கடந்த வெளிளிக்கிழமை (24-06-2022) நடித்த உழைப்பாளி வெளியாகி 29 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனை ரஜினி ரசிகர்கள் வழக்கத்தைவிட உற்சாகமாக கொண்டாடினார்கள். இணையமெங்கும் உழைப்பாளி படத்தின் புகைப்படங்கள் பகிரப்பட்டு ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வழக்கத்தைவிட உழைப்பாளி படத்திற்கு ரசிகர்கள் காட்டிய உற்சாகத்துக்குப் பின்னால் பல காரணங்கள் இருந்தன.
தயாரிப்பு செலவு அதிகரிக்க நடிகர்களின் சம்பளமே காரணம் என்ற குற்றச்சாட்டு முன்பே இருக்கிறது. தொண்ணூறுகளின் ஆரம்பத்திலும் இப்படியொரு பிரச்சனை கிளம்பியது. விநியோகஸ்தர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் ஆகிய மூன்றும் ஆலோசனை நடத்தின. இறுதியில் ஒரு தீர்மானத்தை எட்ட, மூன்று சங்கங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டது.
இந்த நேரத்தில் தமிழின் பழம்பெரும் நிறுவனமான விஜயா வாஹினி 20 வருடங்களுக்குப் பின் படம் தயாரிக்க முடிவு செய்தது. ரஜினியும் கால்ஷீட் தந்தார். தன்னை வைத்து பணக்காரன், மன்னன் வெற்றிப் படங்களை தந்த பி.வாசுவை இயக்குநராக ரஜினி சிபாரிசு செய்ய, தயாரிப்பாளரும் அதனை ஏற்றுக் கொண்டார். அந்த நேரத்தில் விநியோகஸ்தர்கள் சங்கம் ரஜினி படங்களை வாங்குவதில்லை என அவருக்கு ரெட் கார்ட் போட்டது. திரையுலகில் இது சர்ச்சையை உருவாக்கியது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் சிந்தாமணி முருகேசன்தான் இந்த ரெட் கார்ட் உத்தரவை பிறப்பித்தார். அப்போது அவர் தென்னிந்திய வர்த்தக சபை துணைத்தலைவராகவும் இருந்தார். ஒரு நடிகரின் படத்துக்கு விநியோகஸ்தர்கள் சங்கம் ரெட் கார்ட் போட்டால் யாரும் படத்தை வாங்க முன்வரமாட்டார்கள்.
பி.வாசு 58 தினங்களில் உழைப்பாளியை முடித்தார். ஒரு மைனா மைனாக்குருவி மனசார பாடுது..., உழைப்பாளி இல்லாத நாடுதான் எங்கும் இல்ல..., ஒரு சோலக்கிளி சோடிதன்னை தேடுது தேடுது..., அம்மா அம்மா எந்தன் ஆருயிரே..., முத்திரை போட்டு குத்திடு தப்பாது ராஜா... என இளையராஜா அட்டகாசமான பாடல்களை படத்திற்குப் போட்டிருந்தார்.
படத்தின் வெற்றியை கொண்டாட வேண்டாம் என்று தடுத்தார் ரஜினி, உழைப்பாளியின் வெற்றி விநியோகஸ்தர்களை யோசிக்க வைத்தது. ரஜினி தொடர்ந்து படங்களை திரையரங்குகளுக்கு தந்தால் பொழப்பு போய்விடும் என்பதை உணர்ந்தவர்கள் இறங்கி வந்தனர். ரெட் கார்ட் விலக்கிக் கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரஜினிஅறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
'என்னுடைய படங்களை விநியோகஸ்தர்கள் வாங்கக்கூடாது என்று விநியோகஸ்தர்கள் சங்கம் எடுத்த தீர்மானத்துக்கு எதிராக, என்னை ஆதரித்த எல்லா நடிகர்-நடிகைகளுக்கும், என்னுடைய இனிய நண்பர் கமலஹாசன், திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் மோகன் காந்திராமன், மற்றும் அவர் தலைமையில் இயங்கி வரும் 24 சங்க நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும், நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சங்க தலைவர் ராதாரவி, திரை அரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் டி.ராமானுஜம் ஆகியோருக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும், ஏனைய தலைவர்களுக்கும் நன்றி.
சரியான காலத்தில் சுமூகமான முடிவை எடுத்த திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர்-என்னுடைய நண்பர் சிந்தாமணி முருகேசனுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தவறு செய்வது மனித இயல்பு. செய்த தவறை உணரும் பக்குவம் வரும் பொழுதுதான் உண்மையான மனிதர்கள் ஆகிறோம். இனிவரும் காலங்களில் நமக்குள் மனக்கசப்பு, அபிப்பிராய பேதங்கள் இல்லாமல் எல்லோரும் சிறப்புடன் வாழஇ நாம் ஒற்றுமையுடன் பாடுபடுவோம்' என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த விஷயத்தில் கவனிக்கப்பட வேண்டியது ரஜினி, கமலுக்குள் இருந்த ஆழ்ந்த புரிதல். இருவரில் யாருடைய படங்கள் அதிக நாள் ஓடும், அதிக வசூல் பெறும் என்ற போட்டி உச்சத்தில் இருந்த நேரம். அப்போதும்கூட, ஒரு பிரச்சனை வருகையில் ரஜினி கமலிடம் ஆலோசனை கேட்கிறார், ரஜினியின் பட பூஜைக்கு முதல் ஆளாக கமல் செல்கிறார். ரஜினியா, கமலா என இணையத்தில் அடித்துக் கொள்ளும் அவர்களுடைய ரசிகர்கள் இந்த வரலாற்று சம்பவத்தை புரிந்து கொண்டால் பரஸ்பர காழ்ப்புணர்ச்சிக்கு இடமிருக்காது.