எம்ஜிஆர் ரகசிய உளவாளி. கோட் நேம் 115. பாகிஸ்தானிலிருந்து (எதற்காக இங்கு போனார் என்பது படத்தில் இல்லை) வெற்றிகரமாக தப்பியோடி வந்த அவரிடம், திருநகர் பகுதியில் தேசத்துரோகிகள் இருக்கும் விவரமும், தேசத் துரோகியின் படமும் தரப்படுகிறது. அவர்கள் குறித்து மேலும் துப்பறிந்து, சதியை முறியடித்து தேசத்தை கப்பாற்றும் பொறுப்பை உயரதிகாரி அவரிடம் ஒப்படைக்கிறார்.
நாடக நடிகர் போர்வையில் தேசத்துரோகி அசோகனின் வீட்டிற்குள் நுழைய முயலும் எம்ஜிஆரை, அசோகனின் தங்கை ஜெயலலிதா ஹோட்டல் அறையிலேயே வழிமறித்து, இன்னொரு வேலை தருகிறார். தனது தந்தையை மயக்கி வைத்திருக்கும் வெண்ணிற ஆடை நிர்மலாவை எம்ஜிஆர் மயக்கி, ஜெயலலிதாவின் அப்பாவை காப்பாற்ற வேண்டும். உண்மையில் வெண்ணிற ஆடை நிர்மலா அசோகனின் ஆள். பணத்துக்காக அசோகன்தான் தனது தந்தையை வெண்ணிற ஆடை நிர்மலாவை வைத்து மயக்கி வைத்திருப்பார்.
தனது வீட்டிற்குள் தங்கையின் நண்பனாக வந்திருக்கும் எம்ஜிஆர் உளவாளி என அறிந்ததும், வெண்ணிற ஆடை நிர்மலாவை எம்ஜிஆரை மயக்கும்படி அசோகன் கேட்டுக் கொள்வார். இப்படி ஜெயலலிதாவால் வெண்ணிற ஆடை நிர்மலாவை மயக்குவதற்கு அழைத்து வரப்பட்ட எம்ஜிஆரை ஆசோகனின் ஆணையால் வெண்ணிற ஆடை நிர்மலா மயக்குவார். இந்த மயக்குதலிலேயே எம்ஜிஆர் ரசிகர்கள் பாதி மயங்கிப் போனார்கள். வெண்ணிற ஆடை நிர்மலா தன்னை எப்படி மயக்கினார் என்பதை எம்ஜிஆர் ஜெயலலிதாவிடம் டெமோ செய்து ஜெயலலிதாவை மயக்க, ரகசிய போலீஸ் 115 கதையே இல்லாமல் 100 நாள்கள் ஓடி வெற்றி பெற்றது.
படத்தின் ஆரம்பத்தில் கோட் போட்ட எம்ஜிஆரை துப்பாக்கி வைத்திருக்கும் சிலர் துரத்துவார்கள். அவர் ஓடி, குளத்தில் விழுந்து கம்பி வேலிக்கு அருகில் வருவார். அங்கே இந்திய எல்லை என்று எழுதியிருக்கும. அப்போதுதான் எம்ஜிஆரை துரத்தியவர்கள் அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்கள், துரத்தல் நடந்தது இந்திய எல்லைப் பகுதியில் என்ற டீட்டெயில் நமக்கு தெரிய வரும். எம்ஜிஆரின் தங்கையை போலீஸ் அதிகாரி நம்பியார் காதலித்து ரகசியமாக மணந்து, கைவிட்ட கிளைக்கதையும் உண்டு. எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இறுதியில் திருமணம் செய்து கொள்வார்கள் என்பதை சொல்லத் தேவையில்லை.