மாதிரி ஒரு பெரிய நடிகரை வைத்து படம் எடுப்பதென்றால் குறைந்தது 90 நாள்கள் வேண்டும். ரஜினியுடன் பிரபு போன்ற இன்னொரு ஹீரோவும் சேர்ந்தால் படப்பிடிப்பு நாள்கள் 100 ஐ தாண்டும். ஆனால், வெறும் 25 நாள்களில் ஒரு சூப்பர்ஹிட் படத்தை எஸ்.பி.முத்துராமன் எடுத்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கும். 34 வருடங்களுக்கு முன்னால், 1988 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 இதே நாளில் எஸ்.பி.முத்துராமனின் குரு சிஷ்யன் வெளியானது. ரஜினி, பிரபு நடித்திருந்த அந்தப் படம் தமிழகத்தின் அனைத்து சென்டர்களிலும் ஓடி மிகப்பெரிய வசூலை பெற்றது. கௌதமி அந்தப் படத்தில்தான் அறிமுகமானார். ரஜினிக்கு கௌதமி ஜோடி, பிரபுக்கு சீதா. ஆனாலும், வினு சக்ரவர்த்தியுடனான இவர்களின் காம்பினேஷன் காட்சிகள்தான் காமெடியில் திரையரங்குகளை அதிர வைத்தது.
ரஜினியின் பெரும்பாலான வெற்றிப் படங்களைப் போல குரு சிஷ்யனும் இந்திப் படத்தை தழுவி எடுக்கப்பட்டது. தர்மேந்திராவும், ஜிதேந்திராவும், பானுப்ரியாவும் நடித்திருந்த இன்சாப் கி புகர் என்ற திரைப்படம் இந்தியில் சக்கைப்போடு போட்டது. அதன் உரிமையை வாங்கி தமிழில் குரு சிஷ்யனாக்கினார்கள். அந்தக் காலத்தில் படப்பிடிப்பு நாள்கள் குறைவு என்றாலும், ரஜினி போன்ற மாஸ் ஹீரோவின் படத்தை 25 நாள்களில் எடுத்தது ஆச்சரியம். இதற்குப் பின்னால் ஒரு கதை உண்டு.
ரஜினியின் பல வெற்றிப் படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதியவர் பஞ்சு அருணாச்சலம். அவர் பொருளாதாரரீதியில் கஷ்டப்பட்ட நேரம் எஸ்.பி.முத்துராமன், பஞ்சு அருணாச்சலத்துக்கு உதவும்படி ஒரு படத்தில் நடிக்க ரஜினியை கேட்டுக் கொண்டார். ரஜினியும் 10 நாள்கள் கால்ஷீட் தருவதாக ஒத்துக் கொண்டார். ஆனால், எஸ்.பி.முத்துராமனுக்கு திருப்தியில்லை. ரஜினி 19 நாள் கால்ஷீட் தந்தால் அவரை கெஸ்ட் ரோலில்தான் நடிக்க வைக்க முடியும். ரசிகர்கள் ஏமாந்து போவார்கள். எதிர்பார்த்த கலெக்ஷனும் கிடைக்காது.
எஸ்.பி.முத்துராமன் இதனை எடுத்துச் சொல்லி புரிய வைத்த பின், ரஜினி 25 நாள்கள் கால்ஷீட் தர ஒப்புக் கொண்டார். அதற்கு மேல் ஒருநாள்கூட தரமுடியாது, அதற்குள் படத்தை முடிக்க முடியுமா எனக் கேட்க, அந்த சவாலை எஸ்.பி.முத்துராமன் ஏற்றுக் கொண்டார். ரஜினி ஜோடியாக வரும் கீதா கேரக்டருக்கு முதலில் ஜெயஸ்ரீயை போடுவதாகத்தான் இருந்தனர். ஜெயஸ்ரீக்கு அப்போது திருமணம் நிச்சயமானதால் அவர் விலகிக் கொள்ள கௌதமியை ஒப்பந்தம் செய்தனர். தமிழில் அவர் அதுவரை அறிமுகமாகவில்லை. குரு சிஷ்யன்தான் அவரது முதல் தமிழ்ப் படம்.
இந்திப் படத்தின் உரிமையை வாங்கி முதல்நாள் படப்பிடிப்பை சென்னை விஜிபியில் தொடங்கினர். ரஜினி, கௌதமியின் ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு பாடலை படமாக்கினர். கௌதமி நெர்வசாக இருந்ததால், வசனக் காட்சிகளை எடுத்துவிட்டு பாடலை படமாக்கலாம் என தீர்மானித்தனர். முதல்நாளே முட்டுக்கட்டை. ஆனாலும் முத்துராமன் அசரவில்லை. கிளைமாக்ஸ் காட்சியை ஆந்திராவில் உள்ள போரா குகையில் எடுப்பதாக திட்டம். ரஜினியின் கால்ஷீட் காரணமாக அந்தத் திட்டத்தை கைவிட்டு ஸ்டுடியோவில் குகை போல் அரங்கு அமைத்து கிளைமாக்ஸ் காட்சி எடுக்கப்பட்டது.
ரஜினி சொன்னதைவிட இரண்டு நாள் முன்னதாக 23 நாள்களில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை எஸ்.பி.முத்துராமன் எடுத்து முடித்தார். 24 வது நாளில் பிரபு, சீதாவின் வா வா வஞ்சி இள மானே பாடல் படமாக்கப்பட்டது. 25 நாள் கால்ஷீட் என ஒப்புக் கொண்டதால், அந்த இரு தினங்களும் தனக்கு காட்சிகள் இல்லாமலிருந்தும் ரஜினி படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
இன்றும் மெருகு குலையாமல் இருக்கும் ரஜினியின் காமெடிப் படங்களில் குரு சிஷ்யன் முக்கியமானது. இதில் வரும் கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன் பாடலை ஒரே நாளில் படமாக்கினர். அவசரகதியில் எடுக்கப்பட்ட படம் என்றாலும் எந்த இடத்திலும் பிசிறுதட்டாமல் பார்த்துக் கொண்டார் எஸ்.பி.முத்துராமன். படம் வெளியாகி சக்கைப்போடு போட்டது. இந்தப் படம் மட்டுமில்லை. குரு சிஷ்யனுடன் வெளியான கார்த்திக், பிரபுவின் அக்னி நட்சத்திரம், மோகனின் உரிமைகீதம், விஜயகாந்தின் உள்ளத்தில் நல்ல உள்ளம், பாசிலின் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு என எல்லா படங்களும் நன்றாக ஓடி லாபம் சம்பாதித்துக் கொடுத்தன. இன்று ஒரு நாளில் இரண்டு ஹீரோக்களின் படங்கள் வந்தாலே மூச்சுத்திணறிப் போகிறது. அதுவொரு கனாக்காலம் என்பதைத் தவிர சொல்வதற்கு எதுவுமில்லை.