அக்டோபர் 14 ம் நாள் ஆயுதபூஜையை முன்னிட்டு ஜோதிகாவின் 50 வது படமான உடன்பிறப்பே வெளியாகிறது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் அமேசான் பிரைம் வீடியோவுடன் இந்த வருடம் முக்கியமான ஒப்பந்தம் ஒன்றை போட்டது. அதன்படி 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் 4 படங்களை அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக வெளியிடுவது என முடிவானது. முதல் படமாக இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜோதிகாவின் 50 வது படமான உடன்பிறப்பே அமேசான் பிரைம் வீடியோவில் அக்டோபர் 14 ஆம் தேதி வெளியாவதாக அறிவித்துள்ளனர். இதில் ஜோதிகாவின் சகோதரராக சசிகுமாரும், கணவராக சமுத்திரகனியும் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அண்ணன், தங்கை உறவை பிரதானமாக உடன்பிறப்பே சொல்கிறது. நவீன பாசமலராக இந்தப் படம் இருக்கும் என்கிறார் பத்திரிகையாளராக இருந்து இயக்குனராகியிருக்கும் சரவணன். உடன்பிறப்பே தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் வெளியாகிறது. தெலுங்கில் ரத்த சம்பந்தம் என்று பெயர் வைத்துள்ளனர். ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டின் இணை தயாரிப்பு. சூரி, கலையரசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.