ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ரஜினிகாந்த் படங்கள், சிரஞ்சீவி படங்கள்" width="678" height="430" /> ரஜினியும், சிரஞ்சீவியும் ஒரே நேரத்தில் திரைப்படக் கல்லூரியில் பயின்றவர்கள். ஒரே காலகட்டத்தில் நடிப்பு வாய்ப்புக்காக கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கியவர்கள். இவர்கள் காம்பினேஷனில் 1980 இல் காளி திரைப்படம் வெளியானது.
காளி பலவகைகளில் முக்கியமான படம். மலையாளப் படங்கள் இயக்கி வந்த ஐ.வி.சசி காளியை இயக்கினார். இதற்கு இரண்டு வருடங்கள் முன்புதான் அவர் கமல், ஷீலா, சீமா நடிப்பில் ஈட்டா என்ற படத்தை இயக்கியிருந்தார். கவர்ச்சியும், காமமும், உணர்ச்சியும் கொந்தளிக்கும் ஈட்டா இன்றும் மலையாளத்தில் பேசப்படும் படங்களுள் ஒன்று. அதுபோன்ற உணர்ச்சிகரமான கதையை ஐ.வி.சசி தமிழில் எடுப்பார் என்று எண்ணினர். காளியின் திரைக்கதையை இயக்குனர் மகேந்திரன் எழுதினார்.
காளி ஒரு வழக்கமான பழிவாங்கும் திரைப்படம். ரஜினிக்கு தனது அக்கா வெண்ணிறாடை நிர்மலாவின் குழந்தைகள் என்றால் உயிர். வெண்ணிறாடை நிர்மலாவின் கணவர் மில் தொழிலாளி. கூலி உயர்வு கேட்டு போராடியதால் அதன் உரிமையாளர் சத்யநாராயணாவின் (பஞ்சதந்திரத்தில் ஸ்ரீமனின் மாமாவாக, சின்ன கல்லு பெத்த லாபம் என்று டயலாக் பேசுவாரே, அவர்தான்) ஆள்கள் இரு குழந்தைகளையும் அவமானப்படுத்த ரஜினி அவர்களை அடித்து உதைப்பார். அதில் ஒருவன் இறந்துவிட ரஜினிஜெயிலுக்குப் போவார். இதனிடையில் சத்யநாராயணா அந்த குழந்தைகளை கொன்றுவிடுவார். சிறையிலிருந்து திரும்பும் ரஜினி சத்யநாராயணாவை பழிவாங்குவதுதான் காளி படத்தின் கதை.
சிறையிலிருந்து திரும்பும் ரஜினி கிளப் ஒன்றில் எதிர்பாராதவிதமாக விஜயகுமாருடன் மோத நேரிடும். அதில் தோற்றுவிடும் விஜயகுமார் மீண்டும் சண்டையை தொடர, ரஜினியின் இருப்பிடத்தக்கு வருவார். அப்போது ரஜினியை கொலை செய்ய ஆள்கள்வர, அவர்களுடன் சண்டையிட்டு தூங்கிக் கொண்டிருக்கும் ரஜினியை காப்பாற்றுவார். அதன் பிறகு இருவரும் நட்பாவார்கள்.
படத்தின் கதை ரசிகர்களை கவரவில்லை. யார் வில்லன் என்று தெரிந்த பிறகும் பழிவாங்கலை இழுத்துக் கொண்டு சென்றதும், எந்தத் திருப்பங்களும் இல்லாத திரைக்கதையும், இரண்டு சீமாவும் ஒரே தாய்க்கு பிறந்தவர்கள் என்ற வழவழா ட்விஸ்டும் ரசிகர்களை ரொம்பவே சோதித்தது. அதிகம் எதிர்பார்த்த சண்டைக் காட்சிகளும் எடுபடவில்லை.