இந்திரலோகத்தின் ரம்பை தோழிகளுடன் பூலோகத்தின் அழகை ரசிக்க வருகையில் யமுனை நதியின் அழகில் மனதை பறிகொடுத்து கொஞ்ச அதிக நேரம் அங்கேயே தங்கிவிடுவார். இதனால், இந்திர சபையின் கிளப் டான்சில் பங்கெடுத்துக் கொள்ள முடியாமல் போய்விடும். கோபமான இந்திரன், ஆடுவதைவிட உனக்கென்ன வேறு வேலை என்று, நீ எதைப் பார்த்து ரசித்தாயோ அதன் கரையிலேயே சிலையாக நிற்கக் கடவாய் என சாபமிடுவார்.
அப்போது அங்கு வரும் நாரதரின் பரிந்துரையால் கோபம் தணிந்து, போனால் போகிறது என சாபத்தை பாதியாக குறைப்பார். காலையில் சிலையாக இருக்கும் ரம்பை இரவில் தனது சுயவடிவத்தை பெறலாம். அத்துடன் இந்திர சபையின் டான்சிங் நேரத்தில் வந்து நடனமாடிவிட்டுச் செல்லலாம். இந்திரனின் கோபம் முழுமையாக தணியும் போது அவரது சாபமும் முழுமையாக வாபஸ் பெற்றுக் கொள்ளப்படும்.
இரவானதும் ரம்பை சுயஉருவம் கொண்டு, மாலையிட்டதால் மணவாளனாகிப் போன யதபவிஷ்யனை தன்னுடன் இந்திரலோகம் அழைத்துச் செல்வார். இந்த பூலோகம் டூ தேவலோகம் ட்ரிப் யதபவிஷ்யனுக்குப் பிடித்துப் போகும். இது போதாது என்று ரம்பையின் உதவியால் யமலோகத்துக்கும் விசிட் அடித்து, யமனிடம் மனிதர்கள் மாட்டாமலிருக்கும் வித்தையையும் கற்றுக் கொள்வான்.
யமலோக ரகசியம் பூலோகத்தில் லீக் ஆன விஷயத்தை யமன் இந்திரனிடம் சொல்ல, அதற்குக் காரணம் ரம்பை என்பதை கண்டுணர்ந்த இந்திரன், அவளை பேயாகப் போகும்படி சபிப்பான். அப்படி பூலோகத்தில் பேயாக அலையும் ரம்பை, நாரதரின் அறிவுரைப்படி காசி மகாராஜாவின் மகளின் உடம்புக்குள் புகுந்து கொள்வாள். மகளின் உடம்பில் ஏறிய பேயை ஓட்ட எவ்வளவு முயற்சித்தும் முடியாமல் போகும்.
அந்த நேரம் யதபவிஷ்யன் வர, அவனைக் கண்ட ரம்பை இளவரசியின் உடம்பிலிருந்து வெளியேறி சுய உருவம் பெறுவாள். இதற்கு மேல் கதையை இழுக்க முடியாது என்பதால், ரம்பை, யதபவிஷ்யனை இளவரசியை திருமணம் செய்ய சொல்லிவிட்டு, மானுடர்களுக்கு தேவலோகத்தில் நோ வேகன்சி, மானுடனுடன் சேர்ந்தால் எனக்கும் கெட்அவுட்தான் எனச் சொல்லி தேவலோகம் திரும்புவாள்.
சென்ட்ரல் ஸ்டுடியோஸ் ரம்பையின் காதல் படத்தை தயாரித்தது. சாரங்கபாணி யதபவிஷ்யனாகவும், கே.எல்.வி.வசந்தா ரம்பையாகவும் நடித்தனர். கலைவாணர் நகைச்சுவை ஏரியாவைப் பார்த்துக் கொண்டார். இந்திரனாக ஆர்.பாலசுப்பிரமணியமும், நாரதராக சொக்கலிங்க பாகவதரும், யமனாக புரபஸர் எஸ்.எஸ்.மல்லையாவும் நடித்தனர். பேய் ஓட்டும் மந்திரவாதியாக காளி என்.ரத்னம் சின்ன வேடத்தில் கலக்கியிருந்தார். அவரது அசிஸ்டெண்டாக காமெடி நடிகர் டி.ஆர்.துரைராஜ் நடித்தார். இதுதான் அவர் நடித்த முதல் படம். இவர்கள் இருவருக்கும் டைட்டிலில் கிரெடிட் தரப்படவில்லை. காசி இளவரசியாக டி.ஏ.மதுரம் நடித்திருந்தார்.