ஷாருக்கானின் புதிய படம் பதான் மத்தியப் பிரதேசத்தில் திரையிடப்படுமா இல்லை தடை செய்யப்படுமா என்பதுதான் இந்தி, ஆங்கில ஊடகங்களின் இன்றைய தலைப்புச் செய்தி. பாய்காட் பதான் ஹேஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. ஒரு படம் இத்தனைதூரம் சர்ச்சையை கிளப்ப என்ன காரணம்? அதற்கு முன் சமீபத்திய பாலிவுட் நடவடிக்கைகளை சற்று பின்னோக்கிச் சென்று பார்க்க வேண்டும்.
கடந்த சில வருடங்களாக இந்தியாவில் மதரீதியான அரசியல் முன்னெடுக்கப்படுகிறது. அது திரைத்துறையிலும் வலுவாக ஊடுருவியுள்ளது. முஸ்லீம்கள் என்பதால் பாலிவுட்டின் மூன்று முன்னணி நடிகர்களான ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் ஆகியோரின் படங்கள் தொடர்ந்து எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது. அவர்களின் படங்கள் வெளியாகும் போது, பாய்காட் பாலிவுட் ஹேஷ்டாக் ட்ரெண்டாவது வாடிக்கையாகி வருகிறது.
இன்னொருபுறம் காஷ்மீர் பைல்ஸ் போன்ற திரைப்படங்கள் அதன் தகுதிக்கு மீறி கொண்டாடப்படுகின்றன. பாஜக ஆளும் மாநிலங்களில் அப்படங்களுக்கு வரிவிலக்கு, படத்தைப் பார்க்க பொது விடுமுறை என ஓர் அரசியல் அஜென்டா வெளிப்படையாக முன்னெடுக்கப்படுகிறது. இந்துத்துவா சக்திகள் திரைத்துறையில் உள்ள நடுநிலையாளர்களை ஓரங்கட்டுவதுடன், இந்த பிரித்தாளும் கோஷத்தின் மூலம் தங்களை வலுப்படுத்திக் கொள்கின்றன.
ரன்பீர் கபூர் ஒரு நிகழ்ச்சியில் தானொரு பீஃப் ப்ரியர் என்று சொன்னதற்காக அவரை கடுமையாக விமர்சித்ததோடு, அவரது பிரமாஸ்திரா படத்தை பாய்காட் செய்யச் சொல்லி ஒரு இயக்கத்தையே நடத்தினர். உலக அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முதலாவதாக உள்ள நாட்டில் ஒருவர், நான் பீஃப் விரும்பிச் சாப்படுவேன் என்பது பெருங்குற்றமாக ஆக்கப்படுகிறது. ரன்பீர் கபூர் மட்டுமின்றி அவரது மனைவி அலியா பட், அவரது தந்தை, சகோதரன் என அனைவரது படங்களையும் பாய்காட் செய்யுங்கள் என்று சில சக்திகள் தொடர்ந்து இணையவெளியில் கூச்சலிடுகின்றன.
அதானி துறைமுகத்தில் பல லட்சம் கோடி போதைப்பொருள் பிடிக்கப்படுகிறது. கைப்பற்றப்பட்ட பல லட்சம் கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் அரசின் கஸ்டடியிலிருந்து மாயமாக மறைந்து போகிறது. இது குறித்து சிறிதும் கவலைப்படாத மீடியாக்கள், ஷாருக்கானின் மகன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட போது அதனை 24 மணிநேரம் ஒளிபரப்பினர். ஷாருக்கின் மகனை தீவிரவாதி போல் சித்தரித்தனர். பெட்டிக்கேஸுக்குகூட தகுதி பெறாத குற்றச்சாட்டு அது என்று நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. கைதுக்கும், விடுதலைக்கும் இடைப்பட்ட காலத்தில் ஷாருக்கானின் இமேஜை மீடியாக்கள் துவசம் செய்தன.
வெறுப்புணர்வால் இந்தி திரைப்பட ரசிகர்களின் மனங்கள் துண்டாடப்பட்டுள்ள நிலையில், இந்திப் படங்கள் எதுவும் வெற்றி பெறாததில் அச்சரியம் இல்லை. பாலிவுட் ஒரேயடியாக நெடித்துப் போயிருக்கும் நிலையில், 2023 ஜனவரி 25 வெளியாகவிருக்கும் ஷாருக்கானின் பதான் அந்த நிலையை மாற்றும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருந்தது. அதற்கேற்ப படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தின் ஒரு பாடலை வெளியிட்டனர். இதில் காவி நிற பிகினி உடையில் இருக்கும் தீபிகா படுகோனுடன் ஷாருக்கான் நடனமாடுகிறார். இந்த காவி உடைதான் இப்போது சர்ச்சையாகியுள்ளது.
காவி இந்துக்களின் புனித நிறம். அதனை ஷாருக்கான் கொச்சைப்படுத்திவிட்டார், இதை இப்படியே அனுமதிக்க முடியாது என்று மத்தியப் பிரதேசத்தின் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்துத்துவ அடிபொடிகள் குறித்து சொல்லவே வேண்டாம். அவர்களின் வெறுப்பு இணையத்தில் நிறைந்து வழிகிறது. இது காவியுடன் நிற்கப் போவதில்லை. கர்நாடகாவில் பள்ளிகளுக்கு காவி நிறம் அடித்த போது காங்கிரஸ் அதனை எதிர்த்தது. தேசிய கொடியில் காவியும் ஒரு நிறம், அதனைக் கண்டு காங்கிரஸ் ஏன் பயப்படுகிறது என்றனர் பாஜகவினர். அதே அவர்கள், அதே தேசிய கொடியில் இடம்பெறும் பச்சை வர்ணத்தை ரயில்நிலையத்துக்கு அடித்த போது, போராட்டம் செய்து அதனை மாற்ற வைத்தனர். இது காவி மீதான பக்தியோ, மரியாதையோ அல்ல. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மீதான தீராத வெறுப்பு. அதற்கு காவி ஒரு காரணம். இல்லையெனில் காவி கட்டி சல்லாபத்தில் ஈடுபட்ட சாமியார்களை இந்நேரம் இவர்கள் நாட்டைவிட்டு துரத்தியிருக்க வேண்டும். அப்படி எதுவும் நடந்ததில்லை. அந்த சாமியார்களை தண்டனையிலிருந்து காப்பாற்றுகிறவர்கள் இந்த காவி சினேகிதர்கள் என்பது முக்கியமானது.