தீர்ப்பளித்த நீதிபதி தனது தீர்ப்பை சற்றே மாற்றி, அந்த இரண்டு வருடங்கள் ராஜா யாரை லாரி மோதி கொலை செய்தானோ அந்த குடும்பத்துடன் கழிக்க வேண்டும், அவர்களின் பொருளாதார தேவையை ராஜா கவனித்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிடுகிறார். ஒரு கொலைகாரனாக யாரை கொலை செய்தானோ அவர்கள் குடும்பத்திலேயே தங்க வேண்டும், அவர்களுக்காக உழைக்க வேண்டும், அவர்கள் தேவையை நிறைவேற்ற வேண்டும் என்பது ராஜாவை கிலியடைய செய்கிறது. அவன் தீர்ப்பை மாற்றும்படி கெஞ்சுகிறான். ஆனால் நீதிபதி தனது உத்தரவில் உறுதியாக இருக்கிறார்.
ராஜா தகுந்த காவலுடன் அந்த குடும்பம் வசிக்கும் கிராமத்திற்கு அழைத்து வரப்படுகிறான். அந்த குடும்பத்திலேயே தங்க வைக்கப்படுகிறான். வீட்டில் உள்ளவர்கள் கொலைகாரன் என்ற பார்வையை ராஜா மீது வீசுகிறார்கள். கிராம த்தவரும் ராஜா மீது வெறுப்பை உமிழ்கிறார்கள். இப்படி ஒரு சூழலை எதிர்கொள்ள முடியாமல் ராஜா தப்பிக்க நினைக்கிறான். ஆனால் முடியவில்லை.
ஒரு கட்டத்தில் இந்த ஏச்சுகளையும் பேச்சுகளையும் தாங்கி அந்த குடும்பத்திற்காக உண்மையாக உழைக்க ஆரம்பிக்கிறான். அவர்களுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிக்க நினைக்கும் அந்த ஊர் பண்ணையாரை எதிர்க்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக தன்னைச் சுற்றி உள்ளவர்களின் அன்பை ராஜா பெறுகிறான். அனாதையான அவன் அன்பையும் வெறுப்பையும் கோபத்தையும் நெகிழ்வையும் எதிர்கொள்ளும் விதத்தை படம் பிரமாதமாக காட்சிப்படுத்தி இருந்தது.
இதனிடையில் ராதா என்ற பெண்ணிடம் அவனுக்கு காதல் ஏற்படுகிறது. ராதாவும் அவனை காதலிக்கிறாள். துரதிர்ஷ்டவசமாக ராதாவின் தாத்தாவின் மரணம் ராஜாவோடு சம்பந்தப்படுத்தப்படுகிறது. மீண்டும் அவன் கைது செய்யப்படுகிறான். இந்த நேரத்தில் காயம்பட்ட பண்ணையார் பழி தீர்க்க முடிவெடுக்க, தப்பி வரும் ராஜா அவனது நோக்கத்தை முறியடிக்கிறான். அந்த குடும்பமும் ராஜாவின் நல்ல இதயத்தை புரிந்து கொண்டு அன்பு செலுத்த ஆரம்பிக்கிறது.
இறுதியில் ராஜாவின் இரண்டு வருட தண்டனைக் காலம் முடிவடைகிறது. ராஜா இப்போது அந்த குடும்பத்தை விட்டு பிரிய வேண்டும். ஆனால் ராஜா நீதிபதியிடம் தனது தண்டனையை ஆயுள் காலமாக மாற்றும்படி கூறுகிறான். இறுதிவரை அந்த குடும்பத்துடன் இருந்து அவர்களுக்காக உழைக்க தீர்மானிக்கிறான். நீதிபதியும் அதற்கு ஒப்புக்கொள்கிறார். ராஜா மீண்டும் அந்த குடும்பத்துக்கு திரும்புகிறான். அவர்கள் அவனை தங்களில் ஒருவனாக ஏற்றுக் கொள்கிறார்கள். ராஜா ராதா திருமணம் நடக்கிறது.
ஒரு நடிகர் எளிதில் ஒப்புக்கொள்ள தயங்கும் கதாபாத்திரம் ராஜா. அதில் நடித்ததோடு தனது நடிப்பு திறமையால் அதற்கு உயிர் கொடுத்திருந்தார் சிவாஜி கணேசன். ராதாவாக துள்ளித் திரியும் இளம்பெண்ணாக ஜெயலலிதா நடித்திருந்தார். விபத்தில் இறந்து போனவனின் தந்தையாக எஸ்வி சுப்பையாவும், தாயாக காந்திமதியும் நடித்திருந்தனர். அவனது விதவை மனைவியாக சவுகார் ஜானகி நடித்திருந்தார். பண்ணையாராக ஆர் எஸ் மனோகர். இவர்களுடன் மனோரமா, நாகையா, டிகே பாலச்சந்திரன், சிஐடி சகுந்தலா, உசிலமணி, மேஜர் சுந்தர்ராஜன், கே.பாலாஜி ஆகியோரும் நடித்திருந்தனர்.
அதை அடுத்து சிவி ராஜேந்திரன் இயக்கத்தில் வசந்த மாளிகை திரைப்படம் வெளியாகி வெள்ளி விழா கண்டது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் 7ஆம் தேதி அதே சி.வி. ராஜேந்திரன் இயக்கத்தில் நீதி திரைப்படம் வெளியாகி 100 நாட்கள் கண்டது.அந்த ஒரு வருடத்தில் மட்டும் ராஜா, வசந்த மாளிகை, நீதி என மூன்று திரைப்படங்கள் சி.வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியாகி, அந்த மூன்றில் வசந்த மாளிகை வெள்ளி விழாவும் மற்ற இரு திரைப்படங்கள் 100 நாட்களும் ஓடி 1972 ஐ நடிகர் திலகத்தின் வருடமாக்கியது.