எங்கம்மா சபதம், அன்னக்கிளி, கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், புதுமைப் பெண், இதயகோவில், உதயகீதம், சின்னக்கவுணடர், அலைபாயுதே உள்பட ஏராளமான படங்களின் கதையை எழுதியவர் ஆர்.செல்வராஜ். அகல் விளக்கு, பொண்ணு ஊருக்கு புதுசு உள்பட பல படங்களை இயக்கியும் உள்ளார். 1979-ல் அவர் எழுதி இயக்கிய திரைப்படம், பொண்ணு ஊருக்கு புதுசு.
ஆர்.செல்வராஜின் கதைகள் தமிழகத்தின் ஒரு குறிப்பட்ட பகுதியில் வாழ்ந்த கிராமத்து மக்களின் வாழ்வை அணுகி சொன்னவை. கிராமத்து மனிதர்கள் வெள்ளந்திகள், சூதுவாது அறியாவதர்கள் என்ற பொதுவான பார்வையை மறுபரிசீலனை செய்ய வைப்பவை. இந்த காலத்தில்கூட நவீனம் என்று ஏற்றுக் கொள்ள முடியாத பல்வேறு பழக்க வழக்கங்களை முன் வைப்பவை. பொண்ணு ஊருக்கு புதுசு திரைப்படத்திலும் இந்த அத்தனை குணாம்சங்களையும் காணலாம்.
பண்ணைபுரம் ஓர் வித்தியாசமான கிராமம். அதன் மொத்த மக்கள் 999. பல வருடங்களாக அந்த மக்கள் தொகையே நீடிக்கிறது. ஊருக்குள் யாராவது வந்தால், இல்லை குழந்தை பிறந்தால் ஒருவர் இறந்து போவார், மீண்டும் மக்கள் தொகை 999 க்கு வந்துவிடும். இதனால் அந்த கிராமத்துப் பெண்கள் கர்ப்பமானால் வெளியூருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். யாராவது இறந்தால் மீண்டும் அவர்கள் ஊருக்குள் வரலாம். அந்த கிராமத்துக்கு குடும்ப கட்டுப்பாடு அதிகாரி ஒருவரை அரசு அனுப்பி வைக்கிறது. அரசு ஊழியரை வரக்கூடாது என்று தடுத்தால் அரசு பக்கமிருந்து பல இடர்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், வருகிற அதிகாரிக்குப் பதில் ஊரில் உள்ள ஒருவரை ஊருக்கு வெளியே இரவு நேரம் தங்கிக் கொள்ள செய்வது என முடிவெடுத்து, ஊருக்கு இளைத்த பிச்சைமுத்தை அதற்கு தேர்வு செய்கிறார்கள். இரவானால் அவன் ஊருக்கு வெளியே உள்ள கோட்டையில் சென்று படுத்துவிட வேண்டும். இரண்டு தினங்களுக்குள் வருகிறது அதிகாரியை துரத்திவிட்டு அவனை மறுபடியும் ஊருக்குள் சேர்த்துக் கொள்வார்கள்.
ஆனால், ஊருக்கு வருகிற பெண் அதிகாரி ருக்மணி துணிச்சலாக எதிர்ப்பை மீறி ஊரிலேயே தங்கிவிடுகிறாள். தனக்காக பிச்சைமுத்து ஊருக்கு வெளியே தங்கியிருப்பதை அறிந்து அவன் மீது அன்பு கொள்கிறாள். அதுவே காதலாகி அவனை திருமணம் செய்து கொள்கிறாள். அதே ஊரில் வசிக்கும் பஞ்சவர்ணம் ஊரின் தையல்காரனை காதலிக்கிறாள். தையல் எந்திரத்துடன் ஊர் ஊராகச் சென்று துணிகள் தைத்து தருகிறவன். இருவரும் திருமணம் செய்து கொள்ள நினைக்கையில், பஞ்சவர்ணம் மீது மோகம் கொண்ட அவ்வூர் பண்ணையார் மயில்வாகனம், தையல்காரன் மீது பொய் பழி சுமத்தி சிறைக்கு அனுப்பிவிடுகிறான். அவனை மீட்க வேண்டுமென்றால் தனது ஆசை நாயகியாக இருக்க வேண்டும் என பஞ்சவர்ணத்தை மிரட்டுகிறான். வேறு வழியில்லாமல் அவது ஆசைக்கு இணங்கும் பஞ்சவர்ணம் அவனது வம்சத்தையே அழிப்பதாக சபதம் செய்கிறாள்.
இதனிடையில் மயில்வாகனத்தின் மகன் கண்ணாயிரத்தை பஞ்சவர்ணம் தனது வலையில் வீழுத்த முயற்சி செய்கிறாள். தகப்பனுக்கும், மகனுக்கும் இடையில் பகையை ஏற்படுத்தி அவர்களை அழிக்கப் பார்க்கிறாள். தாய், மகன் உறவை மீறாதே என்ற ருக்மணியின் அறிவுரை அவளுக்கு எரிச்சலை கொடுக்கிறது. ருக்மணி கர்ப்பமாக இருக்கையில், அந்த கர்ப்பத்துக்கு காரணம் கண்ணாயிரம் என கதைகட்டி விடுகிறாள். இது பிச்சைமுத்துவை கோபம் கொள்ளச் செய்கிறது. மனைவியிடம் சென்று கேட்கிறான். கோபமாகும் அவள் ,தனது கருவை கலைத்துவிட்டு, எப்போது நீ என்னை நம்புகிறாயோ, அப்போதுதான் உனக்கு குழந்தை பெற்றுத் தருவேன் என்கிறாள்.
இது அறியாத பிச்சைமுத்து, கண்ணாயிரம் ருக்மணியை சந்திக்கச் செல்வதாக நினைத்து அவனை பின் தொடர்கிறான். சவுக்குத்தோப்பில் பஞ்சவர்ணம் கண்ணாயிரத்திடம் ஆசை வார்த்தைகள் கூறுகிறாள். அவன் அம்மா என்று அழைக்க, அவனை அறைந்து, நான் உன்னை பெத்தவளா, என்னை அம்மான்னு கூப்பிடற என்று ஆவேசமாக கேட்க, அவன் அங்கிருந்து ஓடுகிறான். அவனை துரத்திவரும் பஞ்சவர்ணத்தை ருக்மணி என நினைத்து தலையை ஒரே வெட்டால் துண்டிக்கிறான் பிச்சைமுத்து. தலையுடன் ஊருக்குள் வருகிறவன் எதிரே ருக்மணியை பார்த்த பிறகே, தனது கையில் இருப்பது பஞ்சவர்ணத்தின் தலை என்பதை அறிந்து கொள்கிறான். காவலர்கள் அவனை கைது செய்து சிறையில் அடைக்க, இப்போது மீண்டும் அவ்வூரின் மக்கள் தொகை 999 ஆகிறது.
கிராமத்தில் நிலவும் பகை, காமம், ஏமாற்று அனைத்தையும் பொண்ணு ஊருக்கு புதுசு படத்தில் இயல்பாக காட்டியிருப்பார் இயக்குனர். இதில் வீட்டுத்திண்ணையில் ஆள்களை கூட்டிவைத்து சீட்டு விளையாடும் கதாபாத்திரம் ஒன்றையும் வைத்திருப்பார். அவனது மனைவி பெயர் பிடாரி. சீட்டு விளையாட்டு மும்முரமாக நடக்கையில், பிடாரி என்றழைத்து அவள் கணவன் ஏதாவது வேலை சொல்வான். பிடாரி வருகையில் சீட்டு விளையாடிக் கொண்டிருப்பவர்களின் கவனம் சிதறும். அதனைப் பயன்படுத்தி பிடாரியின் கணவன் பித்தலாட்டம் செய்து வெற்றி பெற்றுவிடுவான். அந்த சூதாடி வேடத்தில் விஜயன் நடித்திருந்தார்.
பிச்சைமுத்து வேடத்தில் சுதாகரும், ருக்மணி வேடத்தில் சரிதாவும், பஞ்சவர்ணம் வேடத்தில் எஸ்.விஜயலட்சுமியும் நடித்திருந்தனர். சிற்றன்னை முறையில் இருந்து கொண்டு மயில்வாகனத்தின் மகனையே படுக்கைக்கு அழைக்கும் வில்லங்கமான கதாபாத்திரம் படம் பார்த்தவர்கள் மத்தியில் அன்று ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. தன்னை அம்மா என்று அழைத்தவனை அறைந்து, அவனை அடைய துரத்திக் கொண்டு ஓடும் காட்சியை கிளைமாக்சாக்கியிருந்தார் இயக்குனர். செல்வராஜ் எழுதிய வெற்றிப் படங்களின் கதைகளைப் போல சுவாரஸியமும், முடிச்சுகளும், உணர்ச்சியான தருணங்களும் கொண்டது பொண்ணு ஊருக்கு புதுசு. பாரதிராஜா போன்ற ஒரு இயக்குனர் படமாக்கியிருந்தால் இதனை அடுத்தத்தளத்துக்கு கொண்டு சென்றிருக்க வாய்ப்புள்ளது. இளையராஜா இசையில் சோலைக்குயிலே பாடலும், ஓரம் போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது பாடலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இதில் ஓரம் போ பாடல் ஈவ்டீஸிங் பாடல் என வானொலிகள் ஒளிபரப்பவில்லை.
பஞ்சவர்ணத்திடம், சிற்றன்னையான நீ இப்படி நடந்து கொள்வது தர்மம் அல்ல என்று ருக்மணி சொல்லும் போது, பஞ்ச பாண்டவர் காலத்தில் அஞ்சு பேருக்கு ஒருத்தின்னு சொன்ன தர்மம்தான் இப்போ ஒருத்தனுக்கு ஒருத்தின்னு சொல்லுது என்று அவளது அறிவுரையை புறந்தள்ளிவிட்டுச் செல்வாள். இதுபோன்ற வசனங்களும், ருக்மணி, பஞ்சவர்ணம் போன்ற கதாபாத்திரங்களும் இப்போது அருகிவிட்டன. கயமையே உருவான மயில்வாகனன் போன்றவர்கள் தண்டிக்கப்படாமல், சூழ்நிலையால் தடம்மாறிப்போன ருக்மணியும், அப்பாவியான பிச்சைமுத்துவும் தண்டிக்கப்படுவது முரண். யதார்த்த வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது என்பதை சொல்வதற்காகவும் இதுபோன்ற முடிவை கதாசிரியர் வைத்திருக்கலாம்.