1980 இல் வெளிவந்த முரட்டுக்காளைக்குப் பிறகு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வருடத்துக்கு இரண்டு மூன்று படங்களிலாவது நடித்தார். 1981 இல் கழுகு, நெற்றிக்கண், ராணுவ வீரன் என மூன்று படங்கள். 1982 இல் போக்கிரி ராஜா, புதுக்கவிதை, எங்கேயோ கேட்ட குரல் என மூன்று படங்கள். 1983 இல் பாயும் புலி, அடுத்த வாரிசு. 1984 இல் நல்லவனுக்கு நல்லவன், 1985 இல் ஸ்ரீ ராகவேந்திரா, 1986 இல் மிஸ்டர் பாரத் என அந்த மூன்று வருடங்கள் மட்டும் தலா ஒரு படம். அதற்கடுத்த வருடம் வேலைக்காரன், மனிதன், 1988 இல் குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன்.
இந்தப் படங்களைத் தொடர்ந்து மீண்டும் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாகவும், இளையராஜாவின் அண்ணன் பாஸ்கரின் பாவலர் கிரியேஷன்ஸ் படத்தைத் தயாரிப்பதாகவும் முடிவானது. பொதுவாக இந்தி, தெலுங்கு, கன்னடப் படங்களின் உரிமை வாங்கி அதனை ரஜினியை வைத்து தமிழில் ரீமேக் செய்வார்கள். இந்தமுறை அப்படி எதுவும் அமையவில்லை. கதைப்பஞ்சம்.
இந்த நேரம் பஞ்சு அருணாசலம் ஆர்.சுந்தர்ராஜனிடம் கதை இருக்கிறதா என்று கேட்க, அவரும் ஒரே தோற்றமுள்ள இருவரின் ஆள்மாறாட்டக் கதையை கூறியுள்ளார். கதை என்றால் நெடுங்கதையல்ல, சும்மா ஒன் லைன். அதில் ரஜினிக்கான ஸ்கோப் இருப்பதை தெரிந்து கொண்ட பஞ்சு அருணாசலம், ரஜினியை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்லியிருக்கிறார்.