p ரஜினியின் அருணாச்சலம் படத்தை இயக்க சுந்தர் சி.க்கு வாய்ப்பு கிடைத்தது ஒரு சுவாரசியமான நிகழ்வு. அவரே அதனை பகிர்ந்திருக்கிறார். சுந்தர் சி.யை அழைத்து, கோயிலில் மணி அடிப்பவன் பற்றிய ஒரு கதையை கூறியிருக்கிறார். கதை சுந்தர் சி.க்கு பிடிக்கவில்லை. ஆனால் அந்த நேரம் பஞ்சு அருணாசலம் ரஜினியை பற்றி கூறிய வார்த்தைகள் அவரது நினைவுக்கு வருகின்றன. ரஜினி தன்னுடைய கருத்துடன் யார் உடன்படுகிறார்களோ அவர்களுடன் மட்டும் தான் பயணிப்பார் என்று என்றோ எப்போதோ பஞ்சு அருணாசலம் கூறியது நினைவுக்கு வர தனக்கு பிடிக்காத அந்தக் கதையை சூப்பர் என்று பாராட்டியிருக்கிறார் சுந்தர் சி.
மகிழ்ச்சியடைந்த ரஜினி அவரை தனது அடுத்த படத்தின் இயக்குனராக ஆக்குகிறார். அதன்பிறகு கதை விவாதத்தில் நிறைய மாற்றங்களுக்கு உட்பட்டு அருணாச்சலம் திரைக்கதை உருவாகிறது. அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நான்தாண்டா பாடலை ரஜினியை வைத்து படமாக்குகிறார்கள். ரஜினிக்கு பிடித்தமான கோவிலில் படப்பிடிப்பு. நடனமாடும் இடத்தில் சிவலிங்கம் இருந்தால் நல்லது என்று அவர் விரும்ப, அந்த நேரத்தில் சிவலிங்கத்துக்கு எங்கே போவது? என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. கேட்பது ரஜினி, சிவலிங்கம் வந்தாக வேண்டும்.
சமையலுக்கு பயன்படும் அண்டாவைப் பார்த்த கலை இயக்குனர் அதை அப்படியே கவிழ்த்துப் போட்டு கருப்பு பெயிண்ட் அடித்து அதனை சிவலிங்கமாக மாற்றுகிறார். அந்தப் பாடலில் நாம் பார்ப்பது சிவலிங்கம் அல்ல, சமையலுக்குப் பயன்படும் அண்டா. கலை இயக்குநரின் சமயோஜித புத்தியால் ரஜினி விரும்பிய சிவலிங்கத்தை அங்கேயே அப்போதே உருவாக்க முடிந்தது. இந்த சமயோஜித புத்தி சினிமாவில் வேலை பார்க்கும் அனைவருக்கும் தேவை. குறிப்பாக உதவி இயக்குநர்களுக்கு.
இதேபோல் ஒரு சம்பவம் கமலின் மகாநதி படத்தின் போது நடந்தது. அதுவும் ஒரு பாடல் காட்சி. அருணாச்சலம் படப் பாடலை போலவே அதுவும் கோவிலில் படமாக்கப்பட்ட பாடல். ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி என்று அதுவும் கடவுளை துதிக்கக் கூடிய பாடல். ஜலதரங்க இசை வரும் பகுதியில் ஜலதரங்கம் காட்சியில் இருந்தால் நன்றாக இருக்கும் என கமல் விரும்பியிருக்கிறார். அந்தப் படத்தில் உதவி இயக்குனராக இருந்த சேரனிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. ஜலதரங்கம் என்பது ஒரு இசைக்கருவி என்பதே அப்போதுதான் அவருக்கு தெரிகிறது. அது யாரிடம் இருக்கும் என்று தேடி கண்டுபிடித்து வாங்கி வருவதற்குள் குறிப்பிட்டக் காட்சியை படமாக்கிவிட்டார்கள். கமலுக்கு கேட்டது கிடைக்கவில்லை என்ற கோபம். இதேபோல் பல விஷயங்கள் மகாநதி படத்தில் நடக்க, கமல் கோபப்பட, சேரன் உட்பட 4 பேர் அப்படத்தில் இருந்து விலகினார்கள்.