங்கை அல்ல). ரகுவரன் மாதுரியை பாலியல் பலாத்காரம் செய்ய, ரகுவரனுடன் சண்டையிட்டு அவருக்கு மாதுரியை திருமணம் செய்து வைப்பார். ரஜினியின் சிவா படத்திலும் மாதுரி நடித்திருந்தார்.
ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், அர்ஜுன், கார்த்திக், ராமராஜன், மோகன், பாண்டியன் என அன்றைய முக்கிய நடிகர்கள் அனைவருடனும் மாதுரி நடித்துள்ளார். விசுவின் சம்சாரம் அது மின்சாரம், பெண்மணி அவள் கண்மணி படங்கள் மாதுரிக்கு பெயர் வாங்கித் தந்தவை. சிறந்த குணச்சித்திர நடிகையான மாதுரி முதலில் நாயகியாக நடித்தப் படத்தையும், அதன் கதையையும் கேட்டால் யாரும் ஆச்சரியப்படுவார்கள்.
1984-ல் மலையாளத்தின் பிரபல இயக்குனர் ராஜசேனன் இயக்கிய பாவம் குரூரன் படத்தில் மாதுரி அறிமுகமானார். அதற்கு முன் 1953 இல் மலையாளத்தில் வெளியான லோகநீதி படத்திலும், 1973 இல் வெளியான உதயம் படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்ததாக கூறப்படுகிறது. 1984 இல் அவர் பாவம் குரூரனில் நாயகியாக நடித்த போது டீன்ஏஜ் பெண்ணாகவே இருந்தார். அதனால் அவரது குழந்தை நட்சத்திரப் படங்கள் குறித்த தகவலின் உண்மைத்தன்மை தெரியவில்லை.
1985-ல் தமிழில் வெளியான அலை ஓசை படத்தில் மாதுரி நடித்தார். அதனைத் தொடர்ந்து பல படங்கள் தமிழில் அவருக்கு கிடைத்தன. முக்கியமாக விஜயகாந்துடன் அவர் நடித்த அன்னை என் தெய்வம் படம் அவரது கிளாமருக்காக பெயர் வாங்கித் தந்தது. தமிழில் தொடர்ச்சியாக நடித்து வந்த போதிலும், அர்த்த ராத்திரி போன்ற மலையாளப் படங்களில் கவர்ச்சியான வேடங்களில் மாதுரி நடித்துக் கொண்டிருந்தார்.
1995-க்குப் பிறகு மாதுரி குறித்த தகவல்கள் யாருக்கும் தெரியாமல் ஆனது. சினிமாவை விட்டு அவர் விலகி இருந்தார் அல்லது சினிமா அவரை விலக்கி வைத்திருந்தது என்று இரண்டு விதமாகவும் எடுத்துக் கொள்ளலாம். 2002-ல் பெண்களை வைத்து விபச்சாரம் செய்ததாக மாதுரி கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் குறித்த எந்தத் தகவலும் இல்லை.
80-களின் ஆரம்பத்தில் நாயகியாக கோலோச்சியவர் பிறகு குணச்சித்திர நடிகையாக புகழ்பெற்று, விபச்சார வழக்கினால் காணாமல் அடிக்கப்பட்டார். மலையாளத்தில் கமலுடன் நடித்த பிரபல நடிகை லலிதாஸ்ரீயின் சகோதரி மாதுரி. சினிமா உலகம் குறித்து நன்கு தெரிந்திருந்தும் அதனை சரியாக கையாளத் தெரியாமல் வாழ்வில் சரிவை சந்தித்தார் மாதுரி.
அவருடன் ஆரம்பகால மலையாளப் படங்களில் நடித்த டிஜி ரவி, பீமன் ரகு போன்றவர்கள் நல்ல பெயருடன் இன்றும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். தொலைந்து போனவர் மாதுரி மட்டுமே. சினிமா என்ற பகட்டான உலகில் எப்போதும் நமக்கான மழை பொழிவதில்லை. அது பொழியும் போது புத்திசாலித்தனமாக கையாளத் தவறினால் என்னாகும் என்பதற்கு மாதுரி ஓர் உதாரணம்.