சிவாஜி கணேசன் சினிமாவில் அறிமுகமான பராசக்தி திரைப்படம் திராவிட கருத்துக்களை தாங்கி வந்தது. அந்தக் கருத்துக்களை பிரதிபலிக்கும் வசனங்களை கலைஞர் கருணாநிதியின் எழுத்தில் சிவாஜி பேசி நடித்தார். அதற்கு முன், நாடகத்தில் வீரசிவாஜியாக அவர் வெளிப்படுத்திய நடிப்பாற்றலை கண்டு வியந்து, கணேசன் என்ற அவருக்கு சிவாஜி என்ற பட்டத்தை அளித்தவர் பெரியார். இப்படி சிவாஜி கணேசனின் வாழ்வில் திராவிட கருத்தாக்கம் மிகுந்த ஆதிக்கம் செலுத்தியது. அவரும் இயல்பாகவே திமுக ஆதரவாளராக இருந்தார். அந்தக் கட்சியில் அதிகாரமிக்கவராக இருந்த இன்னொரு நடிகர் எம்ஜிஆர்.
ஒரு உறையில் இரு கத்திகள் எப்போதும் இருக்க முடியாது. சிவாஜி கணேசன் திருப்பதி சென்று வெங்கடாசலபதியை தரிசித்து வந்த நிகழ்வை கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர். முக்கியமாக எம்ஜிஆர் ஆதரவாளர்கள் சிவாஜியின் ஆன்மிகத்தை கடுமையாக எதிர்க்க, மனம் கசந்த சிவாஜி திமுகவிலிருந்து விலகி, ஏற்கனவே அப்படி விலகி தனிக்கட்சி கண்ட ஈவிகேஎஸ் சம்பத்துடன் இணைந்து கொண்டார். அவருக்கு முன்னால் திமுகவிலிருந்து விலகிய கண்ணதாசனும் அக்கட்சியில்தான் இருந்தார். பிறகு அக்கட்சி காங்கி[ரஸுடன் இணைக்கப்பட்ட பின் சிவாஜி காங்கிரஸ்காரரானார்.
சராசரி சினிமா நட்சத்திரங்களை போல் அல்லாமல் இந்தியா பாகிஸ்தான், சீனாவுடன் போர் தொடுத்த நேரங்களில் எல்லைக்கு சென்று கலைநிகழ்ச்சிகள் மூலம் நம்நாட்டு வீரர்களை சிவாஜி மகிழ்வித்தார். ஏராளமான பணம் நன்கொடை அளித்தார். பலரிடம் வசூலித்தும் தந்தார். 1975 இல் இந்திரா காந்தி அம்மையார் பிரதமராக இருந்த போது 20 அம்ச திட்டத்தை கொண்டு வந்தார்.
கிராமங்களில் வறுமை ஒழிப்பு, அதிக அறுவடை, கிராம தொழிலாளர்களுக்கான தனித்திட்டம், சுத்தமான குடிநீர், அனைவருக்கும் ஆரோக்யம், இரு குழந்தைகள் திட்டம், கல்வியை விரிவுப்படுத்துவது, பட்டியலினத்தவர்களுக்கு நீதி, பெண்களுக்கு சமஉரிமை, அனைவருக்கும் வீடு, சேரிகள் மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்பட 20 முக்கிய அம்சங்களை கொண்ட, இந்தியாவை கட்டமைத்த திட்டம் அது.
நவீன இந்தியாவை கட்டமைத்ததில் இந்தத் திட்டங்களுக்கு பெரும்பங்குண்டு. அந்த 20 அம்ச திட்டங்களை மக்களிடம் விளக்கிச் சொல்வதற்காக 1976 இல் சிவாஜி கணேசன் பாதயாத்திரை பிரச்சாரத்தை மேற்கொண்டார். 20 அம்ச திட்டங்கள் நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மைபயக்கும் என மனதார நம்பியதால் அவர் அந்தப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு ஜானகி, ஜெயலலிதா தலைமைகளில் அதிமுக இரண்டாகப் பிரிந்து தேர்தலை சந்தித்த போது, காங்கிரஸ் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்ய, சிவாஜி அதனை எதிர்த்து காங்கிரஸில் இருந்து வெளியேறி தமிழக முன்னேற்ற முன்னணி என்ற தனிக்கட்சி தொடங்கினார். ஒரே வருடத்தில் அந்தக் கட்சியை ஜனதாதளத்துடன் இணைத்து தனது அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
சிவாஜி கணேசன் தனது படங்களில் எந்த கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்டாரோ, அந்த கதாபாத்திரமாக வாழ்ந்தார். கலெக்டர் என்றால் கலெக்டர், திருடன் என்றால் திருடன். அதனால் அவரை ரசிகர்கள் திரையிலும், வெளியிலும் நடிகராகவே பார்த்தனர். அதற்கு மாறாக எம்ஜிஆர் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் தன்மீது கட்டமைக்கப்பட்ட ஹீரோயிச பிம்பத்தை வெளிப்படுத்தினார். அதனால் திரையிலும், வெளியிலும் ரசிகர்கள் அவரை ஆபத்பாந்தவனாகவும், தலைவராகவும் பார்த்தனர்.
ஒருவர் அரசியலில் தோல்வி கண்டதற்கும், இன்னொருவர் வெற்றி பெற்றதற்கும் இந்த வித்தியாசம் முக்கிய காரணமாக அமைந்தது. இன்றும், மக்களை காப்பாற்றும் ஹீரோயிச கதைகளில் நடிப்பவர்களுக்குதான் அரசியலில் நுழைந்தால் வெற்றி பெறுவதற்கான அதிக சாத்தியங்கள் உள்ளன. சினிமா பிம்பத்தைத் தாண்டி அரசியலை அணுகும் பக்குவம் தமிழர்களுக்கு அமையுமா என்பது இப்போதும் கேள்விக்குறிதான்.