திரைப்பட நட்சத்திரங்கள் விளம்பரங்களில் நடிக்கையில் அந்தப் பொருள்களுக்கு ஒரு மைலேஜ் கிடைக்கிறது. இந்தி திரைப்பட நட்சத்திரங்கள் விளம்பரங்களில் நடிக்க தயங்குவதில்லை. அமிதாப்பச்சன் தொடங்கி ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான், அக்ஷய் குமார், அஜய் தேவ்கான், ரன்பீர் கபூர் என சின்ன, பெரிய நட்சத்திரங்கள் அனைவரும் விளம்பரங்களில் நடிக்கின்றனர். அமிதாப்பச்சன் பிக் பி தயாரிப்பு நிறுவனம் தொடங்கி திவாலான போது அவரை மீட்டு கரைசேர்த்தது இந்த விளம்பரங்கள் எனலாம். இந்தி திரைப்பட நடிகர்களின் வருட வருமானத்தில் கணிசமான பகுதி விளம்பரங்களில் இருந்து வருகிறது.
அப்படியே தென்னிந்தியா பக்கம் வந்தால் அரிதாகவே முன்னணி நடிகர்கள் விளம்பரங்களில் நடித்திருக்கிறார்கள். இளம் நடிகர்களிடம் விளம்பரத்தில் நடிப்பதற்கான தயக்கம் குறைந்திருக்கிறது. சமீபத்தில் கமல் போத்தீஸ் விளம்பரத்தில் நடித்தார். சூர்யா, கார்த்தி போன்றவர்கள் தொடர்ச்சியாக நடிக்கிறார்கள். தெலுங்கில் அல்லு அர்ஜுன் அதிக விளம்பரங்களில் நடிக்கிறார். மகேஷ்பாபு போன்றவர்கள் தேர்வு செய்து குறிப்பிட்ட விளம்பரங்களில் நடிக்கின்றனர். அஜித், விஜய், ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்கள் எந்தெந்த விளம்பரங்களில் நடித்தார்கள் என்பது இந்தத் தலைமுறைக்கு அதிகம் தெரியாது.
அஜித் எந்த சினிமா நிகழ்ச்சிக்கும், பொதுநிகழ்ச்சிக்கும் வருவதில்லை. திரைக்கு வெளியே அவரைப் பார்ப்பது அரிது. அப்படிப்பட்டவர் பல வருடங்கள் முன்பு நெஸ்கஃபே காபி விளம்பரத்தில் நடித்தார். இதில் அவருடன் சிம்ரனும் நடித்திருந்தார். சால்ட் அண்ட் பெப்பர் போன்ற எதையும் அப்போது அவர் முயற்சி செய்திருக்கவில்லை என்பதால் ஸ்மார்ட்டாக இந்த விளம்பரத்தில் தோன்றினார். அஜித்துக்காகவே இந்த விளம்பரத்தை பார்வையாளர்கள் ரசித்தனர். ஒப்பந்தம் காலாவதியானதும் விளம்பரத்திலிருந்து அஜித் விலகிக் கொண்டார். பிறகு சூர்யாவும், ஜோதிகாவும் இந்த விளம்பரத்தில் நடித்தனர்.
விஜய் ஜோஸ் ஆலுக்காஸ், கோக், டாடா டொகோமோ என பல விளம்பரங்களில் நடித்துள்ளார். இதில் ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பரத்தில் அமலா பாலுடனும், பகத் பாசிலுடனும் நடித்திருக்கிறார். தனது அம்மா ஷோபாவுடன் அவர் வரும் விளம்பரம் சென்டிமெண்டாக நான்றாகவே வொர்க் அவுட்டானது. கோக் விளம்பரங்கள் அனைத்துமே ஹிட். அதில் ஒன்றில் கத்ரினாவுடன் விஜய் நடித்திருந்தார்.
சூர்யாவும், மாதவனும் தனித்தனியாக நிறைய விளம்பரங்களில் நடித்துள்ளனர். இப்போதும் நடித்து வருகிறார்கள். பெப்சிக்காக இவர்கள் இருவரும் இணைந்து நடித்த விளம்பரங்கள் பார்வையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதில் மாதவன் ஆய்த எழுத்து படத்தில் வரும் கெட்டப்பில் இருப்பார். அதற்குப் பின் இத்தனை உற்சாகமான காம்பினேஷன் விளம்பரம் வரவில்லை.
ரஜினிகாந்தை விளம்பரத்தில் இதுவரை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அவரும் முன்பு ஒரேயொரு விளம்பரத்தில் நடித்துள்ளார். பாம் கோலா என்ற அந்த விளம்பரத்திலும் ஸ்டைலாக கோலா பாட்டிலை தூக்கிப் போட்டு வாயால் கடித்துத் திறந்து கோலாவை குடிப்பார். தமிழ்நாடு கூட்டுறவு சங்கம் பனைத்தொழிலை வளர்ச்சிப்படுத்த பாம் கோலாவை கொண்டு வந்தது. அரசு நிறுவனம் என்பதால் ரஜினி பணம் வாங்காமல் இதில் இலவசமாக நடித்துக் கொடுத்தார் என்பார்கள்.
கமல் சமீபத்தில் போத்தீஸ் ஜவுளிக்கடை விளம்பரத்தில் நடித்தார். இதற்காக அவர் பெற்ற சம்பளம் பல வாரங்கள் பேசுபொருளானது. ஆனால், இன்றைய இளம்தலைமுறை பிறக்கும் முன்பு அவர் பனியன், லுங்கி விளம்பரத்தில் நடித்திருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கும். அன்றைய முன்னணி பத்திரிகைகள் அனைத்திலும் இந்த விளம்பரங்கள் வந்துள்ளன. லுங்கி, பனியனில் கமல் காட்சி தருவார். அன்றைய பிரபல பிராண்ட் கிப்ஸ் மார்க் லுங்கி மற்றும் பனியன்களுக்காக கமல் நடித்திருந்தார்.