70 வது வயதில் பிரதாப் போத்தன் மரணமடைந்துள்ளார். திருவனந்தபுரத்தில் பிறந்து, ஐந்து வயது முதல் ஊட்டி கான்வென்டில் பயின்று, மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தவர் பிரதாப் போத்தன். ஆரம்ப காலத்தில் ஓவியம் வரைவதில் மிகுந்த ஈடுபாடு காட்டினார். பிறகு நாடகத்தின் மீது கவனம் திரும்பியது. சென்னையில் அப்போது இயங்கி வந்த, தி மெட்ராஸ் பிளேயர்ஸ் நாடக குரூப்பின் நாடகங்களில் நடித்தார். அவரது நடிப்பில் கவரப்பட்ட மலையாளப்பட இயக்குநர் பரதன் தனது ஆரவம் (1978) படத்தில் பிரதாப் போத்தனை அறிமுகப்படுத்தினார். அதுதான் அவர் நடித்த முதல் திரைப்படம்.
ஆரவம் படத்தில் கொக்கரக்கோ என்ற வெகுளி கதாபாத்திரத்தில் பிரதாப் போத்தன் நடித்தார். பூர்வீகம் தமிழகம் என்பதால் கொக்கரக்கோவின் பேச்சு தமிழ் கலந்து இருக்கும். அவரது மனைவி கேபிஏசி லலிதா. அவரை மனிதனாகவே மதிக்காதவர். நீயொரு ஆணா என்று வசைபாடுகிறவர். கணவனிடம் பணம் இருப்பதாக அறிந்தால் போலியாக பாசத்தை காட்டுவார். நெடுமுடிவேணு, பிரமிளா, ஜனார்த்தனுக்கு அடுத்து பிரதாப் போத்தனுக்கு ஆரவம் படத்தில் நல்ல வேடம்.
ஆரவம் படத்தின் கொக்கரக்கோ வேடத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்க, அதையே நாயக கதாபாத்திரமாக்கி தகர படத்தை பரதன் எடுத்தார். இதன் கதையை பத்மராஜன் எழுதினார். பிரதாப் போத்தன் நாயகன். இதிலும் அதே வெகுளி. அவரது அப்பாவித்தனத்தை வைத்து வேலை வாங்கும் ஆசாரியாக நெடுமுடிவேணு. இந்தப் படம் பிரதாப் போத்தனுக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுத் தந்தது. தகர படத்தைதான் பரதன் தமிழில் ஆவாரம்பூ என்ற பெயரில் ரீமேக் செய்தார். பிரதாப் போத்தன் நடித்த வேடத்தில் வினித்தும், நெடுமுடியின் ஆசாரி வேடத்தில் கவுண்டமணியும் நடித்தனர்.
இதன் பின் தொடர்ச்சியாக மலையாளப் படங்களில் பிரதாப் போத்தன் நடித்தார். 1980 இல் பத்மராஜன் இயக்கத்தில் அவர் நடித்த லாரி இன்னொரு முக்கியமான திரைப்படம். இதில் லாரி கிளீனராக வருவார். அதேவருடம் மீண்டும் பரதன் இயக்கத்தில் சாமரம் படத்தில் நடித்தார். இதில் கல்லூரி மாணவன் வேடம். காதல் தோல்வியில் இருக்கும் பேராசிரியை ஷரினா வாகப்பை பிரதாப் போத்தன் காதலிப்பார். இருவரும் காமத்தையும் பகிர்ந்து கொள்வார்கள். இறுதியில் விபத்தில் பிரதாப் போத்தன் இறந்துபோக, ஷரினாவின் இரண்டாவது காதலும் முறிந்து போகும்.
பிரதாப் போத்தன் 1987 இல் தனது முதல் மலையாளப் படம் ரிதுபேதமை இயக்கினார். இதில் நடித்த திலகனுக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. அடுத்து டெய்சி. இதுவொரு ரொமான்டிக் மியூஸிகல் ஃபிலிம். அசோக்குமாரின் ஒளிப்பதிவில் விஷுவல் ட்ரீட்டாக அமைந்த படம். இதில் கதாநாயகியின் அண்ணனாக கௌரவ வேடத்தில் கமல் நடித்தார். இதில் அவரது நீண்ட தலைமுடியுடன் கூடிய தோற்றம் அப்போது கேரளாவில் ஆச்சரியமாக பேசப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழில் கமல், பிரபுவை வைத்து வெற்றிவிழா திரைப்படத்தை இயக்கினார். ராபர்ட் லுடியம் எழுதிய தி பார்ன் ஐடென்டிட்டி நாவலை தழுவி இந்தப் படத்தை எடுத்தார். பிறகு ஹாலிவுட்டில் இந்த நாவலை முறைப்படி அனுமதி வாங்கி தி பார்ன் ஐடென்டிட்டி, தி பார்ன் சூப்பர்மசி, தி பார்ன் அல்டிமேட்டம் ஆகிய படங்களை எடுத்தனர்.
மலையாளத்தைவிட தமிழில்தான் அதிக படங்களை பிரதாப் போத்தன் இயக்கினார். மலையாளத்தில் அவர் இயக்கத்தில் கடைசியாக வந்த படம் யாத்ரா மொழி. இதில் கோவையைச் சேர்ந்த கான்ட்ராக்டராக சிவாஜி நடித்திருந்தார். அவருக்கும் மோகன்லாலுக்குமான பிணைப்புதான் கதை. படத்தில் திலகனும் உண்டு. பல வருடங்கள் முன் சட்டம்பியான திலகனின் காலை அடித்து முறித்திருப்பார் சிவாஜி. அவர் மீண்டும் கேரளம் வருகையில் திலகன் அவரை வந்து வந்திப்பார். சிவாஜிக்கு அடையாளம் தெரியாது. திலகன் பழையதை நினைவுப்படுத்துவார். பழி வாங்க வந்திருக்கியா என சிவாஜி கேட்க, இல்லை, நன்றி சொல்ல வந்தேன் என்று, திலகன் பேசுகிற வார்த்தைகள் அழுத்தமானவை. யாத்ரா மொழிப் படத்தின் ஜீவிதமான காட்சிகளில் இதுவும் ஒன்று.
தமிழில் பிஸியாக நடிக்க ஆரம்பித்தபின் மலையாளத்தில் அவ்வப்போதுதான் நடித்தார் பிரதாப் போத்தன். 2000 க்குப் பிறகு மீண்டும் தொடர்ச்சியாக மலையாளப் படங்களில் நடித்தார். அதில் ஆஷிக் அபுவின் 22 பீமெயில் கோட்டயம், இடுக்கி கோல்ட் படங்கள் முக்கியமானவை. முதல் படத்தில் வயதான வுமனைசராக வந்து நாயகியை பலவந்தமாக கற்பழிப்பார். அதனை அவர், தானொரு நோயாளி என்று நியாயப்படுத்தும் இடம் அவரது பாலியல் வன்முறையைவிட கொடூரமாக இருக்கும். இடுக்கி கோல்ட் ஒருவகை நாஸ்டாலஜியா திரைப்படம். ஐம்பது வயதை கடந்த நண்பர்கள் சிலர் இடுக்கியில் தங்கள் பால்யத்தில் படித்த பள்ளிக்கு செல்வது கதை. பிரதாப் போத்தன், பாபு ஆண்டனி, விஜயராகவன், ரவீந்திரன், மணியம்பிள்ளை ராஜு என அதில் வரும் பிரதான நடிகர்கள் அனைவரும் ஐம்பதைக் கடந்தவர்கள். அவர்களை மையப்படுத்திய இடுக்கி கோல்ட் முக்கியமான திரைப்படம்.