காட்டுக்குள் ரஜினியும், நண்பர்களும் மாட்டிக் கொள்வது, நரபலி கும்பல், மகரிஷி பெயரில் சாமியார் வேடத்தில் வசிக்கும் வில்லன் என கழுகு கதை ஒருகட்டத்துக்கு மேல் வேறு திசையில் பயணிக்கும். ஹாலிவுட்டின் ஜானர் திரைப்படங்களைப் போல் செல்லும் கதை அப்போதைய ரசிகர்களுக்கு அந்நியமாக தெரிந்தது. அதேநேரம் பலரும் கழுகை விரும்பி ரசிக்கவும் செய்தனர்.
கழுகு படத்தின் திரைக்கதையை பஞ்சு அருணாச்சலம் எழுதியிருந்தார். 1975-ல் வெளியான ரேஸ் வித் தி டெவில் திரைப்படத்தை தழுவி கழுகு படத்தின் கதை எழுதப்பட்டது. அதில் இரு நண்பர்கள் தங்கள் மனைவிகளுடன் டெக்சாஸில் உள்ள பள்ளத்தாக்கியில் கேம்ப் அடித்து தங்கியிருக்கையில் எதேச்சையாக ஒரு நரபலி கும்பலை சந்திப்பார்கள். அதுபற்றி மறுநாள் அங்குள்ள ஷெரீப்பிடம் தெரிவிப்பார்கள். அவர் வந்து பார்க்கையில் நரபலிக்கான தடயம் இருக்காது. அதேநேரம் அந்தக் கும்பல் இவர்களை துரத்த ஆரம்பிக்கும்.
இந்த ஜோடிகள் பிக்னிக்குக்காக RV (Recreational vehicle) எனப்படும் சொகுசு வண்டியில் வந்திருப்பார்கள். வெளிநாடுகளில் கேரவனைப் போன்றிருக்கும் ஆர்வி வண்டிகள் பிரபலம். பலரும் பிக்னிக் போவதற்கென்றே ஆர்வி வண்டிகளை சொந்தமாக வைத்திருப்பார்கள். அதன் இன்ஸ்பிரேஷனில் கழுகு படத்தில் சாதாரண பேருந்தை வாங்கி படுக்கை உடன் கூடிய சொகுசு பேருந்தாக மாற்றினார்கள்.
அந்தக் காலத்தில் கழுகு வழக்கமான திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு வெளிவந்தது. இந்தப் படம் குறித்து சமீபத்தில் பேட்டியளித்த எஸ்பி முத்துராமன், கழுகு வித்தியாசமான படம். ஆனால், ரசிகர்களால் அதனை புரிந்து கொள்ள முடியவில்லை என்றார். அது ஒருவகையில் உண்மைதான். ஆனால், இன்றும் ரசிக்கக் கூடிய வித்தியாசமான படமாகவே கழுகு இருக்கிறது.