எம்ஜிஆர் - ஜானகி, ஜெமினி கணேசன் - சாவித்ரி, ஏவிஎம் ராஜன் - புஷ்பலதா என ஏராளமான நட்சத்திர தம்பதிகள் திரைப்படங்களில் காதலன் - காதலியாகவும், கணவன் - மனைவியாகவும் நடித்திருக்கிறார்கள். ஆனால், இவர்களில் யாரும் அண்ணன் - தங்கையாக நடித்ததில்லை. அதிலும், திருமணம் செய்து கொண்டபின் அண்ணன் - தங்கையாக நடித்த ஒரே நட்சத்திர தம்பதி, எஸ்எஸ்.ஆர், விஜயகுமாரி ஜோடியாகத்தான் இருக்கும்.
இந்த நிகழ்வு நடந்தது 1963 இல். தயாரிப்பாளரும், இயகநருமான ஏ.கே.வேலன் கைதியின் காதலி என்ற படத்தை எழுதி, இயக்கி, தயாரித்தார். வேலன் தீவிர திமுக அனுதாபி. இந்தப் படமே அண்ணா மேடையில் பேசிக் கொண்டிருப்பதை கூட்டத்தில் அமர்ந்து நாயகன் பார்ப்பது போல்தான் ஆரம்பிக்கும். பின்னணியில், உதய சூரியன் வளமோடு வந்தான் என்ற பாடல் ஒலிக்கும்.
நாயகனின் அம்மா மரணப் படுக்கையில் இருப்பார். வைத்தியம் செய்ய நாயகனிடம் பணம் இருக்காது. பணம் சம்பாதித்துவர வெளியே செல்பவன், ஒரு சாமியார் செய்யும் திருட்டில் சம்பந்தமில்லாமல் மாட்டி சிறைக்குச் செல்வான். இங்கே அவனது அம்மா இறந்து போவாள். தற்கொலை செய்யப் போகும் தங்கையை ஒருவன் காப்பாற்றி விபச்சாரத்தில் தள்ள முயல, போலீஸ் அதிகாரி அவளை காப்பாற்றி மணந்து கொள்வார்.
இந்த நேரம், அவனது காதலி காணாமல் போவாள். அவளைத் தேடிச் சென்று கண்டும் பிடிப்பான். ஆனால், அவளுக்கோ இவன் யார் என்றே தெரியாது. அந்த மர்மத்தை தேடும் போது, நாயகனின் காதலியும், அவளது தோற்றத்தில் இருக்கும் பெண்ணும் இரட்டை சகோதரிகள் என்பது தெரிய வரும். இதனிடையில் தனது தங்கையையும் நாயகன் கண்டுபிடிப்பான்.
மு.கருணாநிதியின் பூம்புகார் திரைப்படத்தில் விஜயகுமாரி கண்ணகியாக நடித்தார். கண்ணகிக்கு சிலை வடிக்கும் போது விஜயகுமாரியைத்தான் மாடலாகக் கொண்டு சிலையை வடிவமைத்தனர். 1973 இல் எஸ்.எஸ்.ராஜேந்திரனும், விஜயகுமாரியும் பிரிந்தனர். இவர்களுக்கு ரவி என்ற மகன் உண்டு. நடிகர் விஜயகுமாரின் முதல் மனைவியின் மகளை ரவி திருமணம் செய்தார். பிறகு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.