ஏவி மெய்யப்ப செட்டியாரின் கொல்கத்தா நண்பர் வி ஏ பி ஐயர் வங்கமொழியில் உத்தர் புருஸ் என்ற திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாக கூற, செட்டியார் அந்தத் திரைப்படத்தை பார்த்தார் படம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன் உரிமையை வாங்கி தமிழில் ரீமேக் செய்ய தீர்மானித்தார். படத்தின் திரைக்கதையை தமிழுக்கு ஏற்ப மாற்றி எழுதும் பொறுப்பு ஜாவர் சீதாராமனிடம் ஒப்படைக்கப்பட்டது. படத்தை கிருஷ்ணன் - பஞ்சு இயக்குவது எனவும், சுந்தரம் ஒளிப்பதிவு செய்வது எனவும் முடிவானது.
உயர்ந்த மனிதன் படத்தின் கதையை முதலில் கேட்டபோது சிவாஜிக்கு பிரதான கதாபாத்திரத்தை விட நாயகனின் நண்பனாக வரும் டாக்டர் கதாபாத்திரம் தான் மிகவும் பிடித்திருந்தது. அதற்கு தான் முக்கியத்துவம் இருப்பதாக அவர் கருதினார். ஏவிஎம் சரவணன் வற்புறுத்தி அவரை நாயகன் கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதிக்க வைத்தார். திருவிளையாடல் படத்தில் நடிக்க சிவாஜி கணேசனுக்கு 2 லட்சம் சம்பளம் தரப்பட்டிருந்தது. அது ஈஸ்ட்மென் கலரில் எடுக்கப்பட்ட திரைப்படம். உயர்ந்த மனிதன் கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட இருந்ததால் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. அந்த நேரத்தில் இந்திப் பட தயாரிப்பில் ஏவிஎம் பிஸியாக இருந்ததால் சில மாதங்களுக்கு உயர்ந்த மனிதன் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. படம் கைவிடப்பட்டதாக சிவாஜி கணேசன் நினைக்க, நிலைமையை எடுத்துச் சொல்லி படம் தொடங்கப்படும், சற்று பொறுத்திருங்கள் என முன்பணமாக 50,000 ரூபாய் அவருக்கு தரப்பட்டது.
உயர்ந்த மனிதன் கதைப்படி நாயகன் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவன். கொடைக்கானலில் உள்ள தனது எஸ்டேட்டுக்கு தனது டிரைவர் மற்றும் மருத்துவ நண்பருடன் செல்கையில் அங்குள்ள பெண் ஒருத்தியிடம் காதல் கொள்கிறான்.. இருவரும் ரகசியமாக திருமணம் செய்து குடும்பம் நடத்துகிறார்கள். அந்தப் பெண் கர்ப்பமாகிறாள். இந்த நேரத்தில் நாயகனின் பணக்கார தந்தை விஷயமறிந்து அந்தப் பெண்ணையும் அவளது தந்தையையும் உயிரோடு எரித்து கொலை செய்கிறார். நாயகன் நொறுங்கிய மனதுடன் வீடு திரும்புகிறான். தந்தையின் வற்புறுத்துதலால் சில காலம் கழித்து இன்னொரு பெண்ணை திருமணம் செய்கிறான். தந்தை இறந்து போகிறார். எவ்வித ஈடுபாடும் இல்லாமல் தாம்பத்திய வாழ்க்கை கழிகிறது.
17 வருடங்களுக்குப் பிறகு நாயகன் வீட்டில் இளம் வாலிபன் ஒருவன் வேலைக்கு சேர்கிறான். நேர்மையான அவன் மீது சக வேலைக்காரன் பொய்க் குற்றம் சாட்ட, நாயகன் அவனை அடித்து வீட்டை விட்டு துரத்துகிறான். அதன் பிறகு தான் அவனது பெட்டியில் இருக்கும் அவனது தாயாரின் புகைப்படத்தை பார்க்கையில் அது தனது முதல் மனைவியின் மகன் என்பது அவருக்கு தெரிய வருகிறது. மனைவியிடம் அனைத்து உண்மைகளையும் சொல்லி தற்கொலைக்கு முயலும் அந்த வாலிபனை தனது வீட்டிற்கு உண்மையை சொல்லி அழைத்து வருகிறார்.
சிவாஜி கணேசனின் ஸ்டைலிஷான நடிப்பை விரும்புகிறவர்களுக்கு இந்தப் படம் ஒரு வரப்பிரசாதம். சிகரெட் புகைக்கும் சிவாஜியின் ஸ்டைலை இதில் படம் நெடுக ரசிகர்கள் கண்டுரசிக்கலாம். எம் எஸ் விஸ்வநாதனின் இசையும் வாலியின் பாடல்களும் படத்தின் பலமாக அமைந்தன. பால் போலவே பாடலுக்காக பி சுசீலாவுக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது. மேலும் தமிழக அரசின் சிறந்த பாடகி, சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த இயக்குனர், சிறந்த திரைப்படம் ஆகிய விருதுகளையும் உயர்ந்த மனிதன் பெற்றது.
இந்த படத்தில் நாயகனான சிவாஜி முதலில் திருமணம் செய்யும் பெண்ணாக வாணிஸ்ரீ நடித்திருந்தார். சிவாஜி இரண்டாவதாக திருமணம் செய்யும் பெண்ணாக சௌகார் ஜானகியும் அவரது தந்தையாக பூர்ணம் விஸ்வநாதனும் நடித்திருந்தனர். பூர்ணம் விஸ்வநாதன் இந்தப் படத்தில் தான் அறிமுகமானார். சிவாஜியின் நண்பராக மருத்துவர் வேடத்தில் வில்லன் நடிகர் அசோகன் நடித்தார். மகனாக நடித்தவர் சிவகுமார்..
கொடைக்கானலில் பால் போலவே பாடலை படமாக்க திட்டமிட்டு இருந்தனர். காலநிலை அதற்கு ஒத்து வராததால் பிறகு ஏவிஎம் ஸ்டுடியோவில் கொடைக்கானல் போன்றே பனிமூட்டமான அரங்கை அமைத்து அதில் பாடலை படமாக்கினர். அந்த பாடல் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தை 1984 தெலுங்கில் அனுபந்தம் என்ற பெயரில் ரீமேக் செய்தனர் . அக்னி யேனி நாகேஸ்வரராவ் ராதிகா சுஜாதா ஆகியோர் அதில் நடித்தனர்.