தமிழின் பாக்ஸ் ஆபிஸ் கிங் அன்றும் இன்றும் ரஜினியே. காதல், நகைச்சுவை, சென்டிமெண்ட், சண்டைக் காட்சிகள் என அனைத்தும் கலந்த ஹீரோயிச கமர்ஷியல் சினிமாக்களில் மட்டுமே நடித்து வருகிறார். ஸ்ரீ ராகவேந்திரா, குசேலன் என இரு படங்கள் விதிவிலக்கு. மற்றவை அனைத்து நவரசங்களும் கலந்த ஹீரோயிச வணிகப் படங்களே. இதன் டார்கெட் வசூல் மட்டுமே.
பாட்ஷாவின் தெலுங்குப் பதிப்பு 1995 ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியானது. அந்தவகையில் தெலுங்குப் பதிப்பு நேற்று 27 வருடங்களைப் பூர்த்தி செய்து இன்று 28 வது வருடத்திற்குள் நுழைகிறது. தெலுங்குப் பதிப்பில் என்ன விசேஷம்? வேறென்ன, வசூல்தான். ஆந்திராவில் (அப்போது தெலுங்கானா தான் இல்லையே) பாட்ஷா தெலுங்குப் பதிப்பு 27 திரையரங்குகளில் 100 நாள்கள் ஓடியது. தமிழ்ப் படத்தின் தெலுங்கு டப்பிங் அதற்குமுன் இப்படி தாறுமாறாக ஓடியதில்லை. பல திரையரங்குகளில் 100 நாள்கள் ஓடியது. விஜயவாடா அலங்கார் திரையரங்கில் 135 தினங்கள் ஓடியது தான் அதிகபட்சம். பிறகு விஜயவாடாவில் பிற திரையரங்குகளில் வெளியாக ஷிப்ட் முறையில் 175 நாள்களை தொட்டது.
பாட்ஷா படத்தின் கதையை உருவாக்கியதில் ரஜினி நடித்த இந்திப் படம் HUM - க்கு முக்கிய பங்குண்டு. இதில் அமிதாப்பச்சன் மூத்த சகோதரராக வருவார். அவரது தம்பிகளாக கோவிந்தா, ரஜினிகாந்த். தம்பிகள் என்றhல் அமிதாப்பச்சன் மற்றும் ரஜினி, கோவிந்தாவின் அப்பா ஒருவர், அம்மா வேறு. பாட்ஷாவில் வருமே அதுபோல. இந்திப் படத்தில் கோவிந்தாவுக்கு போலீஸ் அகடாமியில் சேர்வதற்கு அமிதாப்பச்சன் முயற்சி எடுப்பது போல் ஒரு காட்சி வரும். படத்தின் இயக்குநர் முகுல் எஸ்.ஆனந்துக்கு அந்தக் காட்சியில் திருப்தியில்லை.