ஆடுபுலி ஆட்டம் கமல், இணைந்து நடித்தப் படங்களில் கொஞ்சம் ஸ்பெஷல். இவர்கள் இருவரையும் வைத்து தனித் தனியாக ஏராளமான படங்கள் இயக்கிய எஸ்.பி.முத்துராமன் கமல், ரஜினியை வைத்து இயக்கிய ஒரே படம்.இந்தப் படத்திற்குப் பிறகுதான் தானும், ரஜினியும் இணைந்து நடிப்பதில்லை என்ற முடிவை கமல் எடுத்தார். ஓரிரு படங்களுக்குப் பின் கமல், இணைந்து நடிப்பதை தவிர்த்தனர்.
இதனால், ஏவிஎம் தயாரிப்பில் கமல், ரஜினியை வைத்து எஸ்.பி.முத்துராமன் இயக்க இருந்த வாய்ப்பு கைநழுவிப் போனது.ஆடுபுலி ஆட்டம் வெளியான 1977 இல் கமல்தான் முன்னணி நடிகர். ரஜினி இரண்டாவது நாயகன், வில்லன் என நடித்துக் கொண்டிருந்தார்.இதனால் படத்தின் டைட்டிலில் முதலில் கமல் பெயரும், இரண்டாவது ரஜினி பெயரும் வரும்.
படத்தில் கமல் நல்லவர். அவரது காதலி சங்கீதா. கமலுக்கு ஒரு நல்ல வேலை கிடைத்தால் மட்டுமே இவர்களின் திருமணம் நடைபெறும் என்ற நிலையில், கமல் போலீஸ் வேலைக்கான நேர்காணலுக்கு செல்வார். அந்த நேரம் பார்த்து நண்பன் ஒருவனுக்கு உதவ வேண்டி வரும். நேர்காணலை தவறவிடுவார்.அடுத்து நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள் அவரை கிரிமினலாக மாற்றும், ரஜினி உள்பட நான்கு பேருடன் சேர்ந்து வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களை செய்ய ஆரம்பிப்பார். கமல் கிரிமினல் ஆனதை அறிந்து சங்கீதா கன்னியாஸ்திரியாவார்.
இன்றய முன்னணி நடிகர்களின் படங்கள் தமிழில் வெளியாகும் அதேநாள் தெலுங்கிலும் வெளியாகின்றன. இந்த நடைமுறை இன்று நேற்றல்ல எம்ஜிஆர், சிவாஜி காலத்திலிருந்தே இருக்கிறது. கமல், ரஜினி படங்களும் அவ்வாறு இருமொழிகளில் வெளியாவது சாதாரணம்.ஆடுபுலி ஆட்டத்தையும் தமிழ், தெலுங்கு இருமொழிகளில் எடுத்தனர். அதாவது நாயகன், நாயகிகள் போன்ற முக்கியமான கதாபாத்திரங்கள், அவர்கள் இடம்பெறும் காட்சிகள் இரு மொழிகளுக்கும் பொது. சிறு கதாபாத்திரங்களுக்கு தமிழில் தமிழ் நடிகர்களையும், தெலுங்குக்கு தெலுங்கு நடிகர்களையும் பயன்படுத்தினார் எஸ்.பி.முத்துராமன்.
ஆடுபுலி ஆட்டத்தின் கதை, வசனத்தை இயக்குனர் மகேந்திரன் எழுதியிருந்தார். பக்கா கமர்ஷியல் எழுத்து. கமலும், ரஜினியும் போட்டிப் போட்டு நடித்தது ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது. ஸ்ரீப்ரியா மாடர்ன், சேலை என இருவித உடைகளிலும் ரசிகர்களை கவர்ந்தார். இந்தப் படத்தில் ரஜினியின் கதாபாத்திரப் பெயர் ரஜினி. அதேபோல் நடிகர்கள் நட்ராஜ், முத்தையா இருவருக்கும் அவர்களின் பெயர்களே கதாபாத்திரப் பெயர்களாக வைக்கப்பட்டன. ஆடுபுலி ஆட்டம் தமிழைவிட தெலுங்கில் அமோக வெற்றியை பெற்றது.
ஒவ்வொரு திரையரங்கும் படம் எவ்வளவு வசூலித்தது என பத்திரிகையில் விளம்பரம் தருமளவுக்கு தெலுங்கில் படம் ஹிட்டானது. ஆடுபுலி ஆட்டத்துக்கு விஜய பாஸ்கர் சிறப்பான இசையும், பாடல்களும் தந்திருந்தார். பாபுவின் கறுப்பு வெள்ளை ஒளிப்பதிவை காவியம் என்றே கூறலாம். அத்தனை நேர்த்தி, அத்தனை அழகு. இந்தப் படத்தை மலையாள நடிகர் சத்யனின் ஒப்பனையாளர் சாந்தி நாராயணன் தயாரித்தார். படத்தால் அவருக்கு பெத்த லாபம்.