கண்ணதாசன் 1927 ஆம் ஆண்டு, ஜுன் 24 ஆம் தேதி இதோ நாளில் பிறந்தார். இன்று அவருக்கு 95 வது பிறந்தநாள். கண்ணதாசன் சிறந்த கவிஞர், தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பாடல்களை எழுதியவர், எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி கமல், ரஜினிவரை ஏராளமான நடிகர்கள், இசையமைப்பாளர்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார் என்பது போன்ற செய்திகள், சூரியன் காலையில் தோன்றி மாலையில் மறையும் என்பதைப் போல அனைவருக்கும் தெரிந்தவை.
கண்ணதாசன் பாடல் எழுதிய காலத்தில் அவரது திநகர் வீட்டு முன்பு தயாரிப்பு நிறுவனங்களின் கார்கள் அணிவகுத்து நிற்கும். அன்று எந்த கம்பெனிக்கு பாடல் எழுதலாம் என கவிஞருக்கு தோன்றுகிறதோ, அந்தக் காரில் அவர் ஏறுவார். மற்றவர்கள் கிளம்பிப் போய்விட்டு, மறுநாள் காலையில் முந்தைய நாள் போலவே காருடன் காத்திருப்பார்கள்.
ஒருமுறை முன்னாள் முதல்வர் கலைஞருடன் ரயில் பயணம் மேற்கொள்கிறார் கண்ணதாசன். கவிஞரிடம் பணம் இல்லை. கலைஞர் தன்னிடம் இருக்கும் பணத்தைத் தந்து மூன்றாம் வகுப்பு டிக்கெட் எடுக்கச் சொல்கிறார். அப்படி எடுத்தால்தான் மீதி பணத்தில் அவர்களால் சாப்பிட முடியும். ஆனால், கவிஞரோ, காசுதான் இருக்கே என்று இரண்டாம் வகுப்பு டிக்கெட் எடுக்கிறார். இருந்த பணம் அனைத்தும் டிக்கெட்டுக்கே போய்விடுகிறது. அந்தப் பயணம் முழுக்க கவிஞரும், கலைஞரும் சாப்பிடாமலே பசியுடன் இருந்திருக்கிறார்கள். இதனை விலாவரியாக தனது நெஞ்சுக்கு நீதியில் எழுதியிருக்கிறார் கருணாநிதி.
ஒருமுறை கம்பராமாயணத்தை எரிக்கும் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். எரிப்பதற்காக அனைவரிடமும் கம்பராமாயணத்தை தந்திருக்கிறார்கள். கண்ணதாசனிடமும் ஒரு பிரதி தரப்பட்டிருக்கிறது. மற்றவர்கள் அதனை எரிக்க, கண்ணதாசனோ, எரிக்கிறதுதான் எரிக்கிறோம், படித்துவிட்டு எரிப்போம் என கம்பராமாயணத்தை படிக்க ஆரம்பித்திருக்கிறார். அவரால் புத்தகத்தை கீழே வைக்கவே முடியவில்லை. முழுவதையும் படித்துவிட்டு சாஷ்டாங்கமாக கம்பராமாயணத்தை விழுந்து வணங்கியிருக்கிறார். அதன் பிறகுதான் அவர் ஆத்திகராக மாறினார் என ரஜினி மேடையில் கூறினார்.
கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. திருப்புகழ், ஆண்டாள் பாசுரங்கள் உள்ளிட்டவைகளில் அழ்ந்த ரசனை உள்ளவர். கிருஷ்ணன் (கண்ணன்) மீதுள்ள ஈடுபாட்டால் முத்தையா என்ற பெயரை கண்ணதாசன் என்று மாற்றிக் கொண்டவர். முத்தையா கண்ணதாசனாக மாறும் முன்பே கிருஷ்ணனையும், கண்ணனையும் குறித்து தீர அறிந்தவர். அவர் கம்பராமாயணம் படித்து ஆத்திகராக மாறினார் என்று ரஜினி வெளியிட்ட தகவல் புதியது, ஆச்சரியமானது. கண்ணதாசனின் அரசியல் நிலைப்பாடு குறித்தும் இதுபோல் ஏராளமான கதைகள் உண்டு. கண்ணதாசன் கவிதைகள் எழுதினார், உலகம் அவரைக் குறித்த கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறது.