1992 யை முன்னிட்டு அக்டோபர் 25 வெளியான தேவர் மகன் பம்பர் ஹிட்டாகிறது. அதையடுத்து கமல் நடிப்பில் வெளிவந்தது, தேவர் மகனுக்கு முற்றிலும் மாறுபட்ட மகாநதி. 1994 ஜனவரி 14 பொங்கலுக்கு மகாநதி வெளியாகி ஓடிக் கொண்டிருக்க, பிப்ரவரி 25 ஆம் தேதி மகளிர் மட்டும் ரிலீஸ். தேவர் மகனில் மாயத்தேவராக மிரட்டிய நாசர் மகளிர் மட்டும் படத்தில் நாயகன். பெண் வீக்னஸ் கொண்ட காமெடி கதாபாத்திரம்.
தேவர் மகனில் அப்பாவி பெண் பஞ்சவர்ணமாக வந்த ரேவதி மகளிர் மட்டும் படத்தில் சத்யா என்ற அநியாயத்தை எதிர்க்கும் கம்ப்யூட்டர் டிஸைனிங் தெரிந்த மாடர்ன் யுவதி. கதை, கதாபாத்திரம் என அனைத்தும் அப்படியே தலைகீழ். இதுபோல் துணிச்சலான மாற்றங்களை வைத்து கமலைப் போல் ஒருசிலரே படமெடுத்திருக்கிறார்கள். 1980 இல் ஹாலிவுட்டில் வெளியான 9 டூ 5 படத்தின் பாதிப்பில் கமல் ஒரு கதை எழுதி கிரேஸி மோகனிடம் தந்து, அதற்கு திரைக்கதை, வசனம் எழுதச் சொல்கிறார். ஒரு முழுப்படத்துக்கான விஷயம் அதில் இல்லை. எப்படியாவது தேற்ற வேண்டும். கதை இதுதான். எக்ஸ்போர்ட் கம்பெனின் மேனேஜர் பாண்டியன் பெண்கள் விஷயத்தில் வீக். வேலைக்கு வரும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் ஆள். படிப்பிலும், குணத்திலும், பொருளாதாரத்தில் வேறுபட்ட மூன்று பெண்கள் பாண்டியனின் கொட்டத்தை அடக்குவது கதை.
நாசர் பாண்டியன், கம்ப்யூட்டர் டிஸைனிங் தெரிந்த, புதிதாக வேலைக்குச் சேர்ந்த இளம் பெண் சத்யாவாக ரேவதி. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பிராமணப் பெண் ஜானகியாக ஊர்வசி. குப்பத்தைச் சேர்ந்த கம்பெனியை கூட்டிப் பெருக்கும் பாப்பம்மாவாக ரோகிணி. மூவருமே நாசரின் பெண் பித்து தொந்தரவால் பாதிக்கப்பட்டவர்கள். ஒருமுறை ஊர்வசி எலி மருந்து கலந்த காபியை தவறுதலாக நாசருக்கு தர, அவர் மயக்கமாகி விடுகிறார். ஊர்வசி, ரேவதி, ரோகிணி மூவருமாக நாசரை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். ஆனால், நாசர் மயக்கமானதற்கு காரணம் வேறு. அவர் மயக்கம் தெளிந்து வீட்டிற்குச் செல்ல, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட தீவிரவாதியைப் பற்றிய பேச்சை ஒட்டுக்கேட்கும் இந்த மூவர் கூட்டணி, செத்தது நாசர் என்று தவறாக புரிந்து, அந்த பாடியை டிஸ்போஸ் செய்ய எடுத்துச் செல்வார்கள். பிறகுதான் அது வேறு பாடி என்பது தெரியும்.
ஊர்வசி எலி மருந்து கலந்த விஷயத்தை அறிந்து கொள்ளும் நாசர், மூன்று பேரையும் கெஸ்ட் ஹவுஸுக்கு வந்து தனது ஆசைக்கு இணங்கும்படி சொல்வார். இல்லையெனில் மூவரையும் போலீஸில் பிடித்துக் கொடுப்பதாக மிரட்ட, மூவரும் கெஸ்ட் ஹவுஸுக்கு வந்து, நாசரை கட்டிப் போட்டு, கம்பெனியில் ரேவதி தலைமையில் நிறைய மாற்றங்கள் செய்வார்கள். இந்த நேரம் கம்பெனி எம்டி சென்னை வருவதாக தகவல்வர, நாசர் இவர்களின் பாதுகாப்பிலிருந்து தப்பிக்க, இறுதியில் என்னானது என்பது கிளைமாக்ஸ்.
பணியிடத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் பிரச்சனைகளை நகைச்சுவையாக சொன்ன மகளிர் மட்டும் படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. படத்தில் ஹீரோயிசம் இல்லை, மூன்று பெண்கள்தான் பிரதான கதாபாத்திரம், படம் எங்கே ஓடப்போகிறது என்று யாரும் சீண்டவில்லை. கடைசியில் படத்தை தயாரித்த கமலின் ராஜ் கமல் ஃபிலிம்ஸே படத்தை வெளியிட்டது. படம் அனைத்து சென்டர்களிலும் ஹிட்டடித்து சென்னையில் 175 நாள்கள் ஓடி வெள்ளி விழா கண்டது.
இதில் தனித்தமிழில் பேசும் சூப்பர்வைசர் தமிழவன் கதாபாத்திரத்துக்கு பாரதிராஜா, வைரமுத்து என பலர் பரிசீலிக்கப்பட்டு கடைசியில் தாணு நடித்தார். அவர் நடித்த ஒரே படம் இதுதான். சத்யா கதாபாத்திரத்தில் ரேவதியை அணுகியதும் உடனே ஒப்புக் கொண்டார். ஜானகி கதாபாத்திரத்தில் ஊர்வசியை நடிக்க வைத்தது கமலின் முடிவு. இவர்கள் இருவரையும் ஒப்பந்தம் செய்த பின் பாப்பம்மா கதாபாத்திரத்துக்கு பலரை அணுகியும் யாரும் ஒத்துக்கொள்ளவில்லை. ஊர்வசியின் டாமினேஷனில் நாம் காணாமல் போய்விடுவோம் என்ற பயம். கடைசியில் ரோகிணி மறுப்பு சொல்லாமல் கதாபாத்திரத்தை ஏற்று, சென்னைத் தமிழில் தூள் கிளப்பினார்.
பி.சி.ஸ்ரீராம் மணிரத்னத்தின் திருடா திருடா படத்தில் பிஸியாக இருந்ததால் அவரது உதவி ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு என்ற திருவை மகளிர் மட்டும் படத்தில் கமல் பயன்படுத்திக் கொண்டார். திருவின் முதல் படம் இது. பிறகு ஹேராம் உள்பட அட்டகாசமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். மகளிர் மட்டும் படத்தில் திருவிடம் உதவி ஒளிப்பதிவாளராக இருந்தவர்தான் அசுரன், ஆடுகளம் படங்களின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். படத்தின் கதை போதாது என்ற நிலையில், தீவிரவாதியின் சடலத்தை புகுத்தி காட்சிகளை இழுத்தவர் கிரேஸி மோகன். இறந்த தீவிரவாதியாக நாகேஷ் அட்டகாசம் செய்தார். அந்த வேடத்தில் இம்ப்ரஸான கமல், மகளிர் மட்டும் லேடீஸ் ஒன்லி என்று இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட போது அதில் நாகேஷ் நடித்த வேடத்தை செய்தார். அதாவது பிணமாக நடித்தார். ஆனால், அப்படம் திரைக்கு வரவில்லை.
இரட்டை அர்த்த வசனமோ விரசமான காட்சிகளோ இல்லாமல் நாட்டின் முக்கியமான பிரச்சனையை நகைச்சுவையுடன் சொன்னவிதத்தில் மகளிர் மட்டும் ஒரு முன்னோடிப் படம். இதையே சீரியசாக சொல்லியிருந்தால் இந்தளவு மக்கள் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகம். படம் மலையாளம், தெலுங்கில் டப் செய்யப்பட்டு அங்கும் வரவேற்பை பெற்றது. இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்றானது.
1994 பிபரவரி 25 வெளியான மகளிர் மட்டும் இன்று 29 வது வருட நிறைவை கொண்டாடுகிறது.