ஓ மணப்பெண்ணே படவிழா சென்னையில் நடந்தது. இதில் படத்தின் நாயகி ப்ரியா பவானி சங்கர், நாயகன் ஹரிஷ் கல்யாண் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். ஓ மணப்பெண்ணே தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற பெல்லி சூப்புலு படத்தின் தமிழ் ரீமேக். ரிது வர்மா, விஜய் தேவரகொண்டா நடித்த வேடத்தை தமிழில் ப்ரியா பவானி சங்கரும், ஹரிஷ் கல்யாண் செய்துள்ளனர். ஓ மணப்பெண்ணேயை கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார். படம் குறித்து பேசிய அவர், பெல்லி சூப்புலு படத்தை கெடுத்து விடாமல் தமிழுக்கு ஏற்றபடி மாற்றம் செய்துள்ளோம் என்றார். ஹரிஷ், ப்ரியா பவானி சங்கர் வந்த பிறகு படத்தின் பலம் கூடிவிட்டது. படத்துக்கு புதிதாக எதையும் நான் செய்யவில்லை என்றார் கார்த்திக் சுந்தர். நடிகை ப்ரியா பவானி சங்கர் பேசுகையில், இந்தப் படம் அனைவருக்கும் திருப்தி தந்த படம், ஹரிஷ் நல்ல ஒத்துழைப்பு தந்தார் என்றார். பெல்லி சூப்புலுவில் நாயகிக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அதனை தனது பேச்சில் குறிப்பிட்ட ப்ரியா பவானி சங்கர், மற்ற படங்களில் ஹீரோவுக்கு ஜோடியாகத்தான் நாயகி பாத்திரம் இருக்கும். இந்தப் படத்தை தைரியமாக என்னுடைய படம் என்பேன் என்றார். ஓ மணப்பெண்ணே படத்தை திரையரங்குக்குப் பதில் டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஓடிடியில் நேரடியாக வெளியிடுகின்றனர். விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட உள்ளது.