நடிகர் சந்தானம் முதல் முறையாக மூன்று வேடங்களில் நடிக்க உள்ளார். நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமான சந்தானம் கதாநாயனாக அவதாரம் எடுத்து தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். தில்லுக்கு துட்டு 2, ஏ1 ஆகிய இரண்டு வெற்றித் திரைப்படங்களை இந்த ஆண்டிலேயே கொடுத்த சந்தானத்திற்கு டகால்டி, சர்வர் சுந்தரம் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கார்த்தி யோகி என்ற அறிமுக இயக்குனரின் இயக்கத்தில் சந்தானம் மூன்று வேடத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சிரஞ்சீவி நடிப்பில் அமிதாபச்சன், நயன்தாரா , விஜய் சேதுபதி என பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகிவரும் சைரா நரசிம்ம ரெட்டி திரை படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சுதந்திரப் போராட்ட காலத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் ஜான்சி ராணியாக அனுஷ்காவும், ராஜபாண்டி என்ற தமிழ் பேசும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். அக்டோபர் 2-ம் தேதி இந்த திரைப்படம் திரைக்கு வர உள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து சித்தார்த், பிரியா பவானிசங்கர், ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். படப்பிடிப்பு துவங்கியது முதல் சித்தார்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கமல்ஹாசனும் இந்த படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். இதுவரை ஏ ஆர் ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகிய இசையமைப்பாளர்களுடன் மட்டுமே பணியாற்றி வந்த சங்கர் முதன் முறையாக இந்த திரைப்படத்தின் மூலம் அனிருத்துடன் கூட்டணி அமைத்துள்ளார்.
இந்திய சினிமாவில் நிஜ வாழ்க்கையை படமாக்குவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. அந்தவகையில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் பாலிவுட் சினிமா இறங்கியுள்ளது. The untold வாஜ்பாய் என்ற பெயரில் உல்லேக் எழுதி வெளியான புத்தகத்தை திரைப்படமாக்கும் பணியில் அமாஸ் பிலிம்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை அடுத்து அஜித்தின் அறுபதாவது திரைப்படத்தை ஹெச். வினோத் எழுதி இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் அஜீத்துடன் மோதும் வில்லன் கதாபாத்திர தேர்வு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இந்த வேடத்தில் நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபாஸ் நடிப்பில் சுஜித் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் வெளியான சாஹோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் முதல் நாளில் வசூலில் பல சாதனைகளை படைத்திருந்தாலும் விமர்சன ரீதியாக பின்னடைவைச் சந்தித்துள்ளது, ஒட்டுமொத்த தெலுங்கு பட உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.