கன்னடத்துப் பைங்கிளி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட சரோஜாதேவி, ஐம்பதுகளின் இறுதியில் இருந்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக விளங்க ஆரம்பித்தார். அன்றைய முன்னணி நட்சத்திரங்கள் அனைவருடனும் நடித்தார். தெலுங்கு, கன்னடத்திலும் முன்னணி நாயகியாக விளங்கினார். ஐம்பதுகளின் இறுதியிலும், அறுபதுகளின் தொடக்கத்திலும் அவர் இல்லாமல் சாண்டோ சின்னப்ப தேவர் படமே எடுப்பதில்லை. அந்தளவுக்கு சரோஜாதேவி ராசியில் அவருக்கு நம்பிக்கை.
இந்த பந்தம் தேவரின் செங்கோட்டை சிங்கம் படத்தில் தொடங்கியது. தேவரின் முதல் படம் தாய்க்குப் பின் தாரத்தை அவரது இளைய சகோதரர் எம்.ஏ.திருமுகம் இயக்கினார். எம்ஜிஆர், பானுமதி நடித்தனர். தேவர் இயக்குனர் விவகாரங்களில் தலையை நுழைக்கிறவர். இது தம்பிக்குப் பிடிக்கவில்லை. இருவரும் சண்டைப்போட்டு பிரிந்தனர். அண்ணன் தனியாக வேறு இயக்குனரை வைத்து நீலமலைத் திருடனை எடுத்தார். படம் பிளாப். அடுத்து கன்னட நடிகர் உதய குமாரையும், கன்னடப் பைங்கிளி சரோஜாதேவியையும் வைத்து செங்கோட்டை சிங்கத்தை எடுத்தார். அதுவும் சுமார்.
அண்ணனிடம் கோபித்து வேறு பேனரில் எம்.ஏ.திருமுகம் இயக்கிய படங்களும் பல்பு வாங்க, அண்ணன், தம்பி இருவரும், வாழ வைத்த தெய்வம் படத்தில் மீண்டும் ஒன்றிணைந்தனர். இதில், தனது முந்தையப் படம் செங்கோட்டை சிங்கத்தில் நடித்த சரோஜாதேவியையே நாயகியாக்கினார் தேவர். அதன் பிறகு தேவர் தயாரித்த உத்தமி பெற்ற ரத்தினம், கொங்குநாட்டு தங்கம் தவிர அனைத்துப் படங்களிலும் சரோஜாதேவிதான் நாயகி. தேவர் படம் தயாரித்தால் நாயகி சரோஜாதேவி என்பது எழுதப்படாத சட்டமாக ஆனது.
எம்ஜிஆருடன் தேவர் மனஸ்தாபத்தில் இருந்த 1960 இல் அவர் எடுத்த யானை பாகன் படத்தில் உதயகுமார் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சரோஜாதேவி நடித்தார். 1961 இல் தாய் சொல்லை தட்டாதேயில் தேவரும், எம்ஜிஆரும் மறுபடி ஒன்றிணைந்தனர். நாயகி சரோஜாதேவி. அடுத்த வருடம் வெளியான தாயை காத்த தனயன், அதையடுத்து வெளியான குடும்பத் தலைவன், அதற்கடுத்து வெளியான தர்மம் தலைகாக்கும் ஆகிய படங்களிலும் கன்னடத்துப் பைங்கிளிதான் நாயகி. அதையடுத்து நீதிக்குப் பின் பாசம் படத்தில் சரோஜாதேவி நடித்த போது தேவருக்கும் சரோஜாதேவியின் அம்மாவுக்கும் இடையில் சம்பள விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. படப்பிடிப்பு தொடங்கிவிட்டதால் வேறு வழியின்றி சரோஜாதேவியை சகித்துக் கொண்ட தேவர், அத்தோடு அவரை தலைமுழுகினார்.
நீதிக்குப் பின் பாசம் படத்துக்குப் பிறகு தேவர் வேட்டைக்காரன் படத்தை தொடங்கிய போது எம்ஜிஆரின் சாய்ஸ் சரோஜாதேவியாகவே இருந்தது. ஆனால், தேவர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. தேவரின் குணம் எம்ஜிஆருக்கு நன்றாகத் தெரியும். பிடிவாதக்காரர். அவரது இழுப்புக்கு செல்லவில்லையென்றால் எம்ஜிஆரைக்கூட வேண்டாம் என்பார். கடைசியில் தேவரின் விருப்பப்படி வேட்டைக்காரனில் சாவித்ரி ஒப்பந்தமானார். அப்படி 1958 இல் தொடங்கிய தேவர் பிலிம்ஸ் - சரோஜாதேவி பந்தம் 1963 இல் முடிவுக்கு வந்தது. அதற்குள் தேவரின் தயாரிப்பில் எட்டுப் படங்கள் நடித்திருந்தார்.
சரோஜாதேவிக்குப் பிறகு கே.ஆர்.விஜயாவும், ஜெயலலிதாவும் அதிகளவில் தேவர் தயாரித்த படங்களில் நடித்தனர். சரோஜாதேவியின் தாயார் சம்பள விஷயத்தில் கறாராக இருந்து, இதுபோல் பல தயாரிப்பாளர்களின் கோபத்துக்கு ஆளாகி மகளின் வாய்ப்பு பறிபோக காரணமாக இருந்துள்ளார். எனினும், சரோஜாதேவிக்கு இருந்த மார்க்கெட் காரணமாக இன்னும் நல்ல வாய்ப்புகள் அவருக்குக் கிடைத்து, முன்னணி நடிகையாகவே கடைசிவரை திகழ்ந்தார்.