எண்பதுகளில் வந்த பக்திப் படங்களில்கூட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள். நம்பினோர் கெடுவதில்லை படத்தின் விஜயகாந்த் நடித்திருப்பார். இந்தப் படங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்கள் இடம்பிடித்திருப்பார்கள். எனினும் உண்மையான மல்டி ஸ்டாரர் பக்திப் படம் என்றால் அது 1972 இல் வெளிவந்த சக்திலீலை திரைப்படம்தான்.
திருவிளையாடல், சரஸ்வதி சபதம் படங்களின் வெற்றிக்குப் பிறகு கடவுள்கள் பொறாமை மற்றும் கௌரவத்திற்காக சண்டையிடுவதும், சபதம் செய்வதுமான கதைக்கு கோடம்பாக்கத்தில் கிராக்கி உருவாகியது. பக்திப் படம் என்றாலே, ஏதாவது ஒரு கடவுள் சபதம் போடுவார். அவர் கோபத்தில் விழியை உருட்டுகையில், சிவப்பு வெளிச்சத்தை தாடையிலிருந்து மேல் நோக்கி அடிப்பார்கள். பின்னணி இசை அதிரும். தியேட்டரில் ஒன்றிரண்டு பேராவது சாமியாடுவார்கள். கிளைமாக்ஸ் வேப்பிலை நடனத்துக்கு தியேட்டர் அல்லோகலப்படும்.
சக்திலீலையும் இதே ப்ளேவரில்தான் உருவானது. சிவபக்தரான முனிவர் ஓம்நமச்சிவாயம் என்று சிவனை நோக்கி வழிபட்டுக்கு கொண்டிருப்பார். உலகம் பிரச்சனையில்லாமல் சுழலும் போது, அதில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கென்றே புராணத்தில் உருவாக்கி வைத்திருக்கும் கதாபாத்திரம் நாரதர். அவர் வந்து ஓம் சக்தி என்று முனிவரை ஒறண்டை இழுப்பார். முனிவர் முற்போக்குவாதி. சிவனுக்கு தரும் மரியாதையை கிச்சன் கேபினெட்டான சக்திக்கு தர முடியாது என்பார். இந்த உரையாடலை நம்மூர் ஊடகங்களைப் போல் பலவாறு திரித்து பிரம்மனின் மனைவியான சரஸ்வதியிடம் வத்தி வைப்பார் நாரதர். தனது கணவனை கும்பிடும் பக்தகணங்கள் தன்னை கண்டுக்காமல் போகிறார்களே என்ற கோபம் சரஸ்வதிக்கு உண்டு. நாரதர் வத்தி வைக்க கோபம் கொப்பளிக்கும். இதே போல் லட்சுமி, பார்வதி ஆகியோரிடமும் முனிவர் குறித்து நாரதர் போட்டுக் கொடுப்பார். மனைவிகளின் பிரச்சனையில் முதலில் பாதிக்கப்படுவது கணவன்கள்தானே. இதிலும் முப்பெருந்தேவியரின் கோபத்தால் பிரம்மன், விஷ்ணு, சிவன் மூவருக்கும் பஞ்சாயத்தாகிவிடும். பார்வதி சிவனிடம் உடம்பில் பாதியை எனக்கு தந்துவிட வேண்டும் என ஏற்கனவே டீல் பேசி முடித்திருப்பார். இதனால் முனிவர் மட்டுமில்லை எவராக இருந்தாலும் சிவனை வழிபட்டால் பாதி வழிபாடு சக்திக்கும் செல்லும்.
நமது புராணங்களில் கடவுள் கோபக்காரர் என்றால் அவரது பக்தர் பெருங்கோபக்காரராக இருப்பார். அந்த கோபக்கார பரம்பரையைச் சேர்ந்தவர் நமது இந்த முனிவர். இப்பவே முப்பெருந்தேவியரை என்ன செய்கிறேன் பார் என யாகம் வளர்த்து கொடிய அரக்கனை வரவைப்பார். அதற்குள் சக்தி அவரது மந்திரத்தை தனது சக்தியால் தடுத்து நிறுத்துவார். எனினும் அரக்கன் வெளிப்படுவான். பார்வதி ராட்சஸ உருவம் எடுத்து, அரக்கனை ஒரே வாயில் அடக்கி, வயிற்றுக்குள் தள்ளவிடுவார். அதனைத் தொடர்ந்து அவரது உடல் கறுப்பு நிறமாகிவிடும்.
கடவுளாக இருந்தாலும் கஷ்டம் என்று வந்தால் கணவனிடம்தானே போயாக வேண்டும். பார்வதியும், ஐயகோ என் நிலைமையை பார்த்தீர்களா என்று சிவனிடம் சென்று கண்ணைக் கசக்க, அவரும் கிடைத்த சந்தர்ப்பத்தை விடாமல் பார்வதிக்கு அட்வைஸ் மழை பொழிவார். ஒரு நல்ல பக்தனை சோதிக்கக் கூடாது. தவிர அவனது மந்திரத்தை முழுமைப் பெற விடாமல் தடுத்ததால் அரக்கன் குறைபிரசவமாக வெளிவந்து, இப்படியாகிவிட்டது என்பார். இதற்கு பரிகாரம்...?
பார்வதியின் தவறில் சரஸ்வதியும், லட்சுமியும் பங்குதாரர்கள் என்பதால் அவர்கள் இரு புண்ணிய நதிகளாக பூமியில் - அதாவது இந்தியாவில் பாய வேண்டும். பார்வதி பூமியில் மன்னரின் மகளாக அவதரிக்க வேண்டும். சிவன் பார்வதியைப் போல் மனிதனாகப் பிறந்து, இளைஞனான பின் பார்வதியை தேவியை மணந்து கொள்வதுடன் சாபம் விமோசனம் பெறும்.
இந்த ஆரம்பக்கதையைத் தொடர்ந்து பலவேறு கதைகளைத் தொகுத்து சக்திலீலை எடுக்கப்பட்டது. அனைத்தும் சக்தியின் பெருமை சொல்பவை. இதில் கடைசி எபிசோடில் ஜெயலலிதா பெரியபாளையத்து பவானி அம்மனாக வருவார். வில்லனை ஓடவிட்டு, கையால் அவனைப் பிடித்து தக்காளியை நசுக்குவது போல் நசுக்கி தனது பராக்கிரமத்தை நிலைநாட்டுவார்.
இதில் சிவனாக ஜெமினி கணேசனும், நாரதராக சிவகுமாரும் நடித்திருந்தனர். இவர்கள் தவிர உஷாநந்தினி, மேஜர் சுந்தர்ராஜன், சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா, உஷாராணி, கே.பி.சுந்தராம்பாள், மஞ்சுளா, ஏவிஎம் ராஜன், செந்தாமரை, சகஸ்ரநாமம், காந்திமதி, கே.விஜயன், அசோகன், மனோரமா, வி.கே.ராமசாமி என ஏராளமானோர் நடித்தனர். டி.ஆர்.ராமண்ணா படத்தை இயக்கினார். டி.கே.ராமமூர்த்தியின் இசைக்கு கண்ணதாசன் பாடல்கள் எழுதினார்.
ஜெயலலிதா, சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா, உஷாராணி, உஷாநந்தினி, ஜெமினி கணேசன், சிவகுமார் என இத்தனை முன்னிணி நட்சத்திரங்கள் நடித்த ஒரே பக்திப் படம் இதுவாகத்தான் இருக்கும். இதற்குப் பிறது இத்தனை முன்னணி நட்சத்திரங்கள் ஒரே படத்தில் தோன்றியதில்லை. அந்தவகையில் சக்திலீலையை கடைசி மல்டி ஸ்டாரர் பக்திப் படம் என்று சொல்லலாம். படம் வெளியான போது நல்ல வரவேற்பைப் பெற்றது. பிறகு இதனை இந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டனர்.