அதில் ஜெயலலிதா வெளிநாட்டில் இருந்து வரும் நவ நாகரிக நங்கையாகவும், சிவாஜி பட்டிக்காட்டானாகவும் நடித்திருந்தார்கள். பாட்டும் பரதமும் திரைப்படத்தில் அப்படியே உல்டா. பரதநாட்டிய கலைஞராக ஜெயலலிதாவும், கலை பற்றிய எந்த புரிதலும் இல்லாத தொழிலதிபராக சிவாஜி கணேசனும் நடித்தனர். படத்தின் வெற்றியும் உல்ட்டாவாகி போனதுதான் எதிர்பாராத அதிர்ச்சி.
ஜெயலலிதாவின் நடன நிகழ்ச்சி ஒன்றிற்கு தலைமை தாங்க செல்வார் சிவாஜி கணேசன். நடனம் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. நடன கலைஞரை வாழ்த்தி பேசும்போது, 'ஏதோ கைய கால அசைச்சாங்க. நீங்களும் கைதட்டுனீங்க. என்ன நடந்ததுன்னே தெரியல. எல்லாம் வேஸ்ட் ஆப் டைம்' என்று சொல்லிவிட்டு கீழே இறங்கி செல்வார். அதற்கு பதிலடியாக ஜெயலலிதா, 'நடனம் பற்றி தெரியாதவர்களை இனியும் பேசுவதற்கு அழைக்க வேண்டாம்' என்று வேண்டுகோள் வைப்பார்.
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு வரும் வாய்ப்புகள் தடுக்கப்படும். அதற்கு காரணம் சிவாஜி என்றறிந்து அவரிடம் நியாயம் கேட்கப்போவார் ஜெயலலிதா. பிறகு தான் அது சிவாஜியின் வேலை அல்ல அவருடன் இருக்கும் விஜயகுமாரின் வேலை என்பது தெரியும். சிவாஜி நடன வாய்ப்புகள் மீண்டும் ஜெயலலிதாவுக்கு கிடைக்க செய்வார். இருவரும் காதலிக்க ஆரம்பிப்பார்கள்.
சிவாஜி பெரிய தொழிலதிபர். அவர் ஜெயலலிதாவை மணக்க விரும்புவது ஒருவகையில் பாக்கியம். ஆனால் ஜெயலலிதாவின் தந்தை, ஏழையாக இருந்தாலும் கலை தெரிந்த ஒருவனுக்கு தான் தனது மகளை மணம் முடித்துக் கொடுப்பேன் என்பார். இதனை ஒரு சவாலாக ஏற்று சிவாஜி நடனம் கற்று நடனப் போட்டியில் ஜெயலலிதாவை தோற்கடித்து அவரை மணம் முடிப்பார்.
மன்னாதி மன்னன் திரைப்படத்தில் எம்ஜிஆர் பத்மினியுடன் இதே போல் ஒரு போட்டி நடனம் ஆடுவார். கால்களால் சிங்கத்தின் உருவத்தை வரைந்து கடைசியில் பத்மினியை தோற்கடிப்பார். பாட்டும் பரதமும் படத்தில் சிவாஜி யானையை காலால் வரைந்து ஜெயலலிதாவை தோற்கடிப்பார். இதோடு பிரச்சினை முடிந்தது என்று பார்த்தால், சிவாஜியின் தந்தைக்கு ஜெயலலிதாவை பிடிக்காது. திருமணத்தை ஒத்துக் கொள்ள மாட்டார். அவரும், விஜயகுமாரும் சேர்ந்து சதி செய்து சிவாஜி, ஜெயலலிதாவை பிரிப்பார்கள்.
காலங்கள் ஓடும். வயதான நிலையில் வெளிநாட்டில் இருந்து ஜெயலலிதாவின் மகன் - இன்னொரு சிவாஜி - திரும்பி வருவார். அவர் பாப் மியூசிக்கில் வல்லவர். அவருக்கும் அவரது தந்தையான வயதான சிவாஜிக்கும் ஒரு போட்டி நடனம் நடக்கும். அங்கு வரும் ஜெயலலிதா இதுதான் உன்னுடைய அப்பா என்று சொல்ல காலம் கடந்த காலத்தில் சிவாஜி ஜெயலலிதாவுக்கு தாலி கட்ட கதை சுகமாக முடியும்.
மனோரமாவின் கிளப் டான்ஸும் படத்தில் உண்டு. வெளிநாட்டிலிருந்து வரும் மகன் சிவாஜியின் கதாபாத்திரமும், அவரது துள்ளலான நடிப்பும், கொச்சையான தமிழ் உச்சரிப்பும் பிரமாதமாக இருக்கும். அந்த கதாபாத்திரத்தை பிரதானமாக வைத்து மொத்தப் படத்தையும் எடுத்திருந்தால் இன்னொரு பட்டிக்காடா பட்டணமா போல பாட்டும் பரதமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கும்.