நிவின் பாலி, அதிதிபாலன் நடித்திருக்கும் படவெட்டு திரைப்படம் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி திரைக்கு வந்தது. தற்போது இந்தப் படம் நெட்ப்ளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. சமகால அரசியலை விமர்சித்து எடுக்கப்பட்ட குருதி, நாரதன், ரண்டு, ஜன கன மன படங்களின் வரிசையில் படவெட்டும் இடம் பிடிக்கிறது.இந்தியாவில் தேசிய, கம்யூனிஸ பிராந்திய பின்னணிகளில் கட்சிகள் செயல்பட்டு வந்த நிலையில், அவைகளுக்கு மாற்றாக வளர்ச்சியை முன்னிறுத்தி புதியதொரு அரசியல் பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் உரக்கப் பேசப்பட்டது.
ஏற்கனவே உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அரசுகளின் போதாமையின் இடைவெளியில் புகுந்து, அவற்றின் குறைகளை பிரதானப்படுத்தி, வளர்ச்சியை முதன்மைப்படுத்தி புதியதொரு கோஷம் இந்தியாவில் ஒலிக்கத் தொடங்கியது. எளியவர்களை குறி வைத்து வளர்ச்சி என்னும் பகட்டை முன்வைத்து முன்னோக்கி நகர்ந்த இந்த கோஷம் எப்படி மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு அன்னியர் கையில் ஒப்படைக்கும் வேலையை செய்கிறது என்பதை படவெட்டு திரைப்படம் காட்டுகிறது.
சித்தியின் உழைப்பில் ஒழுகுகிற வீட்டில் வாழ்ந்துவரும் நிலையில், வேலைக்குப் போகாமல் சும்மா வீட்டிலிருக்கும் ரவியை காரணம் காட்டி பஞ்சாயத்தின் அரசு உதவி அவர்களுக்கு கிடைக்காமல் போகிறது. தனது கட்சியை வளர்க்க நினைக்கும் குய்யாலி இதை பயன்படுத்தி, ரவியின் வீட்டை புதுப்பித்து தருகிறான். இது குய்யாலி கட்சியின் வீடு என சிமென்டில் ஒரு நினைவுச்சின்னத்தையும் வீட்டு முன்பு நிறுவுகிறார்கள். இது ரவியின் சோம்பேறித்தனத்தின் அடையாளமாக ஊராரின் கேலிக்கு ஆளாகிறது.
புதிய திட்டங்களின் பெயரில் குய்யாலி விவசாயிகளின் நிலங்களை அபகரிக்க திட்டமிடுகிறான். ரவி அதனை எதிர்த்து கேள்வி கேட்கிறான். குய்யாலி ஒரு ராட்சஸனைப் போல அந்த கிராமத்தையே விழுங்க முற்படுகையில் ரவியின் எதிர்ப்பு அவனது திட்டத்தை முடக்கிப் போடுகிறது.திட்டங்கள், உதவிகள் என்பவை மக்கள் வரிப்பணத்தில் அரசுகள் செய்பவை. அந்த உதவிகளை மக்களிடம் அதிகாரம் செலுத்தும் உரிமையாக அரசியல் கட்சிகள் நினைப்பதுண்டு. வளர்ச்சி கோஷத்தை முன்வைக்கும் இந்த புதியவர்கள், நினைப்பதுடன் அதனை செயல்படுத்தவும் செய்கிறார்கள்.
மக்களை அவர்கள் தங்களின் அடிமைகளாகவும், உடமைகளாகவும் கருதுகிறார்கள். இவர்கள் போடும் ரொட்டித் துண்டுகள் தங்களை அடிமைகளாக்கும் தூண்டில் என்பதை இன்றுவரை பெரும்பான்மையினர் உணரவில்லை. அந்த அபாயத்தை எந்த கட்சி சாயலும் இன்றி வலுவாக படவெட்டு திரைப்படம் சொல்கிறது.
சோம்பேறியாக வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் இளைஞனாக நிவின் பாலி நடித்துள்ளார். பக்கத்து வீட்டு ஷைன் டாம் சாக்கோவுடன் அவருக்கு இருக்கும் உரசல், அதிதி பாலனை முன்வைத்து கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் சண்டை என நிவின் பாலி ஊராரிடமிருந்து அந்நியப்பட்டு இருப்பதை காட்சிப்படுத்தி, பிற்பகுதியில் அவற்றை இணக்கமாக முடித்திருப்பது சிறப்பு.
அதிகாரத் தோரணை, அகம்பாவப் பார்வை என குய்யாலி கதாபாத்திரத்தை சிறப்பித்திருக்கிறார் ஷம்மி திலகன். அதிதி பாலனுக்கு அதிகம் பேசாமல் உணர்ச்சிகளை முகத்தில் காட்டுகிற கதாபாத்திரம். அவரது தந்தையாக வரும் இந்திரன்ஸ், ஒரேயொரு காட்சியில் வரும் சன்னி வெயின், நிவின் பாலியின் சித்தியாக வரும் ரெமி சுரேஷ் என அனைவரும் நிறைவாக நடித்துள்ளனர். படவெட்டின் இரு கண்கள் ஒளிப்பதிவும், பின்னணி இசையும். சாதாரண காட்சியையும் அசாதாரணமாகக் காட்டுகிறது லிஜு கிருஷ்ணாவின் இயக்கம். பன்றி தாக்கி இறந்தவரை வைத்து அரசியல் மைலேஜ் தேடும் ஷம்மி திலகன் தமிழகத்திலுள்ள அரசியலையும், சில அரசியல் தலைவர்களையும் நினைவுப்படுத்துகிறார்.
கடுகளவு உதவி செய்து, கார்ப்பரேட் கைகளில் மக்களை ஒப்படைக்கும் வளர்ச்சி அரசியலை அம்பலப்படுத்துவதுதான் படத்தின் பிரதான நோக்கம். நிவின் பாலிக்கு ஊரில் உள்ளவர்களுடன் இருக்கும் பிணக்கும், சண்டையும் சுவாரஸியமாகச் சொல்லப்பட்டாலும் மெயின் கதையின் ஓர்மையை அவை பாதிப்பது படத்தின் மைனஸ். இதனால், ரவியைப் பற்றிய கதையா, ரவியை மையப்படுத்தி அரசியலை விமர்சிக்கும் கதையா என்பதில் குழப்பம் ஏற்படுகிறது.பல குறைகள் இருப்பினும் சமகால வளர்ச்சி அரசியலை தோலுரித்தவகையில் படவெட்டு முக்கியமான படம்தான்.