பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து அதே பெயரில் படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். இரண்டு பாகமாக உருவான இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லக்ஷ்மி, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. குறிப்பாக ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடித்துள்ளனர். படத்திற்கு இசை இசைப் ஏ.ஆர்.ரஹ்மான். பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் வசூலை குவித்தது. இதையடுத்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தினை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். மேலும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் 2023, ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், அர்ஜுன், திரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், சாண்டி என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துவரும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றுவருகிறது. அடுத்த 3 மாதங்களுக்கு தொடர்ச்சியாக படப்பிடிப்பு பணிகள் அனைத்தையும் முடிக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படம் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ரசிகர்கள் பலரும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் இந்த படம் பாக்ஸ் ஆபிசில் பெரிய சாதனையை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் சிவா இயக்கத்தில் தனது 42-வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. சூர்யா 42 என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாத தொடக்கத்தில் மீண்டும் தொடங்கியது. மெகா பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் 3டி பீரியடிக் டிராமாவாக 10 மொழிகளில் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயினாக நடிக்கும் சூர்யா 42 பீரியட் படம், சூர்யாவின் அதிக பட்ஜெட் படமாக இருக்கும். மேலும் அவர் இப்படத்தில் 5 வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. 'சூர்யா 42' படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படமும் இந்த ஆண்டு இறுதிக்குள் திரையரங்குகளில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
1996-ல் வெளியான 'இந்தியன்' படத்தின் தொடர்ச்சியாக 'இந்தியன்-2' படம் தற்போது தயாராகி வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த 'இந்தியன்-2' படத்தின் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'அண்ணாத்தே' படத்திற்குப் பிறகு, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' படத்தின் வெளியீட்டிற்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் ஆக்ஷன் த்ரில்லர் படமாக இருக்கும் என்றும் 2023 கோடையில் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமன்னா, பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தில் ரஜினிகாந்த், ஜெயிலர் முத்துவேல் பாண்டியனாக நடிக்கிறார். பிரபல மலையாள நடிகர் மோகன்லாலும் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிவராஜ் சிவகுமார் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மஃப்டி. இந்தப் படம் சிலம்பரசன் நடிப்பில் பத்து தல என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஸ்டூடியோ கிரீன் மற்றும் பென் ஸ்டூடியோஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.