இந்தக் கதையைவிட படத்தின் நாயகிகள் ஜெயசித்ரா, ஸ்ரீப்ரியாவின் கதை சுவாரஸியமானது. இரண்டு பேரும் எதிரெதிர் வீட்டில் வசிக்கிறவர்கள். சரியான ஏட்டிக்குப் போட்டி. ஒருவர் ஒரு முழம் பூ வாங்கினால் மற்றவர் இரண்டு முழம் வாங்குவார். இந்த போட்டி இறுதியில் பாடகர்களான அண்ணன், தம்பியை பாராட்டுவதில் வந்து முடியும்.
விகே ராமசாமியின் கைங்கர்யத்தால் அண்ணன், தம்பிக்குள் பிரிவு ஏற்படும். ஆனால், பழி இருவரின் மனைவிகள் (ஜெயச்சித்திரா, ஸ்ரீப்ரியா) மீது விழும். சண்டைக்கோழிகளான அவர்கள் இருவரும் சமாதானமாகி தங்கள் கணவர்களுக்குள் ஏற்பட்ட பிரிவை நேர்செய்ய முயற்சிப்பார்கள். ஆனால், முடியாது. அவர்களின் பள்ளியறை பிளாக்மெயிலும் பிசுபிசுத்துப் போகும். இறுதியில் தேங்காய் சீனிவாசன் போடும் ட்ராமாவால் ஒருவழியாக அண்ணன், தம்பி ஒன்றிணைய சுபம்.
இந்தப் படம் குறித்து நினைவுகூர்ந்த சிவகுமார், 'அப்போது நான் நாயகனாக நடித்து வந்தேன். கமல் வளர்ந்து வரும் நாயகன். கமல் சிறந்த டான்சர் என்பதால் அவரை மட்டும் ஆட வைப்பது என்றுதான் இயக்குனர் முடிவு செய்திருந்தார். ஆனால், டான்ஸ் மாஸ்டர் நானும் ஆடினால் நன்றாக இருக்கும் என்றார். அண்ணனுக்கு என்ன ஸ்டெப் வருமோ அதுவே எனக்கும் வைங்க என்று கமல் எனக்காக தன்னுடைய நடனத் திறமையை குறைத்துக் கொண்டார்' என கூறியுள்ளார்.