ஏவிஎம் நிறுவனம் தங்களது 50 வருட நிறைவை கொண்டாடும் விதமாக 1997-ல் மின்சார கனவு படத்தை தயாரித்தது. யார் படத்தை இயக்குவது என்று தீர்மானிப்பதற்கு முன் பிரபுதேவா ஹீரோ, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளர் என்பதை முடிவு செய்தனர். ரஹ்மானின் பரிந்துரையில் ஒளிப்பதிவாளரும், விளம்பரப்பட இயக்குனருமான ராஜீவ் மேனனிடம் இயக்குநர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. சிறு தயக்கத்திற்குப் பிறகே அந்தப் பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்டார்.
தங்களின் பொன்விழா திரைப்படம் ஒரு கொண்டாட்ட அனுபவமாக இருக்க வேண்டும் என ஏவிஎம் விரும்பியது. அதற்கேற்ப ஒரு கதையை தேர்வு செய்வது முதல் சவாலாக அமைந்தது. ராஜீவ் மேனன் தி சவுண்ட் ஆஃப் மியூஸிக் (1965) ஹாலிவுட் படத்தின் தாக்கத்தில் மின்சார கனவு கதையை எழுதினார். அவருக்கு கதையிலும் திரைக்கதையிலும் வி.சி.குகநாதன் உதவினார். அரவிந்த்சாமி, கஜோல், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், நாசர் என பலரும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
அழகு, படிப்பு, திறமை, நற்குணம் அனைத்தும் கொண்ட அரவிந்த்சாமிக்கு கஜோலின் மீது காதல். அவருக்கோ கன்னியாஸ்திரி ஆக வேண்டும் என்று ஆசை. கஜோலின் மனதை மாற்ற, மனிதர்களை பேசி மயக்கும் பார்பரான பிரபுதேவாவின் உதவியை அரவிந்த்சாமி நாடுகிறார். அவரும் ஒத்துக் கொண்டு கஜோலின் மனதை கன்னியாஸ்திரி கனவிலிருந்து கல்யாணக் கனவுக்கு மாற்றுகிறார். ஆனால், ஒரேயொரு திருப்பம், அவருக்கு காதல் அரவிந்த்சாமியின் மீது வருவதற்குப் பதில் பிரபுதேவாவின் மீது வருகிறது.
மின்சார கனவு 1997 ஜனவரி 14 பொங்கலுக்கு வெளியாகி வெற்றி பெற்றது. எனினும் ஆந்திரா, வடமாநிலங்களில் படம் சோபிக்கவில்லை. படம் பார்த்த ரசிகர்கள் அனைவரையும் ஒரு விஷயம் உறுத்தியது. பிரபுதேவாவைவிட அழகு, திறமை, பணம், படிப்பு, குணம் அனைத்தும் கொண்ட அரவிந்த்சாமியை கஜோல் தவிர்த்ததை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. இதன் காரணமாக பம்பர் ஹிட்டாக வேண்டிய படம், வெற்றிப் படமாக சரிந்தது.
மின்சார கனவு படத்தில் முதலில் அரவிந்த்சாமியைத்தான் பிரதானமாக காட்டியிருப்பார்கள். கதை அவர் மீதே நகரும். கஜோல் மீது அவர் கொண்டிருக்கும் காதலை அழகாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். அரவிந்த்சாமி எப்படியும் கஜோலுடன் சேர வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். பொதுவாக கதை யார் மீது நகர்கிறதோ, அவர்மீதுதான் ரசிகர்களின் கரிசனம் குவியும். அவர்களுக்கு ஏற்படும் ஏமாற்றம் தங்களுக்கு ஏற்படும் ஏமாற்றமாகவே ரசிகர்கள் கருதுவார்கள். அதுதான் மின்சார கனவில் நடந்தது. அதுதான் மின்சார கனவில் நடந்தது.
இதுபோன்ற தருணத்தை பாக்யராஜ் தனது வீட்ல விசேஷங்க படத்தில் பிரமாதமாக கையாண்டிருப்பார். அந்தப் படமும் 1994 ஜனவரி 14 பொங்கலை முன்னிட்டுதான் வெளியானது. வீட்ல விசேஷங்க படத்தின் நாயகி பிரகதி ஒருவரை காதலிப்பார். அவரது வீட்டில் காதலை எதிர்ப்பார்கள். ஓடிப்போய் திருமணம் செய்ய நினைக்கையில் மலையிலிருந்து தவறி விழுந்து பிரகதி தனது நினைவுகளை இழப்பார். அம்னீஷியா நோயாளியான அவர் யார் என்று தெரியாததால் டாக்டராக வரும் ஜனகாரஜ், பாக்யராஜின் பொறுப்பில் அவளை ஒப்படைப்பார். பாக்யராஜ் மனைவியை இழந்தவர். கைக்குழந்தை உண்டு. பாக்யராஜ் கண்ணியவான் என்பதால், பிரகதியை அவரது மனைவி என்று பொய் சொல்லி பாக்யராஜுடன் தங்க வைப்பார்கள். பிரகதிக்கு நினைவு திரும்பும்வரை இந்த நாடகத்தை தொடர்வது என முடிவெடுப்பார்கள்.
ஒருகட்டத்தில் பிரகதிக்கு பாக்யராஜ் தனது கணவனில்லை என்பது தெரிந்துவிடும். அவளிடம் உண்மையை கூறுவார்கள். நினைவு திரும்பாததால் பிரகதிக்கு தான் யார் என்பது அப்போதும் தெரியாது. அவர் அந்த நாடகத்தை - பாக்யராஜின் மனைவி என்பதை - உண்மையாக்க விரும்புவார். அதாவது பாக்யராஜை திருமணம் செய்வது என முடிவெடுப்பார். அதற்குள் பாக்யராஜ் பிரகதிக்காகவே காத்திருக்கும் அவரது காதலரை கண்டுபிடிப்பார். இருவருக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்வார். தனக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருக்கும் காதலனை பிரகதி திருமணம் செய்வதுதான் முறையாக இருக்கும். ஆனால், ரசிகர்கள் பிரகதி பாக்யராஜுடன் இணைய வேண்டும் என்றே விரும்பினர்.
காரணம், படத்தின் கதை பாக்யராஜ் மீதே நகர்த்தப்பட்டிருக்கும். அவரது மகிழ்ச்சி, துக்கம் ஆகியவற்றை மட்டுமே ரசிகர்கள் அனுபவப்பட்டிருப்பார்கள். அதனால் பாக்யராஜையும், பிரகதியையுமே நாயகன், நாயகியாக ரசிகர்களின் மனம் வரித்து கொண்டது. அதன் காரணமாக, பிரகதிக்கு ஒரு காதலன் இருந்தாலும், அவன் அவளுக்காக உயிரைக் கொடுக்க தயாராக இருந்தும், ஒரு குழந்தைக்கு தந்தையான பாக்யராஜை திருமணம் செய்ய வேண்டும் என ரசிகர்களின் மனம் விரும்பியது. அதற்காக தாலி கட்டும் நேரத்தில் காதலனை தவிர்த்து பாக்யராஜை பிரகதி தேர்வு செய்தாலும் அவரது கதாபாத்திரம் அடிவாங்கும். பாக்யராஜ் அந்த இடத்தில் புத்திசாலித்தனமாக ஒரு காட்சி வைத்திருப்பார். பிரகதி கழுத்தில் அவரது காதலன் தாலி கட்டப் போகும் போது பாக்யராஜ் கையிலிருக்கும் அவரது குழந்தை அழும்.
அது பிரகதியின் குழந்தை இல்லை. எனினும், அம்னீஷியாவில் அவர் இருந்தபோது அவர் அக்குழந்தையை தனது குழந்தையாகவே நினைத்திருப்பார். நினைவு திரும்பியதும் அவருக்கு அவை மறந்து போயிருக்கும். எனினும் ரசிகர்கள் மறக்க மாட்டார்களே. பிரகதி தாய்மைபொங்க மணமேடையில் இருந்து இறங்கி வந்து குழந்தையை தூக்கிக் கொள்வார். ரசிகர்கள் எதிர்பார்த்தபடி பாக்யராஜும், பிரகதியும் இணைவதுடன், குழந்தைக்காக காதலனை உதறியதால் பிரகதியின் கதாபாத்திரம் அந்த இடத்தில் உயர்ந்து நிற்கும். இந்தத் திருப்பம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து ரசிகர்களை திருப்திப்படுத்தியது. மின்சார கனவில் இடையில் வந்த பிரபுதேவா அரவிந்த்சாமியிடமிருந்து நாயகியை பறித்துக் கொண்டதால் ரசிகர்கள் அனுபவப்பட்டிருக்க வேண்டிய மகிழ்ச்சியும், திருப்தியும் மட்டுப்படுத்தப்பட்டது.