காதல், சென்டிமெண்ட், ஆக்ஷன் என்று முழுக்க கமர்ஷியல் தடத்தில் பயணித்து வந்த ரஜினிகாந்த் தனது 100 வது படம் ஆன்மிக குருவும், கடவுளுமான ராகவேந்திராவைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். ரஜினியை வைத்து பல வெற்றிப்படங்களை இயக்கிய எஸ்பி முத்துராமன் படத்தை இயக்க, ரஜினியை சினிமாவில் அறிமுகப்படுத்திய பாலசந்தரின் கவிதாலயா படத்தை தயாரித்தது. ஸ்ரீ ராகவேந்திராவாக ரஜினியே நடித்தார். அதே பெயரில் படம் வெளியானது.
ஆட்டம், அடிதடி சண்டைகள் நிறைந்த படங்கள் மட்டுமின்றி ஆன்மிகப் பின்னணியில் எடுக்கப்படும் படங்களும் அன்று தமிழகத்தில் வெற்றிகரமாக ஓடின. 1985 செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியான ஸ்ரீ ராகவேந்திரா ரசிகர்களின் வரவேற்பை பெறவில்லை. ஆக்ஷன் ஹீரோவாக ரசித்து வந்த ரஜினியை சாதுவான ஆன்மிக கடவுளாகப் பார்க்க ரசிகர்கள் விரும்பவில்லை. படம் தோல்வியடைந்தது. 100 வது படம் தோல்வியடைவது யாருக்கும் மனவருத்தத்தையே தரும். ஸ்ரீ ராகவேந்திரா படத்தை தயாரித்தது தனது குருவின் நிறுவனம் என்பது ரஜினியின் கூடுதல் கவலையாக இருந்தது.
ஸ்ரீ ராகவேந்திரா நஷ்டத்தை சரி செய்ய, 1987 இல் கவிதாலயாவுக்காக ஒரு படம் நடித்தார் ரஜினி. இந்தமுறை எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் இந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற ஒரு படத்தை தேர்வு செய்தனர். அந்தப் படம்தான் நமக் கலால் (விசுவாசமான வேலைக்காரன் - 1982). பிரகாஷ் மெஹ்ரா இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.
அமிதாப்பச்சன், ஸ்மிதா பாட்டில், வஹுதா ரஹ்மான், ஓம்பிரகாஷ், பர்வீன் பாபி ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருந்த இந்தப் படத்துக்கு நடிகரும், திரைக்கதையாசிரியரும், இயக்குநருமான காதர் கான் வசனம் எழுதியிருந்தார். 'ஐ கேன் டாக் இங்கிலீஷ், வாக் இங்கிலீஷ்,, லாஃப் இங்கிலீஷ்' என அமிதாப்பச்சன் பேசும் வசனம் திரையரங்குகளில் ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டது.
1982 இல் வெளியான நமக் கலால் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த வருடம் இந்தியாவில் வெளியான படங்களில் அதிகம் வசூலித்த திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது. வெற்றிக்கு படத்தின் காமெடி கலந்த கதையும், நடிப்பும் முக்கியமாக பப்பிலஹரியின் இசையும், பாடல்களும் காரணமாக அமைந்தன. இது 1984 இல் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி பெற்றது. தெலுங்கில் அமிதாப்பச்சன் நடித்த வேடத்தில் ரஜினியின் நண்பர் மோகன் பாபு நடித்திருந்தார்.
இந்தி, தெலுங்கு என இரு மொழிகளில் வெற்றி பெற்ற படம், தமிழிலும் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் 1987 இல் நமக் கலால் படத்தை தமிழில் ரீமேக் செய்தனர். அமிதாப்பச்சன் நடித்த வேடத்தில் ரஜினியும், ஸ்மிதா பாட்டில் வேடத்தில் அமலாவும், தாத்தா ஓம்பிரகாஷ் வேடத்தில் வி.கே.ராமசாமியும், சஷி கபூர் நடித்த வேடத்தில் சரத்பாபுவும், பர்வீன் பாபி நடித்த வேடத்தில் பல்லவியும் நடித்தனர். ஸ்ரீ ராகவேந்திரா படத்தில் பணியாற்றிய இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், ஒளிப்பதிவாளர் டி.எஸ்.விநாயகம், எடிட்டர் விட்டல் என அனைவரும் அப்படியே வேலைக்காரனில் பணியாற்றினர். கவிதாலயா தயாரித்தது.
ஸ்ரீ ராகவேந்திரா படத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக வேலைக்காரன் படத்திற்கு எந்த சம்பளமும் வாங்காமல் இலவசமாக நடித்துக் கொடுத்தார் ரஜினி. இந்த நிகழ்வுக்குப் பிறகு இதேபோல் ஒரு நிகழ்வு பாபா படத்தின் போது ரஜினிக்கு ஏற்பட்டது. மீண்டும் ஆன்மிகத்தை மையப்படுத்தி படமெடுக்க நினைத்த ரஜினி பாபா கதையை சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் எடுத்தார். பாபா பலருக்கு நஷ்டத்தை அளித்தது. அவர்கள் நஷ்டஈடு கேட்க, ரஜினி அவர்களுக்கு பணத்தை திருப்பி அளித்தார்.
ஸ்ரீ ராகவேந்திரா படத்தை இயக்கிய எஸ்பி முத்துராமனுக்கு வேலைக்காரன் படத்தை இயக்க வாய்ப்பளித்த ரஜினி, பாபா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவுக்கு - அவர் முன்பு ரஜினியை வைத்து பாட்ஷா, அண்ணாமலை என இரண்டு பம்பர் ஹிட்கள் கொடுத்தும் - அடுத்த வாய்ப்பை அளிக்கவில்லை. வேலைக்காரன் போன்ற ஒரு ஹிட் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு கிடைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.