ஒளிப்பதிவாளர் பி.எஸ்.நிவாஸ் என்கிற பனயம்பறம்பில் ஸ்ரீனிவாஸ் கோழிக்கோடைச் சேர்ந்த மலையாளி. 1946, மே 27 இல் பிறந்தவர், தேவகிரி புனித ஜோப் கல்லூரியில் பட்டம் பெற்றார். சினிமா ஒளிப்பதிவின் மீதிருந்த ஆர்வத்தால் வந்து, அடையார் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து, சினிமா ஒளிப்பதிவுக்கான டிப்ளமோ பட்டம் பெற்றார். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் உதவி ஒளிப்பதிவாளராக திரைப்படங்களில் பணியாற்றத் தொடங்கினார்.
பி.எஸ்.நிவாஸ் பணிபுரிந்த படங்களின் இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள் அனைவருமே ஜாம்பவான்கள். உதவி ஒளிப்பதிவாளராக நிவாஸ் முதலில் பணியாற்றியது 1971 இல் வெளியான மலையாளத் திரைப்படம் குட்டியேட்டத்தி. எம்.டி.வாசுதேவன் நாயரின் திரைக்கதையில் உருவான இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளர் பி.என்.மேனனின் உதவியாளராக பணிபுரிந்தார். பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமாரிடம்; மாப்புசாக்ஷி, செம்பருத்தி உள்ளிட்ட படங்களில் நிவாஸ் உதவியாளராக தொழில் கற்றுத் தேர்ந்தார். பாபு நந்தன்கோடு இயக்கிய ஸ்வப்னம் இன்னொரு முக்கியமான திரைப்படம். இந்தப் படத்தின் போது நிவாஸின் தொழில் நேர்த்தியை கண்ணுற்ற பாபு நந்தன்கோடு தனது சத்தியத்தின்டெ நிழலில் படத்தில் நிவாஸை ஒளிப்பதிவாளராக்கினார்.
ஓய்வு பெற்ற நீதிபதியின் மூத்த இருமகன்கள் நல்ல குடிமக்களாக இருக்கையில, இளையவன் மட்டும் கெட்டவனாக வளர்கிறான். அவனிடம் இல்லாத துர்பழக்கங்கள் இல்லை. கதையினூடாக, அந்த கெட்டவன் எவ்வளவு நல்லவன், தந்தைக்காக செய்யாத குற்றத்திற்கு தண்டை அனுபவிக்க தயாராக இருக்கிறவன் என்பதை நவீன சினிமா மொழியில் சத்தியத்தின் நிழலில் முன் வைத்தது. இதில் நடித்ததற்காக நடிகர் சுதீருக்கு சிறந்த நடிகருக்கான கேரள அரசின் மாநில விருது கிடைத்தது.
இதற்கு அடுத்த வருடம் 1976 இல் நிவாஸ் ஸ்ரீகுமரன்தம்பியின் மோகினியாட்டம் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார். கறுப்பு வெள்ளையில் தயாரான இந்தப் படம், ஆணாதிக்க சமூகத்தில் ஒரு பெண் எப்படி போராடி வெல்கிறாள் என்பதை காட்டியது. பிரதான வேடத்தில் லட்சுமி நடித்திருந்தார். இதில் நிவாஸ் தனது கலானுபம் முழுவதையும் செலுத்தியிருந்தார். பொதுவாக அறைக்குள் நடக்கும் காட்சிக்கு பிளாட்டாக லைட்டிங் செய்து, நிழல் விழாமல் பார்த்துக் கொள்வார்கள். மோகினியாட்டத்தில் நிழல் ஒரு பாத்திரமாக தொடர்ந்து அனைத்துக் காட்சிகளிலும் இடம்பெற்றிருக்கும். கதையின் அழுத்தத்தை நிவாஸின் ஒளிப்பதிவு கூட்டிக் காண்பித்தது. அந்தப் படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருது நிவாஸுக்கு கிடைத்தது.
குறைந்த முதலீட்டில் படமெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துடன் 16 வயதினிலே படத்தை ஆரம்பித்த பாரதிராஜா, தனது படத்தைப் போன்றே சின்ன பட்ஜெட்டில் தயாரான மோகினியாட்டம் படத்தின் கேமராமேனை தனது படத்துக்கு தேர்வு செய்து கொண்டார். மலிவான Orwo film ஸ்டாக் நிவாஸுக்கு தரப்பட்டது. அதனை வைத்து படப்பிடிப்பு நடந்த மைசூர் சாமராஜநகர் மாவட்ட கிராமத்தின் அழகை அதன் இயல்போடும், உணர்வோடும், பூரண அழகியலோடும் படத்தில் கொண்டு வந்தார். எந்த பிரேமிலும் துருத்திக் காண்பிக்காத இயல்பான ஒளிப்பதிவும், கோணங்களும் நிவாஸின் தனித்துவம்.
16 வயதினிலே படத்துக்கு ஒளிப்பதிவு செய்த அதே நிவாஸ்தான் பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்கள் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்தார். முன்னது கிராமத்துப் படம். பின்னது ஒரு சீரியல் கில்லரை குறித்த த்ரில்லர் படம். இரண்டுக்குமான வித்தியாசத்தை உணர்ந்து ஒளிப்பதிவு செய்திருப்பார். இன்றும்கூட, த்ரில்லர் படங்களுக்கு ஒளிப்பதிவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சிகப்பு ரோஜாக்கள் உதாரணமாக உள்ளது. கே.விஸ்வநாத் இயக்கத்தில் கமல் நடித்த சாகர சங்கமம் நிவாஸின் ஒளிப்பதிவு திறனை பறைசாற்றும் மற்றொரு காவியம்.
16 வயதினிலே படத்திலிருந்து நிறம் மாறாத பூக்கள்வரை அனைத்து பாரதிராஜா படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்தார் நிவாஸ். அதன் பிறகு 1980 லிருந்து கல்லுக்குள், ஈரம், எனக்காக காத்திரு, நிழல் தேடும் நெஞ்சங்கள் என தொடர்ந்து படங்கள் இயக்கினார். இதில் கல்லுக்குள் ஈரம் படத்தில் பாரதிராஜாவும், சுதாகரும் நாயகர்கள். பாரதிராஜாவுக்கு அருணாவும், சுதாகருக்கு விஜயசாந்தியும் ஜோடி. படப்பிடிப்புக்கு வந்த பாரதிராஜா ஊரைவிட்டு கிளம்பிச் செல்லும் இறுதிக்காட்சியில் சூறைக்காற்று வீசுவதை பிரமாதமாக காட்சிப்படுத்தியிருப்பார். எடுத்துச் சொல்ல ஓராயிரம் காட்சிகளை தந்த நிவாஸ் 2021, பிப்ரவரி 1, இதே நாளில் இயற்கை எய்தினார். அவருக்கு நமது இரண்டாமாண்டு அஞ்சலி.