சூர்யா நடிப்பில் கடைசியாக திரையரங்குகளில் வெளியான எதற்கும் துணிந்தவன் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என கூறப்படுகிறது. தற்போது சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகும் பீரியட் படத்தில் சூர்யா நடித்துவருகிறார். ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக தீஷா பதானி நடிக்கிறார். மாயாவி, ஆறு, சிங்கம், சிங்கம் 2 ஆகிய படங்களைத் தொடர்ந்து 5 முறையாக சூர்யா - இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்தில் இணையவிருக்கின்றனர். இந்தப் படம் பத்து மொழிகளில் தயாராகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் கூட இன்னும் வெளியாகாத நிலையில் ரூ.500 கோடி அளவுக்கு படத்தின் விற்பனை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மும்பையில் ஷார்ட்ஸ், டீசர்ட்டுடன் சூர்யா இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அப்போது அவருடன் வந்த அவரது மகள் தியா மற்றும் மகன் தேவ் ஆகியோரையும் புகைப்படங்கலைஞர்கள் போட்டோ எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து என்னுடன் என் பசங்களும் இருக்காங்க.. அவர்களை போட்டோ எடுக்காதீங்க ப்ளீஸ் என கோரிக்கை வைத்திருக்கிறார்.