எழுபதுகளின் மத்தியில் விஜயகுமார் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தார். அவரது படங்களில் வில்லனாகவும், இரண்டாவது நாயகனாகவும் நடித்தார். பிறகு இரு ஹீரோ சப்ஜெக்டாக அது மாறி, ரஜினி விஜயகுமாரைக் கடந்து வேகமாக சூப்பர் ஸ்டார் நாற்காலியை எட்டிப் பிடித்தார். அப்படி எழுபதுகளின் இறுதியில் ரஜினியும், விஜயகுமாரும் இணைந்து நடித்தப் படங்களுள் ஒன்று, சங்கர் சலீம் சைமன்.
1977 இல் இந்தியில் வெளியான அமர் அக்பர் ஆண்டனி படம் இந்திய அளவில் பேசப்பட்டது. மூன்று சகோதரர்கள் சதியால் பிரிக்கப்பட்டு மூன்று இடங்களில் வளர்கிறார்கள். ஒருவர் கிறிஸ்தவராகவும், இன்னொருவர் இந்துவாகவும், மூன்றாவது சகோதரன் முஸ்லீமாகவும் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் ஒருகட்டத்தில் ஒன்றிணைந்து தங்களின் எதிரியை பழிதீர்ப்பது கதை. இதில் அமராக வினோத் கன்னாவும், அக்பராக ரிஷி கபூரும், ஆண்டனியாக அமிதாப்பச்சனும் நடித்தனர்.
இந்திப் படத்தின் வசனத்தை காதர் கான் எழுதினார். இவரது பூர்வீகம் ஆப்கானிஸ்தானிலுள்ள காபூல். இதாய் இப்போதைய பாகிஸ்தானைச் சேர்ந்தவர். இவரது குடும்பம் காபூலில் இருந்து குடிபெயர்ந்து மும்பையில் குடியேறியது. காதர் கான் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். முக்கியமான பல படங்களுக்கு வசனம் எழுதினார். அதில் ஒன்று அமர் அக்பர் ஆண்டனி. இந்தப் படத்தை இதனை தமிழில் சங்கர் சலீம் சைமன் என்ற பெயரில் எடுத்தனர்.
தமிழில் சங்கராக விஜயகுமாரும், சலீமாக ஜெய்கணேஷும், சைமனாக ரஜினியும் நடித்தனர். படத்தின் டைடிலில் விஜயகுமார் - மஞ்சுளா ஜோடியின் பெயர் முதலாவதாகவும், ரஜினி - லதா ஜோடியின் பெயர் இரண்டாவதாகவும், ஜெய்கணேஷ் - எம்.எஸ்.வசந்தியின் பெயர் மூன்றாவதாகவும் வரும். வழக்கம் போல் தனது ஸ்டைல் நடிப்பால் ரஜினி ஸ்கோர் செய்தார்.