நடிகர் சலீம் கௌஸ் மறைந்துவிட்டார். வெற்றிவிழா, சின்னக்கவுண்டர், வேட்டைக்காரன் படங்களின் வில்லன் நடிகர் என்றே அவரை பலரும் அறிந்து வைத்திருக்கிறார்கள்.. சலீம் கௌஸ் யைச் சேர்ந்தவர். புனே திரைப்படக் கல்லூரியில் நடிப்புப் பயின்றவர். கோல்ட் மெடலிஸ்ட்.. சென்னை பிரசிடென்ஸி கல்லூரியின் இளங்கலை ஆங்கில மாணவர். சிறந்த மார்ஷியல் ஆர்ட் கலைஞர். கொஜு ரையு கராத்தேயில் நிபுணர். வர்மக்கலை, தைச்சிசுவான் போன்ற தற்காப்பு கலைகள் கற்றவர்.
அன்று சினிமாவில் நுழைகிறவர்களுக்கு சிவாஜி கணேசனின் திரைப்பட வசனங்கள் மனப்பாடமாக தெரிந்திருக்கும். வீரபாண்டிய கட்டப்பொம்மன் போன்ற படங்களின் வசனத்தை எந்த சூழலிலும் மனப்பாடமாக நடித்து ஒப்பிப்பார்கள். சினிமாக்காரர்களுக்கு சிவாஜி என்றால் நாடகத்தில் இயங்கியவர்களுக்கு ஷேக்ஸ்பியர். ஷேக்ஸ்பியர் நாடகங்களின் கதாபாத்திரங்கள், வசனங்கள் இவர்களுக்கு மனப்பாடம். எங்கும், எப்போதும் அந்த கதாபாத்திரங்களாக மாறி ஆச்சரியப்படுத்தக் கூடியவர்கள். சலீம் கௌஸ் அப்படியானவர். பல நாடகங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக ஷேக்ஸ்பியரின் நாடகங்கள். பீனிக்ஸ் பிளேயர்ஸ் என்கிற நாடகக்குழுவை மும்பையில் நடத்தி வந்தார். சினிமாவைத் தாண்டிய அவரது தேடலும், வணிக எதிர்பார்ப்பு மட்டுமாக சுருங்கிப் போன சினிமா கலையும் அதிக படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை அவருக்கு தரவில்லை. கிடைத்த வாய்ப்புகளில் அவர் தன்னை நிரூபித்தார்.
சலீம் கௌஸ் யானை என்றால், அவரது குரல் மணியோசை. அதுதான் இன்றும் அவரை நினைவில் வைத்துக் கொள்ள பலருக்கும் உதவியிருக்கிறது. தமிழைவிட அவர் இந்தியில் அதிகம் நடித்தார். எண்பதுகளின் பிற்பகுதியில் சென்னை தொலைக்காட்சியில் சிவசங்கரி எழுதிய ஒரு மனிதனின் நாடகம் ஒளிபரப்பானது. ரகுவரன் அதில் முக்கிய வேடம் ஏற்றிருந்தார். இதன் இந்தி வடிவத்தில் சலீம் கௌஸ் நடித்தார். Subah என்ற பெயரில் அது ஒளிபரப்பானது. சலீம் கௌஸை இந்தியில் அடையாளங்காட்டிய நாடகமாக அது இருந்தது. அவர் மறைவையொட்டி எழுதப்படும் குறிப்புகளில், சலீம் கௌஸை வேட்டைக்காரன் படத்தில் நடித்தவர் என்று குறிப்பிடுகிறார்கள், சின்னக்கவுண்டரிலும், வெற்றிவிழா படத்திலும் அவர் அதைவிட சிறந்த நடிப்பைத் தந்திருக்கிறார் என அனுபவஸ்தர்கள் திருத்துகிறார்கள். ஆனால், அதுவும் உண்மையில்லை. நீங்கள் சலீம் கௌஸ் என்ற நடிகனின் திறமையை காண வேண்டும் என்றால் பார்க்க வேண்டிய திரைப்படம் தாழ்வாரம். எம்.டி.வாசுதேவன் நாயர் எழுத்தில் பரதன் இயக்கிய மலையாளத் திரைப்படம்.
தாழ்வாரத்தில் மோகன்லாலும், சலீம் கௌஸும் நண்பர்கள். ஒன்றாக மரம் அறுக்கும் வேலை செய்கிறவர்கள். மோகன்லாலின் காதலி அஞ்சு. ஒரு லாரி வாங்க வேண்டும், அஞ்சுவை திருமணம் செய்ய வேண்டும் என்பது அவரது கனவு. லாரி வாங்க நிலத்தை விற்று கொஞ்சம் பணத்தை அஞ்சுவிடம் தந்து வைத்திருக்கிறார். சலீம் கௌஸுக்கு அப்படி எந்த லட்சியமும் இல்லை. கிடைக்கிற பணத்தில் குடி, சூதாட்டம் என கழிகிறவர். ஏமாற்றுவதில் எந்த குற்றவுணர்வும் இல்லை. தீமையின் உலகில் வாழ்வதில் கிலேசம் இல்லாதவர். ஒருமுறை ஒரு பெண்ணை திருட்டுத்தனமாக சந்திக்கச் செல்கையில் அவளது கணவன் வந்துவிட, கத்தியால் அவனை குத்திவிடுகிறார். உடன் வந்த மோகன்லாலிடம் பணத்தை வாங்கிவிட்டு சலீம் கௌஸ் ஓடிவிட, போலீஸ் மோகன்லாலை அடித்து நொறுக்குகிறது. பிரச்சனை அடங்கிய பின் சலீம் கௌஸ் மோகன்லாலை தேடி வருகிறார். அவரை பொருட்படுத்துகிற ஒரே ஆள் மோகன்லால் மட்டுமே. இங்கே வராதே, போலீஸ் மறுபடியும்வரும் என மோகன்லால் சலீம் கௌஸை துரத்தப் பார்க்கிறார். இங்கே வேலை செய்து, அடங்கி ஒடுங்கி இருக்கிறேன். தெரியாமல் ஒரு கை அபத்தம் நிகழ்ந்துவிட்டது என தான் செய்த கொலையை, தெரியாமல் நடந்த ஒரு சின்ன தவறு என்கிறார். மோகன்லாலும் வேறு வழியில்லாமல் அவரை சேர்த்துக் கொள்கிறார்.
மோகன்லாலுக்கும், அஞ்சுவுக்கும் திருமணம் நடக்கிறது. அன்றிரவு முதலிரவு அறையில் அஞ்சு காத்திருக்கையில் சலீம் கௌஸ் மதுவுடன் வந்து மோகன்லாலை குடிக்க நிர்ப்பந்திக்கிறார். வேறு வழியில்லாமல் மோகன்லாலும் குடிக்கிறார். அன்றிரவு சலீம் கௌஸ் மோகன்லாலாலை அடித்துப் போட்டு அவர் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை திருடுகிறார். தடுக்கும் அஞ்சுவை குத்தி கொலை செய்துவிட்டு, பணத்துடன் அங்கிருந்து தப்பிக்கிறார்.
தாழ்வாரம் படம், மோகன்லாலும், சலீம் கௌஸும் இணைந்திருக்கும் புகைப்படத்தை மோகன்லால் கத்தியால் கிழிக்கும் காட்சியிலிருந்து தொடங்கும். ஓடிப்போன சலீம் கௌஸை அவர் தேடிக் கொண்டிருப்பார். இப்போது சலீம் கௌஸ் ராஜு என்கிற பெயரை துறந்து, ராகவன் என்ற புதுப்பெயருடன் மலையில் குடியேறியிருப்பார். அங்கு நாணு (சங்கராடி) என்கிற வயதான மனிதனும், கொச்சுட்டி (சுமலதா) என்ற அவரது வயதுக்கு வந்த மகளும் மட்டுமே இருக்கிறார்கள். அங்காடியில் பதைத்து நின்ற ராகவனை கண்டு, அவனை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து, மலையடிவாரத்தில் இரண்டு ஏக்கர் நிலமும் வாங்க வைத்திருப்பார் நாணு. எந்த சொந்தமும் இல்லாத ஒற்றைத்தடியான ராகவனை கொண்டு தனது மகளை திருமணம் செய்விக்கலாம் என்பது அவரது திட்டம்.
சலீம் கௌஸ் யார், அவர் செய்தது என்ன என்பதை அந்த கள்ளம் கபடமற்ற தந்தை, மகளிடம் சொல்லி புரிய வைக்க முடியாது என்பதை மோகன்லால் அறிந்து கொள்கிறார். சலீம் கௌஸ் வருவதற்காக காத்திருக்கிறார். அவர் வர நேரமாகும் என தெரியும்போது, தாழ்வத்துக்கு செல்கிறார். அங்கு இருவருக்கும் சண்டை நடக்கிறது. கத்தி முனையில், சலீம் கௌஸை செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டு, போலீஸில் சரணடையச் சொல்கிறார் மோகன்லால். அப்போதும், நடந்தது சின்ன கை அபத்தம் என்றுச் சொல்லி, தன்னை சும்மா விடும்படி கெஞ்சுகிறார் சலீம் கௌஸ். அவர் காலைப்பிடித்து கெஞ்சுகையில் மோகன்லாலுக்கும் கொஞ்சம் இரக்கம் வந்துவிடுகிறது. சலீம் கௌஸ் அப்படியே மோகன்லாலை காலைவாரிவிட, கீழேவிழும் மோகன்லாலின் தலையில் அடிபடுகிறது. ஆள்கள் வரும் முன் அவரை அதலபாதாளத்தில் உருட்டிவிடுகிறார்.
மறுநாள் கன்றுக்குட்டியை தேடி வரும் சுமலதா மோகன்லாலை குற்றுயிராக கண்டுபிடிக்கிறார். தவறி விழுந்ததாகவும், கொடியில் மாட்டிக் கொண்டதால் உயிர் பிழைத்ததாகவும் சொல்லும் அவரை, தனது வீட்டு திண்ணையில் கிடத்தி முதலுதவி செய்கிறார். மோகன்லால் தன்னைப் பற்றிய உண்மையைச் சொல்லவில்லை என்பது தெரிய வருகையில் சலீம் கௌஸுக்கு தைரியமாகிறது. அப்படியே சொன்னாலும் அவர்கள் நம்பப் போவதில்லை என்ற ஊக்கத்துடன், திண்ணையில் கிடக்கும் மோகன்லாலை ஆளில்லாத நேரத்தில் கொல்லப் பார்க்கிறார். பூனைக்குப் பயந்த கிளியின் நிலை மோகன்லாலுக்கு. இரவில் சலீம் கௌஸ் பதுங்கி கோடாரியுடன் வருகிறார். மோகன்லால் போராடி தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதனிடையில், தனது குணத்தை அப்படியே மோகன்லால் மீது ஏற்றி சங்கராடியின் மனதை கலைக்கிறார் சலீம் கௌஸ்.
இதற்கு மேல் அந்த மலையில் தனக்கு எதுவுமில்லை என்ற முடிவுக்கு வரும் சலீம் கௌஸ், தந்தையையும், மகளையையும் தாக்கிவிட்டு, அவர்களின் நகை, பணத்துடன் தப்பிச் செல்வார். வழியில் மோகன்லால் அவருக்காக காத்திருப்பார். நீண்ட சண்டைக்குப் பின், பன்றி வெடி தயாரிக்கும் குடிசையில் சலீம் கௌஸை உயிரோடு கொளுத்திவிட்டு, சுமலதா பார்த்து நிற்க, மோகன்லால் திரும்பிச் செல்வார்.
எம்டி.வாசுதேவன் நாயரின் எழுத்தும், பரதனின் இயக்கமும், ஜான்சன் மாஸ்டரின் இசையும் தாழ்வாரத்தை உன்னத படைப்பாக்கியது. ராஜு என்ற லும்பன் கதாபாத்திரத்தில் சலீம் கௌஸ் மகத்தான நடிப்பை வழங்கினார். நடிப்பில் மோகன்லாலைவிட அவர் பல மடங்கு உயர்ந்து நின்றார். எந்த உணர்ச்சியும், கடமையும், நன்றியுணர்வும் இல்லாத, தனது சுகம் மட்டுமே பிரதானமாகக் கருதும், ஏமாற்றவும், முதுகில் குத்தவும் தயங்காத கதாபாத்திரத்தை அவர் அனாயாசமாக செய்தார்.
ராஜு என்ற அந்த கதாபாத்திரத்தை உயிரோட்டமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே தாழ்வாரம் திரைப்படம்.. அதனை தனது நடிப்பால் சிறந்த படமாக்கினார் சலீம் கௌஸ். தாழ்வாரத்தைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு நடிப்பு கலைஞனை வணிக சினிமா தட்டையான வில்லனாக்கி எப்படி வீணடித்திருக்கிறது என்ற ஆயாசம் மேலிடும். இந்திய சினிமா யானைகளை யாசம் கேட்க பயன்படுத்துவதற்கு வெட்கப்படுவதில்லை.