கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள கைதி படம் செப்டம்பர் 27ஆம் தேதி திரைக்கு வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்திற்குப் பின் இயக்கிய கைதி படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ளார். இரவிலேயே எடுக்கப்பட்ட ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள கைதி திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.
விஜய் சேதுபதி நடிப்பில் தீபாவளி பண்டிகையன்று வெளியாக தயாராகி வரும் சங்கத் தமிழன் திரைப்படத்தில் இருந்து கமலா என்ற பாடலின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது. விவேக்-மெர்வின் இசை அமைத்துள்ள இந்த திரைப்படத்தில் வேட்டி கட்டி விஜய் சேதுபதி குத்தாட்டம் போடும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
பாலிவுட்டில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு மைதான் என பெயரிடப்பட்டுள்ளது. தேசிய விருது கிடைத்த பிறகு பாலிவுட் பக்கம் சென்றுள்ள கீர்த்தி சுரேஷ், போனி கபூர் தயாரிப்பில் அமித் ஷர்மா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படம் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி இருக்கும் என்பது படத்தின் பர்ஸ்ட் லுக்கில் தெரியவந்துள்ளது.
சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிக்கும் சாய்ரா ரெட்டி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மும்பையில் இன்று நடைபெறவுள்ளது. சிரஞ்சீவியுடன் நயன்தாரா அமிதாப் பச்சன் விஜய் சேதுபதி என பல மொழி நட்சத்திரங்களும் இந்த திரைப்படத்தில் குவிந்துள்ளதால் இத்திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. படத்தின் டீசர் இன்று மதியம் 2.40 மணிக்கு வெளியாகிறது