1954-ல் வெளியான பொன்வயல் படத்தில் இடம்பெற்ற சிரிப்புதான் வருகுதைய்யா பாடல்தான் சீர்காழி சினிமாவுக்காக பாடிய முதல் பாடல். துறையூர் ராஜகோபால சர்மா இந்தப் பாடலுக்கு இசையமைத்திருந்தார். உண்மையில், இந்தப் படத்திற்கு முன்பு ஜெமினி ஸ்டுடியோவின் அவ்வையார் படத்தில் சீர்காழி ஆத்திச்சூடி பாடியிருந்தார். ஆனால், அவரது பெயர் படத்தில் இடம்பெறாமல் போனது.
இசை என்றால் நுண்ணிய நாதமாக குரல் ஒலிக்க வேண்டும் என்ற கருத்து நிலவிய காலத்தில் தனது வெங்கல குரலால் அதனை மாற்றி எழுதியவர் சீர்காழி கோவிந்தராஜன். இசை விமர்சகர் சுப்புடு ஒருமுறை பேசுகையில், 'சீர்காழிக்கு மைக் தேவையில்லை. அவர் மாங்காட்டில் நின்று பாடினால் மகாபலிபுரத்தில் கேட்கும்' என்று வேடிக்கையாக குறிப்பிட்டார்.
சீர்காழி சினிமா பாடல்கள், பக்தி பாடல்கள், தேசபக்தி பாடல்கள் என 8000-க்கும் அதிகமான பாடல்கள் பாடியுள்ளார். இசைமணி என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தெய்வம் எங்கே என்ற படத்தையும் சீர்காழி ஆரம்பித்தார். அவரது குரு சுவாமிநாத பிள்ளையும், அவரது குடும்பமும் படத்தயாரிப்பை எதிர்க்க, படத்தயாரிப்பை கைவிட்டார்.