பூவே உனக்காக படத்தில் வரும், 'காதல்ங்கிறது பூ மாதிரி... ஒருமுறைதான் பூக்கும்' என்ற விக்ரமனின் வசனத்துக்கு கண் கலங்காத காதல் மனங்கள் குறைவு. லட்சியவாதம் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்த கடைசி தலைமுறையின் இளமைப் பருவத்தில் வெளிவந்த திரைப்படம் அது. அதன் பிறகு காதல், சமீபத்திய 'லவ் டுடே' மாதிரி ஆகிவிட்டது.
1992 இல் நாளையத் தீர்ப்பின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்த, விஜய்யின் திரைவாழ்க்கையில் திருப்புமுனை தந்த முதல் படம் பூவே உனக்காக. அவரது இரண்டாவது படம் சொந்தூரப்பாண்டியும், மூன்றாவது படம் ரசிகனும் நன்றாக ஓடின. ரசிகன் அவரது ஷோலோ நடிப்பில் 100 நாள்கள் ஓடிய முதல் படம். அதனைத் தொடர்ந்து தேவா, ராஜாவின் பார்வையிலே, விஷ்ணு, சந்திரலேகா, கோயம்புத்தூர் மாப்பிள்ளை என தொடர்ச்சியாக படங்கள் வந்தன. இந்தப் படங்களில் விஜய் ஒரு விடலைத்தனமான காதலனாக சித்தரிக்கப்பட்டிருந்தார். ஆக்ஷன், காதல், சென்டிமெண்ட் என வழக்கமான கோடம்பாக்க மசாலாவில் இப்படங்கள் தயாராகியிருந்தன.
இந்தப் படங்களுக்குப் பிறகு 1996 இல் விக்ரமன் இயக்கத்தில் பூவே உனக்காக படத்தில் விஜய் நடித்தார். தான் ஒருதலையாக காதலித்த பெண்ணிற்காக, அவள் மற்றும் அவளது காதலனின் குடும்பங்களை ஒன்றிணைக்கும் கதாபாத்திரம். நகைச்சுவையில் கதையை நகர்த்தி, காதலின் சென்டிமெண்டில் விக்ரமன் படத்தை முடித்திருந்தார். விஜய்யை முதல்முறை அனைவரும் விரும்பும் காதலனாக இப்படம் சித்தரித்தது. அத்துடன் 250 நாள்களுக்கு மேல் ஓடி, விஜய்யின் முதல் வெள்ளி விழா படம் என்ற சாதனையையும் படைத்தது.
எந்தவொரு கதையையும் நகைச்சுவை கலந்து சொன்னால் ரசிகர்கள் உட்கார்ந்து பார்ப்பார்கள் என்பதற்கு பூவே உனக்காக திரைப்படம் சிறந்த உதாரணம். இதில் சில காட்சிகளை மலையாளத்தில் வெளியான மலப்புறம் ஹாஜி மகனாய ஜோஷி படத்திலிருந்து விக்ரமன் எடுத்திருந்தார். சங்கீதாவின் குறும்பான நடிப்பு படத்துக்கு பலம் சேர்த்தது. அவரும், விஜய்யும் இறுதியில் இணைவார்கள் என்றே ரசிகர்கள் நினைத்தனர். அவர்கள் எண்ணப்படி இருவரையும் விக்ரமன் ஒன்று சேர்த்திருந்தால் மகிழ்ச்சியோடு திரையரங்கைவிட்டு ரசிகர்கள் சென்றிருப்பார்கள்.
பூவே உனக்காக படத்தின் திரைக்காதலுக்குப் பின்னே இன்னொரு நிஜக்காதலும் இருந்தது. பூவே உனக்காக படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர் எஸ்.சரவணன் என்கிற சண்முகம் சரவணன். அடையாறு ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் பயின்ற இவர், பி.செல்வகுமாரிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றி, 1993 இல் அம்மா பொண்ணு படத்தின் மூலம் ஒளிப்பதிவாளரானார். அந்தப் படத்தின் ஒளிப்பதிவால் ஈர்க்கப்பட்ட விக்ரமன் தனது புதிய மன்னர்கள் படத்தில் சரவணனை ஒப்பந்தம் செய்தார். அதையடுத்து பூவே உனக்காக படத்துக்கு சரவணன் ஒளிப்பதிவு செய்தார்.
இந்தப் படத்தின் போது அதில் நடித்த சங்கீதாவுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. சங்கீதாவும் அவரை காதலித்தார். இந்த விஷயம் வெளிஉலகுக்கு தெரியாமல் இருவரும் பார்த்துக் கொண்டனர். சங்கீதா மலையாளத்தில் சீனிவாசன் எழுதி, இயக்கி நடித்த சிந்தாவிஷ்டயாய சியாமளா படத்தில் நடித்தார். அப்படம் தேசிய விருதையும், சங்கீதாவுக்கு சிறந்த படத்துக்கான கேரள அரசின் மாநில விருதையும் பெற்றுத் தந்தது. அப்படி பீக்கில் இருந்த நேரம், சினிமாவுக்கு முழுக்குப் போட்டு சரவணனை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அவர் சினிமாவில் தலைக்காட்டவில்லை. அப்படி ஒரு திரைஜோடிக்கு காதல் வளர்ந்த களமாக பூவே உனக்காக படப்பிடிப்புத்தளம் இருந்தது.