பஞ்ச தந்திரத்தில் ஸ்ரீமனின் கதாபாத்திரம் தெலுங்கு என்பதால், அவரது மாமனாராக நடிக்க கைகலா சத்யநாராயணாவை ஆந்திராவிலிருந்து கமல் அழைத்து வந்தார். பிரமாண்ட ஆகிருதியுடன் வெள்ளந்தியான அவரது பேச்சு அனைவரையும் கவர்ந்தது. பெத்த கல்லு சின்ன லாபம், சின்ன கல்லு பெத்த லாபம் என்று அவர் பேசிய வசனம் பஞ்ச தந்திரம் பார்த்தவர்களுக்கு கடைசிவரை மறக்காது.
இறுதிவரை டூப்பாகவே கழிந்திருக்க வேண்டிய அவரை காப்பாற்றியது விட்டலாச்சாரியார். அவர் தனது, கனக துர்கா பூஜா மகிமா படத்தில் கைகலா சத்யநாராயணாவை வில்லனாக்கினார். அதன் பிறகு தொடர்ச்சியாக வில்லன் வேடங்களில் நடித்தார். அப்படியே குணச்சித்திரம், நகைச்சுவை என்று மாறி, தெலுங்கு சினிமா சரித்திரத்தில் நீங்கா இடம் பிடித்தார்.
கைகலா சத்யநாராயணா நல்ல கதை ஞானம் உள்ளவர். அதுவே அவரை தயாரிப்பாளராக்கியது. 1990 இல் கொடம்ம சிம்கம் என்ற படத்தை தனது ராமா பிலிம்ஸ் சார்பில் சிரஞ்சீவியை வைத்து தயாரித்தார். இந்தப் படம் ஆந்திராவில் 20 திரையரங்குகளுக்கு மேல் 100 நாள்கள் ஓடியது. இதனை ஆங்கிலத்தில், ஹண்டர்ஸ் ஆஃப் தி இன்டியன் ட்ரெஷ்ஷர்ஸ் என்ற பெயரிலும், இந்தியில் மெய்ன் ஹுன் கிலாடியோன் கி கிலாடி என்ற பெயரிலும் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார். இவர் தயாரித்த பங்காரு குடும்பம் இன்னொரு வெற்றிப் படம். நாகேஸ்வரராவ், ஜெயசுதா பிரதான வேடங்களில் நடித்த இந்தப் படத்தின் கதையை ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதியிருந்தார். இந்தப் படத்தில் விக்ரம், ரம்பா ஆகியோரும் நடித்திருந்தனர்.