1967-ல் சிவாஜி கணேசன் நடிப்பில் எட்டு திரைப்படங்கள் வெளியாயின. கந்தன் கருணை என்ற காலத்தால் அழியாத காவியத்தடன் சிவாஜி கணேசனின் அந்த வருடம் தொடங்கியது. மார்ச்சில் ஸ்ரீதரின் நெஞ்சிருக்கும் வரை படம் வெளியானது. படம் மிகப்பெரிய வெற்றி இல்லை என்றாலும் தோல்விப்படமல்ல. அந்த வருட இறுதியில் இரண்டு படங்கள் வெளியாகின. ஒன்று இருமலர்கள், இன்னொன்று ஊட்டி வரை உறவு. இந்த இரு படங்களுமே யை முன்னிட்டு நவம்பர் மாதம் 1-ஆம் தேதி வெளியானது. இதில் இரு மலர்கள் படத்தை ஏசி திருலோகச்சந்தர் இயக்கியிருந்தார்.
பத்மினி, கே.ஆர்.விஜயா என இரு நாயகிகள். திருலோகச்சந்தரின் கதைக்கு பிரபல கதாசிரியர் ஆரூர் தாஸ் திரைக்கதை அமைத்திருந்தார். படத்துக்கு பிளஸ்ஸாக அமைந்தது மெல்லிசை மன்னரின் பாடல்கள். எம்.எஸ்.வி. என்றால் பாடல்கள் கண்ணதாசன் என்பதை மாற்றி அனைத்துப் பாடல்களையும் வாலி எழுதினார். 'மகாராஜா ஒரு மகாராணி...', 'மன்னிக்க வேண்டுகிறேன்', 'மாதவி பொன் மயிலாள்' போன்ற சிறந்த பாடல்கள் படத்தை வெற்றி பெறச் செய்தன. படம் 100 நாள்களை கடந்து ஓடியது. அத்துடன் தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருது கே.ஆர்.விஜயாவுக்கும், சிறந்த கதாசிரியருக்கான விருது திருலோகச்சந்தருக்கும் கிடைத்தது.
அதே நவம்பர் 1-ம் தேதி சிவாஜி நடிப்பில் வெளியான மற்றொரு திரைப்படம் ஊட்டிவரை உறவு. மார்ச்சில் வெளியான நெஞ்சிருக்கும் வரை படத்தை இயக்கியிருந்த ஸ்ரீதர் இந்தப் படத்தையும் இயக்கியிருந்தார். ரொமான்டிக் காமெடியாக தயாரான இந்தப் படத்துக்கும் எம்எஸ்வி தான் இசை. ஆனால், மொத்தப் பாடல்களையும் எழுதியது கண்ணதாசன். 'தேடினேன் வந்தது', 'புது நாடகத்தில்', 'பூ மாலையில்', 'அங்கே மாலை மயக்கம்' உள்ளிட்ட பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இன்று ஒரு படத்தில் ஒரு பாடல் ஹிட்டானால் அதிசயம். அன்று ஒரே நாளில் வெளியான ஒரே நடிகரின் இரண்டு படங்களின் அனைத்துப் பாடல்களும் ஹிட். நெஞ்சிருக்கும் வரைக்கும் சேர்த்து ஊட்டி வரை உறவு திரையிட்ட அனைத்து இடங்களிலும் 100 நாள்கள் ஓடியது. தெலுங்கில் இந்தப் படம் 1983-ல் ஸ்ரீ ரங்க நீதிலு என்ற பெயரில் ரீமேக்கும் செய்யப்பட்டது.
1975-ல் மீண்டும் இதேபோல் சிவாஜியின் இரு படங்கள் ஒரே நாளில் மோதின. முந்தைய இரு நிகழ்வுகளைப் போல இதுவும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2-ம் தேதி வெளியானது. ஒன்று டாக்டர் சிவா, இன்னொன்று வைர நெஞ்சம். இதில் ஆச்சரியமான விஷயம் 1967-ல் ஊட்டி வரை உறவு படத்தை இயக்கிய அதே ஸ்ரீதர் தான் வைர நெஞ்சம் படத்தை இயக்கியிருந்தார். ஊட்டி வரை உறவுடன் வெளியான இரு மலர்கள் படத்தை இயக்கிய திருலோகச்சந்தர் தான் டாக்டர் சிவா படத்தை இயக்கியிருந்தார். 1967-ல் நிகழ்த்திய அதே மேஜிக்கை 1975-ல் இந்த மூன்று மேதைகளும் இணைந்து மீண்டும் நடத்திக் காட்டினார்கள்.