இன்றைக்கு ரசிகர்கள் போட்டிப் போட ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என்று நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள். அன்றும் நிறைய நட்சத்திரங்கள் இருந்தாலும் வசூல் போட்டி எம்ஜிஆருக்கும், சிவாஜிக்கும்தான். எழுபதுகளின் தொடக்கத்தில் இரு நடிகர்களின் ரசிகர்களும் பித்தேறித் திரிந்த காலகட்டம். 1973 மே 11 எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் வெளியானது. எம்ஜிஆர் இரு வேடங்களில் நடித்திருந்ததோடு படத்தையும் இயக்கியிருந்தார். ஒன்றுக்கு மூன்று நாயகிகள், வெளிநாடுகளில் படப்பிடிப்பு, அருமையான பாடல்கள், அட்டகாசமான சண்டைக் காட்சிகள் என ரசிகர்களை ஒரு வேர்ல்ட் டூரே அழைத்துச் சென்றார் எம்ஜிஆர். படம் திரையிட்ட அனைத்துத் திரையரங்குகளிலும் திருவிழாக் கூட்டம்.
சென்னை தேவிபாரடைஸ் திரையரங்கில் திரையிட்ட 67 தினங்களில் 201 அரங்கு நிறைந்த காட்சிகள். மதுரை மீனாட்சியில் 241 அரங்கு நிறைந்த காட்சிகள். இந்த இரு திரையரங்குகளிலும் இதுதான் அதிகபட்சம். எம்ஜிஆர் ரசிகர்கள் உலகம் சுற்றும் வாலிபனை கொண்டாடித் தீர்க்க, சிவாஜி ரசிகர்கள் பெருமிக்கொண்டிருந்தனர். அவர்களுக்கும் இதேபோலொரு மாபெரும் வெற்றி தேவைப்பட்டது. அவர்களின் ஆசை ஒரே வருடத்தில் தங்கப்பதக்கம் திரைப்படம் மூலம் நிறைவேறியது.
இயக்குனர் மகேந்திரன் நடிகர் செந்தாமரைக்காக எழுதிய இரண்டில் ஒன்று நாடகத்தைப் பார்த்து, அதன் கதை பிடித்துப்போய் நாடகத்தின் உரிமையை வாங்கி, கதையிலும், முதன்மை கதாபாத்திரத்திலும் திருத்தங்கள் செய்து, தங்கப்பதக்கம் என்ற பெயரில் தனது நடிப்பில் நாடகத்தை அரங்கேற்றினார் சிவாஜி. பிறகு அந்த நாடகம் திரைப்படமானது. சரித்திர கதாபாத்திரங்களில் கட்டப்பொம்மன் போல சமூக கதாபாத்திரங்களில் தங்கப்பதக்கம் எஸ்.பி.சௌத்ரி. அத்தனை கம்பீரம்.
முதல் 70 நாட்களில் இந்த 3 திரையரங்குகளில் 630 காட்சிகள் திரையிடப்பட்டன. இதில் சாந்தியில் 210 காட்சிகளும், கிரவுனில் 198 காட்சிகளும், புவனேஸ்வரியில் 158 காட்சிகளுமாக மொத்தம் 566 அரங்கு நிறைந்த காட்சிகள். தமிழகம் முழுவதும் இதேதான் நிலை. முக்கியமாக மதுரையின் பிரமாண்ட திரையரங்குகளில் ஒன்றான சென்ட்ரலில் முதல் 112 தினங்களில் 361 அரங்கு நிறைந்த காட்சிகள். அப்போதெல்லாம் பெரிய படங்களுக்கும் தினம் 3 காட்சிகள்தான். சனி, ஞாயிறில் 4 நான்கு காட்சிகள். கிட்டத்தட்ட அனைத்து காட்சிகளும் அரங்கு நிறைந்தது.
முதல் 112 தினங்களில் 5,18,936 பேர் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் மட்டும் தங்கப்பதக்கத்தை கண்டு ரசித்துள்ளனர். படம் ஐந்து லட்சத்துக்கு மேல் வசூலித்தது. அன்று ஐந்து லட்சம் என்பது பெரிய தொகை. எவ்வளவு பெரிய தொகை என்றால், தங்கப்பதக்கம் வெளியாகி 3 வருடங்களுக்குப் பிறகு தயாரான 16 வயதினிலே படத்தின் மொத்த பட்ஜெட்டே நாலே முக்கால் லட்சங்கள்தான்.
இன்று தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் படத்தின் உண்மையான வசூலை சொல்லத் தயங்குகின்றனர். வருமான வரி கட்ட வேண்டியிருக்குமே என்ற பயம். அன்று அந்த பயம் இல்லை. அல்லது, நேர்மையான வருமான வரியை கட்ட அன்று யாரும் தயங்கவில்லை. அதனால் படங்களின் வசூல் நிலவரங்களை படத்தின் விளம்பரங்களிலேயே வெளிப்படையாக அளித்து வந்தனர். அந்த வெளிப்படைத்தன்மை இன்று வரும்போது, தமிழ் திரைப்பட வர்த்தகம் இன்றைய இருண்ட நிலையிலிருந்து வெளிச்சத்துக்கு வரலாம்.