நடிகை ஸ்ரீஜாவை இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 1988 முதல் 1994 வரை தமிழ், மலையாளத்தில் ஸ்ரீஜா முக்கியமான படங்களில் நடித்தார். நாட்டாமை வெற்றிக்கு முன்பு அதே சரத்குமார், விஜயகுமாரை வைத்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வெற்றி பெற்ற படம் சேரன் பாண்டியன். அதில் ஸ்ரீஜா நாயகியாக நடித்திருந்தார்.
ஸ்ரீஜாவின் பூர்வீகம் கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம். அப்பா ஸ்ரீதரன், அம்மா உஷா இருவருமே நாடக நடிகர்கள். அதனால் ஸ்ரீஜாவும் குழந்தையாக இருக்கும்போதே மேடையேறினார். 1982-ல் தனது 11-வது வயதில் ஸ்ரீஜா நிதி என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானார். அதுதான் அவரது முதல் திரைப்பிரேவேசம். மூன்று வருடங்கள் கழித்து 1985-ல், முத்தரம்குந்நு பி.ஓ. என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து மே மாச புலரியில் என்ற படத்தில் தலைகாட்டினார். ஸ்ரீஜாவை மலையாளிகளிடம் கொண்டு சேர்த்த படம், 1989-ல் அவர் நாயகியாக அறிமுகமான, அன்னக்குட்டி கோடம்பாக்கம் விளிக்குந்நு. அதாவது அன்னக்குட்டியை கோடம்பாக்கம் அழைக்கிறது.
மோகன்லாலின் தீவிர ரசிகையாக இதில் ஸ்ரீஜா வருவார். சினிமா பைத்தியம். அண்ணன் சாய்குமார். ஸ்ரீஜாவை காதலிக்கும் அண்ணனின் நண்பனாக சுரேஷ்கோபி. சினிமா ஆசையில் ஜெகதி ஸ்ரீகுமாரை நம்பி சென்னைக்கு வண்டியேறுவார் ஸ்ரீஜா. சென்னை சென்ற பிறகே ஜெகதி ஸ்ரீகுமாரின் சுயரூபம் ஸ்ரீஜாவுக்கு தெரியவரும். இறுதியில் சுரேஷ்கோபி அவரை காப்பாற்ற, சுபம்.
இந்தப் படம் கேரளாவில் நல்ல வரவேற்பையும், ஸ்ரீஜாவுக்கு நல்ல அறிமுகத்தையும் அளித்தது. அதன் பிறகு ஸ்ரீஜாவுக்கு வரிசையாக படங்கள் வர ஆரம்பித்தன. அதே வருடம் ஜெயராம், சித்தாராவுடன் மழவில்காவடியில் நடித்தார். கமல், ஜெயராம், சோமன், திலகன் நடித்த மலையாளப் படம் சாணக்கியனில் கமலின் தங்கையாக நடித்தார். இந்தப் படத்தில்தான் இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர் அறிமுகமானார். அதே வருடம் ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு படத்தின் இரண்டாம் பாகமான ஜாக்ரதாவில் நடித்தார். அந்தப் படமும் வெற்றி பெற்றது. 1989-ல் மட்டும் ஸ்ரீஜா நடித்த நான்குப் படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன.
1990-ல் ஸ்ரீஜாவின் மார்க்கெட் மேலும் உயர்ந்தது. மோகன்லாலின் இந்திரஜாலம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். குறிப்பிடத்தக்க இன்னொரு படம், இன்னசென்ட் நடித்த டாக்டர்.பசுபதி. முகேஷ் ஜோடியாக நடித்த, செறிய லோகமும் வலிய மனுஷரும் இன்னொரு வெற்றிப் படம். மம்முட்டியை வைத்து ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு, அதன் இரண்டாம் பாகமான ஜாக்ரதா ஆகிய படங்களை இயக்கியிருந்த கே.மது முதல்முறையாக தமிழில் மவுனம் சம்மதம் படத்தை மம்முட்டி, அமலாவை வைத்து இயக்கினார்.
கோவை செழியன் தயாரித்த இந்தப் படத்தில் ஜெய்சங்கர், சரத்குமார், குமரிமுத்து, நாகேஷ் உள்ளிட்டவர்களும் நடித்திருந்தனர். ஏற்கனவே மதுவின் ஜாக்ரதாவில் ஸ்ரீஜா நடித்திருந்ததால் அந்தப் பழக்கத்தில் மவுனம் சம்மதத்தில் சரத்குமாரின் மனைவியாக முக்கிய வேடம் அவருக்கு அளிக்கப்பட்டது. இளையராஜாவின் அட்டகாசமான பாடல்களைக் கொண்ட மவுனம் சம்மதம் தமிழில் வெற்றி பெற்றது.
இதையடுத்து ஸ்ரீஜா கே.எஸ்.ரவிக்குமாரின் சேரன் பாண்டியனில் நடித்தார். புரியாத புதிர் என்ற முதல் படத்துக்குப் பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய படம் சேரன் பாண்டியன். புரியாத புதிர் த்ரில்லர். அதற்கு முற்றிலும் மாறாக கிராமத்துப் பின்னணியில் சேரன் பாண்டியனை எடுத்தார். விஜயகுமாரின் மகளாக ஸ்ரீஜா. அவரை காதலிப்பவராக ஆனந்த்பாபு. இந்தப் படத்தின் சிறப்புகளில் ஒன்று சௌந்தர்யனின் இசையும் பாடல்களும். முக்கியமாக, காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு... பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானது. கவுண்டமணி, செந்தில் காமெடி, பாடல்கள், உணர்ச்சிகரமான கதை என சேரன் பாண்டியன் அந்த வருடம் மாநில அரசின் சிறந்தப் படத்துக்கான சிறப்பு விருது, சிறந்த கதை (ஈரோடு சௌந்தர்), சிறந்த துணை நடிகர் (விஜயகுமார்) என பல விருதுகளை வென்றது. தெலுங்கு, இந்தியிலும் சேரன் பாண்டியன் ரீமேக்காகி கே.எஸ்.ரவிக்குமாரின் நாட்டாமை, நட்புக்காக, பாட்டாளி போன்ற பல படங்களுக்கு அடித்தளமிட்டது.
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தமிழ், மலையாளத்தில் தொடர்ச்சியாக நடித்து, அறியப்படுகிற நடிகையாக இருந்த போது ஸ்ரீஜா திருமணம் செய்து கொண்டார். 1993-ல் அவருக்கும் சந்தன் பாண்டியன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. எம்ஜிஆர் அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராக இருந்த அரங்கநாயகத்தின் மகன் இவர். திருமணத்துடன் சினிமாவுக்கு குட்பை சொன்னார் ஸ்ரீஜா. 1994-ல் வெளிவந்த என் ராஜாங்கம் அவரது கடைசிப் படமாக அமைந்தது. அவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
குறுகிய காலத்தில் தமிழ், மலையாளத்தில் அறியப்படுகிற நடிகையாகி, அதேவேகத்தில் சினிமாவிலிருந்து விலகியவர் ஸ்ரீஜா. வாய்ப்புகள் வருகையில் அவரைப் போல் திரையுலகிலிருந்து விலகியவர்கள் சொற்பம். ரிட்டையர்டான நடிகைகள் ஒருகட்டத்துக்குப் பிறகு மீண்டும் நடிக்க ஆசைப்பட்டு சினிமாவுக்கு திரும்பி வருவது உண்டு. ஆனால், ஸ்ரீஜா விஷயத்தில் அப்படியெந்த அதிசயமும் நிகழவில்லை. அவர் நடித்த படங்களில் அன்னக்குட்டி கோடம்பாக்கம் விளிக்குந்நு, செறிய லோகமும் வலிய மனுஷரும், சேரன் பாண்டியன் போன்ற பல படங்கள் இன்றும் ரசிக்கக்கூடியவையே.