தனுஷ் - ரஜினிகாந்த் தேசிய திரைப்பட விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. 2019-ம் ஆண்டிற்கான 67-வது தேசிய விருதுகள் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. திரையுலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது ரஜினிக்கு அறிவிக்கப்பட்டு, இன்று நடந்த தேசிய விருது வழங்கும் விழாவில் வழங்கப்பட்டது. விருதைப் பெற்றுக் கொண்ட ரஜினிகாந்த், இதனை தனது குருநாதர் கே.பாலச்சந்தருக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார். அசுரன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது, தனுஷுக்கு 2-வது தேசிய விருது என மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறது ரஜினி குடும்பம். ஒரே நாளில், ஒரே மேடையில் ரஜினி - தனுஷ் இருவரும் விருது வாங்கிய வரலாற்று நிகழ்வும் இன்று நடந்தது.