1975 இல் அபூர்வ ராகங்களில் அறிமுகமான ரஜினி தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்தார். அவரது 27 வது படம் பைரவியில் தனி நாயகனானார். அதற்கு முன் அவர் கமலுடன் நடித்த 16 வயதினிலே படத்தில் வில்லனாகவும், இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் இரண்டாவது நாயகனாகவும் நடித்தார். இவையிரண்டும் வெள்ளி விழா படங்கள். அதன் பிறகு பல வெற்றிப் படங்களில் நடித்தாலும் 1978 ஆம் ஆண்டு வெளியான ப்ரியா படம்தான் தனி நாயகனாக அவருக்கு மாபெரும் வெற்றியைத் தேடித் தந்த முதல் படமாகும்.
ப்ரியா, சுஜாதா எழுதிய நாவலின் கதையை அடிப்படையாகக் கொண்டது. அவரது துப்பறியும் கதைகளில் வரும் வசந்த் - கணேஷில் கணேஷ் இடம்பெறும் கதை. பிரபல நடிகையை ஒருவர் தனது ஆளுகைக்குள் வைத்திருக்கிறார். அவளுக்கு ஒரு காதலன் இருக்கிறான். அவனுடன் சேர அந்த நபர் அவளை அனுமதிப்பதில்லை. இந்நிலையில் வெளிநாடுக்கு படப்பிடிப்புக்கு செல்கையில் நடிகை வழக்கறிஞர் கணேஷின் உதவியை நாடுகிறாள். அவளுடன் கணேஷும், அவளது காதலனும் வெளிநாடு செல்கிறார்கள். அங்கு நடிகையின் பிரச்சனையை கணேஷ் எப்படி முடித்து வைக்கிறான் என்பது கதை.
ப்ரியா படத்தின் கதையில் சில புதுமைகள் உண்டு. பொதுவாக ஒரு படத்தின் நாயகிதான் அப்படத்தின் நாயகனின் ஜோடியாக இருப்பார். இதில் நாயகி ஸ்ரீதேவிக்கு ஜோடியாக நடித்தவர் கன்னட நடிகர் அம்பரீஷ். ஆனால், அவர் நாயகனல்ல, கணேஷாக நடித்த ரஜினிதான் நாயகன். அவர் ஒரு மலாய் - இந்திய பெண்ணிடம் காதலில் விழுவார். அவர்களுக்கு ஒரு டூயட்டும் உண்டு.
சுஜாதாவின் கதையை எஸ்.பி.முத்துராமன் இயக்குவது, பஞ்சு அருணாசலம் திரைக்கதை எழுதுவது என முடிவானது. இசை இளையராஜா. அவரும் பஞ்சு அருணாசலமும் கம்போஸிங்கிற்காக பெங்களூரு சென்றனர். ஹோட்டல் அறைகளைவிட வெட்டவெளியில் அமர்ந்து கம்போஸ் செய்வது இளையராஜாவுக்குப் பிடித்தமானது. அதனால், லால் பாக் போன்ற பூங்காக்களுக்கு சென்று பாடல்களை கம்போஸ் செய்தனர்.
அந்த நேரத்தில் பாடகர் யேசுதாஸ் தனது இசைக்கச்சேரிகளுக்காக ஸ்டீரியோ முறையில் பாடல்களை பதிவு செய்யும் கருவிகளை வாங்கி பயன்படுத்தி வந்தார். தமிழில் அவ்வகை ஸ்டீரியோபோனிக் தொழில்நுட்பத்தில் அதுவரை யாரும் பாடல்களை பதிவு செய்ததில்லை. இளையராஜா கேட்டதும் யேசுதாஸ் மகிழ்ச்சியோடு ஒப்புக் கொள்ள, அவரது தரங்கிணி ஸ்டுடியோவில் இருந்த கருவிகள் பரணி ஸ்டுடியோவுக்கு கொண்டு வரப்பட்டு பாடல்கள் பதிவு செய்யப்பட்டன. அப்படி ஸ்டீரியோபோனிக் தொழில்நுட்பத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட முதல் பாடல், ப்ரியாவில் வரும், என்னுயிர் நீதானே... பாடலாகும்.
இந்த செய்தி திரைத்துறை வட்டாரத்தில் பேசுபொருளாக மாற, மலையாளப் படத்தின் இசைப்பணிக்காக வந்திருந்த இந்தியின் பிரபல இசையமைப்பாளர் சலீம் சௌத்ரி பரணி ஸ்டுடியோவுக்கு வந்து, அந்த புதிய தொழில்நுட்பத்தை குறித்து கேட்டு அறிந்து கொண்டார். அந்த நேரத்தில் பி.சுசீலா பாடிய டார்லிங்... டார்லிங்... பாடல் பதிவாகியிருந்தது. அதனைக் கேட்டவர் மெய்மறந்து போய் பாடலை பாராட்டினார்.
ஏ.. பாடல் ஒன்று..., அக்கரை சீமை அழகினிலே..., டார்லிங் டார்லிங் டார்லிங்..., என்னுயிர் நீதானே..., ஸ்ரீ ராமனின் ஸ்ரீ தேவியே... என அனைத்துப் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி படத்தையும் வெள்ளிவிழா ஓட வைத்தது. முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்படும் திரைப்படங்கள், உலகம் சுற்றும் வாலிபன் போல அரிதாகவே வெற்றி பெறும்.
ப்ரியாவை தமிழ், கன்னடத்தில் ஒரே நேரத்தில் எடுத்தார் எஸ்.பி.முத்துராமன். தமிழ்ப் படம் 1978 டிசம்பர் 22 ஆம் தேதியும், கன்னடப் படம் 1979 ஜனவரி 12 ஆம் தேதியும் வெளியானது. படத்தை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து 1979 மார்ச்சில் வெளியிட்டனர். இந்தியில் 1983 இல் வெளியிட்டனர். அனைத்து மொழிகளிலும் படம் வெற்றி பெற்று, ரஜினிக்கு தனித்த அடையாளத்தை உருவாக்கித் தந்தது. இதன் பிறகுதான் ரஜினி தனி நாயகனாக திரைவானில் ஜொலிக்க ஆரம்பித்தார்.