மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்தவர் ரமணி அம்மா. 2017 ஆம் ஆண்டில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமப சீனியர்ஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு பெரும் பிரபலமானார் ரமணி அம்மா. சரிகமப சீனியஸ் நிகழ்ச்சியில் "ராக்ஸ்டார்" பட்டத்தை கொடுத்தனர் நடுவர்கள். இதையடுத்து அவருக்கு திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது.
அதன்படி விஜய் சேதுபதியின் ஜுங்கா, சண்டக்கோழி 2, சூர்யாவின் காப்பான் உள்ளிட்ட படங்களில் ரமணியம்மாள் பாடியுள்ளார். அண்மையில் யோகி பாபு நடிப்பில் வெளியான பொம்மை நாயகி படத்தில் ஒரு பாடலை பாடியிருந்தார். இந்த நிலையில் அவர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 69. இவரது மறைவு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பொம்மை நாயகி பட செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அப்போது பேசிய ராக் ஸ்டார் ரமணி அம்மா, “ நான் எப்போதும் காலைல எழுந்து ஆஞ்சிநேயருக்கு முட்டிப்போட்டு வேண்டிப்பேன். எனக்காக அல்ல உலக மக்கள் ஆரோக்கியமாக இருக்கனும் உணவு கிடைக்கனும்னு கடவுளை வேண்டிப்பேன். கடவுள் அடுத்தவங்களுக்காக வேண்டிக்கிட்டா கண்டிப்பா நிறைவேற்றுவார். எங்கேயோ இருந்த என்னை இன்று இந்த அளவு கொண்டு வந்திருக்காருனா அதுக்கு காரணம் என் தூய மனசு தான். யாருக்கும் தீங்கு நினைக்க கூடாது. விரோதியாக இருந்தாலும் நல்லது நினைக்கனும் நல்லா இருக்கனும்னு பாராட்டனும் அது தான் என் கொள்கை என கூறினார்.
மேலும் கடவுள் வீடு தேடி அனுப்பி வைத்த நான் பெறாத மகன் ஷாந்த் மற்றும் பா. ரஞ்சித் அவர்களுக்கு நன்றி கூறுகிறேன். யோகி பாபுவிற்கும் நன்றி என கூறினார். என் கூட படித்த 52 பேரும் இத்தனை நாள் நான் எங்கே இருக்கேன் என்று கூட கேக்கலை ஆனால் இந்த பாடல் வெளியானவுடன் அவர்கள் அனைவரும் என்னை பாராட்டினார்கள் என்று கூறினார்.