33 வருடங்களுக்கு முன்னால் 1989 இல் தமிழில் வெளியான படம் ஒன்று சரித்திரம் படைத்தது. ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுக்கே அந்தப் படத்தின் வெற்றியும், அப்பட நாயகனின் எழுச்சியும்; புரியாத புதிராக இருந்தது. காலத்தின் ஓட்டத்தில் ரஜினியும், கமலும் அதே பிரபல்யத்துடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு இணையாக அன்று பேசப்பட்ட நாயகன் இன்றைய இளைய தலைமுறைக்கு யார் என்றே தெரியாது. மின்னி மறையும் நட்சத்திரங்களுடன் ஒப்பிட்டு நடிகர்களை சினிமா நட்சத்திரங்கள் என்று அழைப்பது எத்தனை பொருத்தமானது.
1989 தமிழ் சினிமா சரித்திரத்தில் முக்கியமான வருடம். அந்த வருடம்தான் புதியபாதை படத்தின் மூலம் பார்த்திபன் என்ற இயக்குநர், நடிகர் அறிமுகமானார். அந்த வருடம்தான் கமலின் அபூர்வ சகோதரர்கள் என்ற அருமையான திரைப்படம் வெளியானது. இந்தியாவின் முதல் லைவ் ஆக்ஷன் வித் அனிமேஷன் காட்சி இடம்பெற்ற ரஜினியின் ராஜா சின்ன ரோஜா படம் வெளியானது. பாலுமகேந்திராவின் சந்தியா ராகம், பாசிலின் வருஷம் 16 என முக்கியமான திரைப்படங்கள் 1989 இல் வெளியாகின.
அந்த வருடம் ரஜினி நடிப்பில் ராஜா சின்ன ரோஜா படத்துடன் மாப்பிள்ளை, சிவா ஆகிய படங்களும் வெளியாகின. அதில் முதல் இரண்டும் ஹிட். மூன்றாவது சுமாராகப் போனது. கமலின் அபூர்வ சகோதரர்கள் ஏற்படுத்திய ஆச்சரியம் இன்றளவும் நீடிக்கிறது. கமலின் அதிகபட்ச வசூல் படங்களில் அதுவும் ஒன்று. அது தவிர பிரபுடன் நடித்த வெற்றிவிழா வெளியாகி அதுவும் ஹிட்டானது.
ஆனால், இந்த வெற்றிகளை சவாலுக்கு இழுத்த ஒரு படம், 1989 ஆம் ஆண்டு ஜுன் 16 வெளியானது. அது கரகாட்டக்காரன். ராமராஜன் நடிப்பில், கங்கை அமரன் இயக்கிய திரைப்படம். அப்போதெல்லாம் ராமராஜன் நடிப்பில் வருடத்துக்கு அரை டஜன் படங்களாவது வெளியாகும். அந்த வருடமும் என்னை பெத்த ராசா, எங்க ஊரு மாப்பிள்ளை, பொங்கி வரும் காவேரி, ராஜா ராஜாதான், அன்புக்கட்டளை, கரகாட்டக்காரன் என ஆறு படங்கள் ராமராஜன் நடிப்பில் வெளியாகின.
ஏப்ரல் 14 வெளியான அபூர்வ சகோதரர்கள் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்க, ஜுன் 16 கரகாட்டக்காரன் திரைக்கு வந்தது. அன்று ராமராஜனின் மோசமான படமும் பி அண்ட் சியில் லாபம் சம்பாதிக்கும். கரகாட்டக்காரனும் முதல் சில தினங்கள் சுமாராகத்தான் போனது. அதன் பிறகு படத்தின் கதை, காமெடி மற்றும் பாடல்களால் பிக்கப்பாகி ஒரு வருடம் ஓடியது. கதை என்று பார்த்தால் தமிழ் சினிமா அரை நூற்றாண்டு அடித்துத் துவைத்த சம்பவம். முறைப்பையன், முறைப்பெண்ணை காதலிப்பது. ஒரேயொரு ட்விஸ்ட், இரண்டு பேருக்கும் இந்த உண்மை தெரியாது. ஏன் தெரியாது என்பதற்கு நாலு வரியில் ஒரு பிளாஷ்பேக் கதை. இதைவிட எளிமையாக ஒரு கதையை சொல்ல முடியாது, அத்தனை எளிமை. ஒருவகையில் குழப்பமில்லாத அந்த எளிமைதான் படத்தின் வெற்றிக்கு காரணம். இரண்டாவது முக்கிய காரணம், படத்தில் வன்மம் என்பது கிளைமாக்ஸில் கொஞ்சமே கொஞ்சம் வரும். மற்றபடி படத்தில் வரும் அனைவரும் நல்லவர்கள். எல்லாமே நேர்மறை காட்சிகள். சண்டைக்காக வைத்திருந்த காட்சியையும், கிளைமாக்ஸுக்காக உருவாக்கிய வில்லனையும் தவிர்த்தால், எந்த கல்மிஷமும் இல்லாத படம்.
ராமராஜன், கனகா காதல் காட்சிகள் அத்தனை பாந்தமாக எடுக்கப்பட்டிருக்கும். கதையோடு இணைந்து வரும் கவுண்டமணி, செந்தில் காமெடி இன்னொரு கிளாஸிக் சம்பவம். இவர்களின் வாழைப்பழ ஜோக்குக்கு தமிழகமே குலுங்கி சிரித்தது. ராமராஜனின் கரகாட்ட குழுவின் ஜனவாச காரும், சொப்பனசுந்தரி காமெடியும், சிவாஜி, பத்மினியை வைத்து செந்தில், கோவை சரளாவை கவுண்டமணி கலாய்ப்பதும் எவர்கிரீன் காட்சிகளாகிப் போனது.
இளைராஜா வழக்கம் போல் தனது தி பெஸ்டை வழங்கினார். மாங்குயிலே பூங்குயிலே..., முந்தி முந்தி விநாயகரே..., குடகுமலை காற்றில் வரும்.., இந்த மான் எந்தன் சொந்த மான்..., ஊருவிட்டு ஊரு வந்து..., பாட்டாலே புத்தி சொன்னா... என அனைத்துப் பாடல்களும் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஒலித்தது. படத்தின் இறுதியில் இடம்பெற்ற மாரியம்மா மாரியம்மா... பாடல் கிளைமாக்ஸுக்கான டெம்போவை ஏற்ற, படம் திரையிட்ட அனைத்து இடங்களிலும் பட்டையை கிளப்பியது.
அன்று ரஜினியும், கமலும் தான் டாப் நட்சத்திரங்கள். அபூர்வ சகோதரர்கள், வெற்றிவிழா படங்கள் ஓடியது என்றால் அதற்குரிய கதையும், உழைப்பும், நடிப்பும் இருந்தன. ரஜினியின் ஸ்டார் வேல்யூவுக்கு ராஜா சின்ன ரோஜா, மாப்பிள்ளை படங்கள் ஓடியதில் ஆச்சரியமில்லை. இவர்கள் இருவரின் ஸ்டார் வேல்யூ ராமராஜனுக்கு இல்லை. கதையும் மிக எளிமையானது. இதன் காரணமாக கரகாட்டக்காரனின் மாபெரும் வெற்றியை பலராலும் புரிந்து கொள்ளவே முடியவில்லை. தவிர, ராமராஜன் நடிக்கும் மோசமான போங்கு படமும் அன்று பி அண்ட் சியில் 50 நாள்களை தாண்டிவிடும். அவரது படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் அதிமுகவினர் வண்டிக்கட்டி வருவது சாதாரண நிகழ்வானது. அடுத்த முதலமைச்சர் ராமராஜன் என்றே அவர்கள் நம்பினர். கரகாட்டக்காரன் பாடல் காட்சி ஒன்றில் கனகா அதிமுக கொடி வண்ணத்தில் பாவாடை அணிந்து வருவார். அந்த சில வினாடி காட்சிக்கு எழுந்த ஆர்ப்பாட்டத்தை கரகாட்டக்காரனை திரையரங்கில் பார்த்தவர்களால் மறந்திருக்க முடியாது. ராமராஜன் ஓர் அதிசயமாக வளர்ந்து வந்த நேரத்தில் வெளியான கரகாட்டக்காரன், அவர் மீதான புதிரை மேலும் வலுவாக்கியது. கரகாட்டக்காரனின் வெற்றி ரஜினி, கமலையே கொஞ்சம் அசைத்துதான் பார்த்தது.
அஸ்திவாரம் இல்லாத வெற்றிக்கு ஆயுள் குறைவு. ராமராஜனுக்கும் அதுதான் நடந்தது. குறுகிய காலத்திலேயே சினிமாவில் இருந்து காணாமல் போனார். இன்றைய இளைய தலைமுறைக்கு அவர் யார் என்றே தெரியாது. அதேநேரம் பாண்டியராஜனின் ஆண்பாவம், கங்கை அமரனின் கரகாட்டக்காரன் போன்ற வெறுப்போ, வன்மமோ இல்லாத எளிய கதைகளைக் கொண்ட திரைப்படங்களுக்கு இன்னும் தமிழ் சமூகத்தில் தேவை இருக்கிறது. பார்வையாளனை உளவியல்ரீதியாக சுத்திகரிக்கும் திறன்வாய்ந்தவை இதுபோன்ற திரைப்படங்கள். வன்மம், வெறி, துப்பாக்கி, கொலை, ஏமாற்று என கொடூரமான 'வீடியோ கேம்'களாக படங்கள் தயாராகிவரும் காலகட்டத்தில் கரகாட்டக்காரன், ஆண்பாவம் படங்களின் தேவை மிகமிக அவசியம்.