நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 175 வது படமான, அவன்தான் மனிதனை டிஜிட்டலில் மெருகேற்றி மீண்டும் திரையிடுகிறார்கள். இதற்கான விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஒரு நடிகர் 175 படங்களில் நடிப்பது என்பதே சாதனை. அந்தப் படம் வெற்றி பெற்றால் அதைவிட மகிழ்ச்சி இருக்க முடியாது. அவன்தான் மனிதன் நடிகர் திலகத்தின் வெற்றி மகுடத்தில் இன்னொரு இறகாக அமைந்த படம்.
1970-ல் அவன் தான் மனிதன் படத்தின் கதையை பாலசுப்பிரமணியம் எழுதினார். சிவாஜி நடிக்க, அவரை வைத்து ஆலயமணி, ஆண்டவன் கட்டளை வெற்றிப் படங்களை இயக்கிய கே.சங்கர் படத்தை இயக்குவதாக திட்டம். இந்தக் கதைக்கு பாலசுப்பிரமணியத்துக்கு அந்த காலத்தில் 25,000 ரூபாய் வழங்கப்பட்டது. கதையைக் கேட்ட சிவாஜிக்கு திருப்தியில்லை. இடிவிழுந்தவன் காலில் பாம்பு கடித்தது போல, நாயகனின் மனைவி முதலில் இறக்கிறாள், பிறகு மகள், காதலிக்கும் ஸ்டெனோ காதலை ஏற்றுக் கொள்வதில்லை, ஆத்மார்த்தமான தொழிலாளி போட்டியாக கம்பெனி தொடங்குகிறான், வியாபாரம் படுக்கிறது, சுற்றிலும் கடன், வீட்டை ஏலம் விடுகிறார்கள் என்று சோகத்தில் பிழிந்தெடுத்த கதை. இத்தனை சோகம் ஆகாது என்று சிவாஜி மறுக்க, அந்தக் கதையை கன்னடத்தில் 39,000 ரூபாய்க்கு வாங்கி, கஸ்தூரி நிவாசா என்ற பெயரில் படமாக்கி வெளியிடுகிறார்கள். ராஜ்குமார் நடிப்பில் படம் வெற்றி பெறுகிறது.
படத்தைப் பார்க்கும் சிவாஜிக்கு, அவர் நினைத்த அளவுக்கு மோசம் இல்லை என்பது புரிகிறது. கஸ்தூரி நிவாசா படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை 2 லட்ச ரூபாய்க்கு வாங்கி, ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் சிவாஜி, முத்துராமன், ஜெயலலிதா, மஞ்சுளா நடிப்பில் எடுக்கப்பட்டதுதான் அவன்தான் மனிதன். கதையை சரியாக கணித்திருந்தால் 25,000 ரூபாயோடு போயிருக்கும். பிறகு அதே கதையை 2 லட்சம் கொடுத்து வாங்க வேண்டியிருந்திருக்காது. ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் சினிமாவில் நடப்பது சகஜம்.
அவன்தான் மனிதன் படத்தின் சிறப்புகளில் ஒன்று எம்எஸ்வியின் இசையில் உருவான பாடல்கள். கண்ணதாசன் வரிகளில் உருவான, அன்பு நடமாடும் கலைக் கூடமே..., மனிதன் நினைப்பதுண்டு... ஆட்டுவித்தால் யாரொருவர்.. பாடல்கள் அப்போது விரும்பி கேட்கப்பட்டன. அப்போது பாடல் கம்போஸிங்கின் போது இயக்குனர், இசையமைப்பாளர், கதாசிரியர், பாடலாசிரியர் என அனைவரும் கலந்து கொள்வார்கள். இயக்குனர் அல்லது கதாசிரியர் சிச்சுவேஷனைச் செல்ல, இசையமைப்பாளர் மெட்டு போடுவார். அதில் எது ஓகே என்பதை இயக்குனர் சொல்ல, அதற்கு பாடலாசிரியர் வரிகள் எழுதுவார். சுடச்சுட ரிக்கார்டிங் தியேட்டரில் பாடல் உருவாகும்.
1975-ல் அவன்தான் மனிதன் வந்த போது கண்ணதாசன் கொடிகட்டிப் பறந்தார். ஆனால், திருலோகசந்தர் தனது சொந்தப் படங்களில் கண்ணதாசனுக்கு வாய்ப்பு அளித்ததில்லை. ஆனால், அடுத்தவர் தயாரிப்பில் அவர் இயக்கிய படங்களில் கண்ணதாசன் பாட்டெழுதியிருக்கிறார். அவன் தான் மனிதன் படத்தின் கம்போஸிங்கின் போது எம்எஸ்வி கண்ணதாசனிடம் ஒரு டியூனை போட்டுக் காண்பித்திருக்கிறார்.
கம்போஸிங் நடக்கையில் புத்தகம் படிப்பது திருலோகசந்தரின் வழக்கம். அவ்வப்போது புத்தகத்திலிருந்து தலையுயர்த்தி அப்பிராயம் சொல்வார். அன்றும் அப்படித்தான் நடந்திருக்கிறது. ஆனால், எதிர்பார்க்காத விஷயம், போட்ட முதல் டியூனையே ஓகே சொல்லியிருக்கிறார். எம்எஸ்வி தத்தகாரத்தில் டியூனை சொல்ல, கவிஞர் வரிகளைச் சொல்ல, அவரது உதவியாளர் எழுதியிருக்கிறார். அந்தப் பாடல்தான், அன்பு நடமாடும் கலைக்கூடமே.
திருலோகசந்தர் சிவாஜியை வைத்து மட்டும் 25 படங்கள் இயக்கியுள்ளார். எம்ஜிஆரின் அன்பே வா படமும் இவர் இயக்கியதே. அவன்தான் மனிதன் வெளியாகி நல்ல விமர்சனத்துடன் 100 நாள்கள் ஓடியது. இந்தப் படத்தில் நடித்த மஞ்சுளா, முத்துராமன், ஜெயலலிதா ஆகியோருக்கும் நல்ல பெயர் கிடைத்தது. சிங்காரமாக வரும் சந்திரபாபுவும், அப்பாவு கதாபாத்திரத்தில் வந்த சோவும் ரசிக்க வைத்தனர்.
படத்துக்கு விமர்சனம் எழுதிய கல்கி பத்திரிகை, 'சிவாஜியின் நடிப்பாற்றலுக்குச் சவால்விடும் சம்பவங்கள் கொண்ட ஒரு நல்ல கதை கிடைத்துவிட்டால், அவர் பிய்த்து உதறிவிட மாட்டாரா? ஒரு சந்தாப்பத்தில்கூட அவர் நடிப்பு தொய்வடையவில்லை. ஏ.சி.திருலோகசந்தர் உணர்ச்சிமயமான இக்கதையைத் திறம்பட இயக்கியிருக்கிறார். திரைக்கதையை சுவையாக தீட்டியிருக்கிறார். சிந்திக்க வைக்கும் சிறப்பான வசனங்களுக்கு பஞ்சு அருணாசலம் பாராட்டுப் பெறுகிறார்' என்று எழுதியது.