1988-ல் ரஜினி குருசிஷ்யன், தர்மத்தின் தலைவன் என்று இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். அதன்பிறகு ப்ளட் ஸ்டோன் ஆங்கிலத் திரைப்படத்தில் நடித்தார். எங்க தலைவர் ஆங்கிலப் படத்திலேயே நடிச்சிட்டார், தமிழ்ல எந்த நடிகராவது ஆங்கிலத்தில் நடிச்சிருக்காரா என்று ரஜினி ரசிகர்கள் காலரை தூக்கிவிட்டாலும், படம் சுமாராகவே இருந்தது. அதையடுத்து பாரதிராஜா இயக்கத்தில் கொடி பறக்குது படத்தில் ரஜினி நடித்தார். 16 வயதினிலே படத்துக்குப் பிறகு பாரதிராஜாவும், ரஜினியும் இணையும் படம். எதிர்பார்ப்புக்கு கேட்கவா வேண்டும். ஆனால், படம் ஏமாற்றியது. ரஜினியின் திரைச்சரித்திரத்தில் மகத்தான தோல்வியாக கொடி பறக்குது அமைந்தது.
ராஜாதி ராஜாவை தயாரித்தது இளையராஜாவின் அண்ணன் பாஸ்கர். அவர்களது குடும்ப நிறுவனமான பாவலர் கிரியேஷன்ஸ் சார்பில் படத்தை தயாரித்தனர். படத்தில் இளையராஜா ஒரு இசை ராஜாங்கமே நடத்தியிருந்தார். மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா பாடலை பிறைசூடன் எழுத மனோ, சித்ரா பாடியிருந்தனர். ரசிகர்களை ஆட்டம் போட வைத்ததும், அன்றைய இளைஞர்களின் ஈவ்டீசிங் பாடலாக பரிணமித்ததும் கங்கை அமரன் எழுதிய, மாமா உன் பொண்ணைக் குடு பாடல்.
எம்ஜிஆர் புதிய வானம் புதிய பூமி எங்கும் பூ மழை பொழிகிறது என்று பாடியது போல ஒரு பாடலை இந்தப் படத்தில் வைக்க விரும்பி, வாலி எழுத்தில் உருவானதுதான் மலையாள கரையோரம் கவி பாடும் குருவி. மனோ இந்தப் பாடலை பாடியிருந்தார். ரசிகர்களை பாடல் கவர்ந்த அளவுக்கு இந்தப் பாடல் காட்சியில் ரஜினி அணிந்திருந்த வெள்ளை சட்டையும், பேகி பேண்டும் அன்றைய இளைஞர்களின் ஸ்டைலாக மாறிப்போனது. எங்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா பாடலை பொன்னடியான் எழுத மனோவும், சித்ராவும் பாடியிருந்தனர். வா வா மஞ்சள் மலரே பாடலையும் வேறு இரு பாடல்களையும் இளையராஜா எழுதியிருந்தார்.
இதில் பணக்கார குடும்பத்தை சேர்ந்த ராஜசேகர், அப்பாவி கிராமத்து சின்னராசு என இரண்டு வேடங்களில் ரஜினி நடித்திருந்தார். மார்டனான ராஜா என்கிற ராஜசேகருக்கு ஜோடி கிராமத்து பெண் ராதா. சின்னராசு என்ற அப்பாவி கிராமத்து ரஜினிக்கு நவநாகரிகமான நதியா. இப்படி கான்ட்ராஸ்டாக ஜோடிகளை தேர்வு செய்தது படத்தின் காதல் காட்சிகளுக்கு பூஸ்ட் அளித்தது. படத்தின் இன்னொரு முக்கிய அம்சம் நகைச்சுவை. அப்பாவி வேடத்தில் ரஜினியின் காமெடி ஒரு பக்கம் கலக்கியது என்றால் ராஜாவின் நண்பனாக வந்த ஜனகராஜின் காமெடி இன்னொரு பக்கம் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. ஆக்ஷன் காதல் காமெடி சென்டிமென்ட் என அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்த கச்சிதமான வணிக சினிமாவாக ராஜாதி ராஜா இருந்ததால்தான் இன்றும் அது ரசிக்கக்கூடியதாக இருக்கிறது.