1936 இல் சதிலீலாவதி படத்தில் அறிமுகமான எம்ஜி ராமச்சந்திரன், 1978 வெளியான யை மீட்ட சுந்தரபாண்டியன்வரை 136 திரைப்படங்களில் நடித்தார். 42 வருடங்களில் 136 திரைப்படங்கள். அதாவது வருடத்திற்கு சராசரி மூன்று படங்களுக்கு சற்று அதிகம். எம்ஜி ராமச்சந்திரனின் திரைப்பட பட்டியலைப் பார்த்தால் 1961 க்குப் பிறகே அவர் அதிகப் படங்களில் நடிக்கத் தொடங்கியது தெரியவரும். 1961 இல் அவரது நடிப்பில் 5 படங்களும், 1962 இல் 6 படங்களும் 1963 இல் அதிகபட்சமாக 9 படங்களும் வெளிவந்தன.
எம்ஜி ராமச்சந்திரன் ஓய்வே இல்லாமல் நடித்துக் கொண்டிருந்தவேளை ஒரு படத்தை தயாரித்து, இயக்க முடிவு செய்தார். அதற்கு முன் அவர் நாடோடி மன்னன் என்ற ஒரேயொரு படத்தை மட்டுமே இயக்கியிருந்தார். அதுவரை எந்தப் படமும் அவர் இயக்கியதில்லை. 1963 இல் அதிகபட்சமாக 9 படங்கள் நடித்த காலகட்டத்தில் இந்த முடிவை அவர் எடுத்தார்.
படத்தைத் தானே தயாரித்து, இயக்கி, நடிப்பது என முடிவு செய்ததும் நாயகிகளை ஒப்பந்தம் செய்தார். ஒருவர் சரோஜாதேவி, மற்றவர் கே.ஆர்.விஜயா. பி.என்.சுந்தரம் ஒளிப்பதிவாளர். படத்தை அறிவித்து, சில தினங்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஆனால், பிற படவேலைகள் காரணமாக அவரால் படப்பிடிப்பை தொடர்ச்சியாக நடத்த முடியாமல் படம் கைவிடப்பட்டது.
இது நடந்து ஏழு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அதேபடம் அடிமைப்பெண் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இந்தமுறை தயாரிப்பு, நடிப்புடன் நிறுத்திக் கொள்வது என்று புத்திசாலித்தனமாக முடிவெடுத்தவர் இயக்கும் பொறுப்பை கே.சங்கரிடம் ஒப்படைத்தார். பி.என்.சுந்தரம் மாற்றப்பட்டு வி.ராமமூர்த்தி புதிய ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதேபோல் சரோஜாதேவி, கே.ஆர்.விஜயாவுக்குப் பதில் நாயகி, வில்லி என இரு வேடங்களில் நடிக்க ஜெயலலிதா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
படத்தில் அரசர் வேங்கையன், இளவரசன் வேங்கையன் என எம்ஜி ராமச்சந்திரனுக்கும் இரு வேடங்கள். ஜெயலலிதாவுக்கு இளவரசன் வேங்கையனை காதலிக்கும் ஜீவா என்ற கதாபாத்திரம் அத்துடன் வில்லத்தனம் நிறைந்த ராணி பவளவல்லி என இன்னொரு வேடம். வேங்கையனை கொலை செய்யும் பிரதான வில்லன் செங்கோடன் கதாபாத்திரத்தில் அசோகன் நடித்தார்.
அவர்களுடன் சந்திரபாபு, மனோகர், ஜோதிலட்சமி, பண்டரிபாய், சோ ஆகியோரும் நடித்தனர். இந்தப் படத்தில் வில்லி கதாபாத்திரத்துக்கு சில மேனரிசங்களை முயற்சி செய்யும்படி எம்ஜி ராமச்சந்திரன் கூற, ஜெயலலிதாவும் அதன்படி பல மேனரிசங்களை பயிற்சி செய்தார். அதில் விரலால் உதட்டை வழித்து காட்டும் மேனரிசத்தை எம்ஜி ராமச்சந்திரன் ஓகே சொல்ல, அது படத்தில் இடம்பெற்றது. அதுபோல் வில்லி பவளவல்லியின் நடையும் நாயகி ஜீவாவின் நடையிலிருந்து வேறுபட்டிருக்கும். அடிமைப்பெண் ஜெய்ப்பூர் அரண்மனை, ராஜஸ்தான் பாலைவனம், ஒகேனக்கல், ஊட்டி போன்ற பகுதிகளில் தயாரானது.
ஜெயப்பூரில் படப்பிடிப்பு நடந்தவேளை வெயிலை சமாளிக்க எம்ஜி ராமச்சந்திரனுக்கு வெள்ளை நிற ஃபர் தொப்பி வழங்கப்பட்டது. அது பிடித்துப்போக, பிற்காலத்தில் அதையே தனது அடையாளமாக்கிக் கொண்டார். அதுபோல், ஜெயலலிதாவும், நடன இயக்குனர் சின்னி சம்பத்தும் இசை குறித்து பேசிக் கொண்டிருந்ததை கேட்ட எம்ஜி ராமச்சந்திரன், ஜெயலலிதாவை ஒலிப்பதிவு கூடத்துக்கு அழைத்துப்போய், கே.வி.மகாதேவன் இசையில் அடிமைப்பெண் படத்தில் இடம்பெற்ற, அம்மா என்றால்... பாடலை பாட வைத்தார். ஜெயலலிதா சினிமாவில் பாடிய முதல் பாடல் இது. அதேபோல் இந்தப் படத்தில் இடம்பெற்ற ஆயிரம் நிலவே வா... பாடல்தான் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதல் தமிழ்ப் பாடல்.
பொதுவாக பழிவாங்கும் கதைகளுக்கு இயல்பிலேயே ஓர் வசீகரம் உண்டு. அடிமைப்பெண் அந்த வசீகரத்தை பல்வேறு வகைகளில் மேம்படுத்திக் கொண்டது. எம்ஜி ராமச்சந்திரனின் வாள் சண்டையும், பாலைவனத்தில் நடக்கும் ஒட்டகச் சண்டையும், பாடல்களும், கவர்ச்சிகரமான நடனங்களும் கூடுதல் சுவை கொடுத்தன. நாடோடி மன்னனை போல் இல்லாமல் அடிமைப்பெண்ணை முழுக்க ஈஸ்ட்மென் கலரில் தயாரித்தார் எம்ஜி ராமச்சந்திரன்.
படம் வெளியாகி சென்னை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய பகுதிகளில் 100 நாள்கள் ஓடியது. நெல்லை சென்ட்ரலில் 120 தினங்கள் ஓடியது. மதுரை சிந்தாமணி திரையரங்கில் 175 தினங்கள் ஓடி வெள்ளிவிழா கண்டது. ஒரு வணிகத்திரைப்படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்த அடிமைப்பெண் சுமார் 50 லட்சங்களில் தயாராகி, 2 கோடியே 30 லட்சங்களை வசூலித்து, மாபெரும் வெற்றிப்படமானது. 1969 மே 1 வெளியான இப்படம் இன்று 54 வது வருடத்தை நிறைவு செய்கிறது.